Sunday, November 30, 2014

புத்தகம் - ஒரு ஜன்மம்

ஒரு புத்தகத்தின்
முதல் எழுத்தின் ஆரம்பம்
ஒரு நெருப்பை எனக்குள்
பற்ற வைக்கிறது.
எழுத்தின் பின் எழுத்தாக
பல எழுத்துக்கள்
வார்த்தைகளாக வரிகளாக சேர்ந்து
என்னுள் தீ வளர்க்க ஆரம்பிக்கிறது...
அவ்வப்போது
எனக்குள் நகரும் மௌனம்
அந்த தீயை மென் மேலும்
பெரிதாக்க ஆரம்பித்தது.
நானும் அதனுள் சுடர் விட்டு
எரிய ஆரம்பித்தேன்
புத்தகத்தின் கடைசி எழுத்தில்
வந்து நிற்கும் போது - நான்
இன்னொரு ஜன்மத்தில்
புதிதாக பிறந்த குழந்தை
போல் வீறிட்டு அழ ஆரம்பிக்கிறேன்.

Monday, November 17, 2014

மொழியின் சப்தம் ???

இயற்கையின்
சத்தங்களிலிருந்து
பிறந்ததுதான் மொழி
என்று நினைக்கிறேன்...
ஆனால் மொழியின்
சத்தங்களில் இங்கே
மேலோங்கியதான
சண்டை சச்சரவுகள் மட்டுமே - என்
நினைவுகளாய் போனதால்தான்
கொஞ்சம் கூட சத்தம் எழுப்பாத
இயற்கையின் இருப்பிடத்தை தேடி
அலைந்து கொண்டிருக்கிறேன் !!!

காத்திருப்பின் அர்த்தம்

ஒரு காத்திருப்பின் அர்த்தம்
அதன் நீண்டதொரு மௌனத்தில்
உரக்க சொல்லப்படுகிறது...
ஆனால் அது உரக்க சொல்லப்பட்டு
வெகு காலத்திற்கு பின்-தான்
இந்த உலகத்தின் பார்வைக்கு
வைக்கப்படுகிறது...
கொஞ்சம் உற்று நோக்கினால்
இந்த உலகம் என்பதே
பல நூறு வருடங்களின் காத்திருப்பின்
மௌனத்தில்தான் உருவாக்கப்பட்டதோ !!!

Friday, November 7, 2014

பயணத்தின் பக்கங்கள்

என்னுள் இருந்து
எனக்குள்ளாக எனக்கான
வழித்தடத்தில்
பயணிக்க ஆரம்பித்தேன்...
அங்கங்கே குன்றுகள்...
மலைகள்... அருவிகள்... ஆறுகள்..
காடுகள்...
நான் பரவசமாகிறேன்...
தடதடவென
தான் தோன்றித்தனமாய்
தவிப்புடன் தகிப்புடன் அலைகிறேன்...
குன்றில் ஏறி கூவுகிறேன்
அருவியில் நின்று அழுகிறேன்...
காடுகளில் சுற்றி கரைகிறேன்...
பின் பயணம் முடித்து வீடு
திரும்புதல் என முடிவெடுத்து
கண்களை திறந்தேன்...
என்னை சுற்றியவர்கள்
கைகளை பிசைந்தவாறு
நின்று கொண்டிருக்கிறார்கள்...
கண்களில் அச்சத்தோடு
கனன்று கொண்டிருக்கிறார்கள்..
என் முன்னால் ஒரு
பைத்தியத்திற்கு வைத்தியம்
செய்யும் டாக்டர் ஒருவர்
நின்று கொண்டிருக்கிறார்.
இப்போது இந்த உலகத்தின்
ஒரு பயணத்திற்காக
தயார் செய்யப்படுகிறேனோ... ???

மௌன மலை

மௌனத்தின் பிரதான
மலை உச்சியில்
உட்கார்ந்திருக்கிறேன்...
அங்கிருந்து பெருக்கெடுத்த
நினைவுகளின் ஆறுகளோடு
அடித்துச் செல்லப்படுகின்றன
மன அழுத்தங்களும் அழுக்குகளும் !!!

Wednesday, November 5, 2014

கம்பீரமான கடவுள்கள்

கருவூலத்தில் கம்பீரமாய்
வீற்றிருப்பது கடவுள் என்று
சொன்னார்கள்...
கைதட்டி கூப்பிட்டு பார்த்தேன்
திரும்பினார்கள்...
என்னை சுற்றியுள்ள
மனிதர்கள் !!!

யாரோ ஒருவனாய் நான்

யாரோ ஒருவன்
என்னிடம் வருகிறான்...
என் முன்னால்
நிற்கிறான்... 
இமைக்காமல் என்னை
பார்க்கிறான்...
என்னுள் ஊடுருவி எனக்குள்
உதிர்த்த அவனுக்கான
நினைவை மீட்டெடுக்கிறான்.
எனக்குள் தன்னை
கண்டெடுத்த பின் மெல்ல
புன்னகைத்து என்னை கடக்கிறான்...
நான் மௌனமாக யாரோ
இன்னொருவன் வருகைக்காக
காத்திருக்க ஆரம்பிக்கிறேன் !!!

யாருக்கோ

யாருக்கோ நான் 
எழுதியதை போல் நினைத்து
நீ நாளும் படித்துக் கொண்டிருக்கிறாய்
உனக்கான என் கவிதைகளை !!!

பேச வேண்டியன பேசியன

உன்னிடம் இதைப் பற்றி
பேச வேண்டுமென - பலமுறை
நினைத்திருக்கிறேன்.
சில நேரம் நீயும் அதையேதான்
எதிர்பார்ப்பது போல்
என்னை எதிர்நோக்குகிறாய்...
உன் பார்வையின் புரிதலில்
என் சொற்களும் உன் சொற்களும்
ஒன்றையொன்று பரஸ்பரம்
விசாரித்துக் கொண்டன...
சொற்கள் அல்லாத சொற்கள்
அங்கே பிறந்தன...
உன்னையும் என்னையும்
அதன் அர்த்தங்களாக்கின...
உன்னிடம் சொல்லப்பட வேண்டிய
என் வார்த்தைகள் - அந்த
அர்த்தங்களில் மெல்ல
நடனம் ஆட ஆரம்பித்தன

Tuesday, November 4, 2014

இரவின் கவிதையொன்று

இருட்டில் அலையும்
என் நினைவுகளையெல்லம்
திரட்டி ஒரு கவிதை
எழுதிக் கொண்டிருக்கிறேன்...
ஒரே ஒரு நம்பிக்கைதான்...
அது வெட்ட வெளிச்சத்தில்
மிக மிக சத்தமாக படிக்கப்படும் என...

வந்ததும் தங்கியதும்

எங்கிருந்து எது
வந்ததென தெரியவில்லை...
ஏதோ ஒன்று வந்துவிட்டது...
தங்கிவிட்டது...
அதை வைத்துக் கொள்வது
விட்டு விடுவது மட்டும்
என் கையில் என்றால்
என்ன நான் செய்வேன்...

பெருவெளியும் மனமும்

நீண்டதொரு இந்த பெருவெளிக்கும்
அதைவிட நீண்டதொரு என் மனதிற்கும்
இடைவெளி என்பதே இல்லை...
என்னை சுற்றிய இந்த பெருவெளி
என் முன் இங்கே வாழ்ந்தவர்களின்
மனமாக இருந்திருக்குமோ...
என் மனம் ஒருவேளை
என் பின் வாழ்பவர்களின்
பெருவெளியாக மாறிப் போகுமோ...
சுற்றிய பெருவெளி
எனக்குள் உருவாக்குவது
என் மனமா?
என் போன்ற மனங்கள் ஒன்றினைந்து
உருவாக்கியது
இந்த பெருவெளியா...
ஆனால் இரண்டிற்கும் இடைவெளி
எதுவுமில்லை என்பது மட்டும்
எனக்கு சத்தியமாகத் தெரியும்...

வினையில்லா எதிர்வினை

எதிர்வரும் ஒவ்வொரு நொடியும்
புதிராக இருக்கிறதோ இல்லையோ
புதிதாக இருக்கிறது...
ஒவ்வொரு வினைக்கும் சமமான
எதிர்வினை உண்டென்று நியூட்டன் சொன்னான்...
எந்த வினையும் புரியாமல்
எந்த வினாவும் எழுப்பாமல்
எதிர்வினை நிகழ்ந்தால்
அதற்கு நியூட்டன் என்ன பெயர்
வைத்திருப்பான்... ???

யாவும் யாவுமாக

எனக்குள் சில சமயம்
ஒரு புலி உறுமுகிறது
ஒரு ஆடு துள்ளுகிறது
ஒரு பறவை சிறகடிக்கிறது
ஒரு நாய் குலைக்கிறது
ஒரு குயில் கூவுகிறது
ஒரு பூனை என் மூளை செல்களை
சுற்றி சுற்றி ஊர்வலம் வருகிறது
ஒரு யானை தன் தும்பிக்கையை
உயர்த்தி பிளிருகிறது
ஒரு சிங்கம் நடப்பன -யாவற்றையும்
பார்த்து கர்ஜிக்கிறது...
இப்படி மிருகங்கள் என
வகைபடுத்தப்பட்ட யாவையும்
எனக்குள் கண்டறிந்த நான்...
எனக்குள் நகரும் ஒரு மனிதனை
கண்டறிய சந்தர்ப்பம் வாய்க்கவில்லை...

எப்போது மீள்வேன்???

நிலையில்லா மௌனத்தின்
சிறகுகளோடு எதிர்காற்றில் பறக்கிறேன்...
ஒரே ஒரு முறை ஏதோ ஒன்றில்
முட்டி மோதி கீழே விழுந்து
செத்து தொலைந்து பின் மீள ஆசை...
எதிரே புன்னகையுடன் நீ வந்தாய்...
பட்டென உன் காதலில்
முட்டி மோதி கீழே விழுந்து
கொஞ்சம் கொஞ்சமாக செத்து 
பின் தொலைந்தே விட்டேன்...
எப்போது மீள்வேன் ???

அவளை போன்ற ஒரு முகம்

அவளை போன்ற ஒரு முகத்தை
அடிக்கடி பார்க்க நேரிடுகிறது...
ஏதாவது பேசலாம் என்று
நினைத்தால் அவளுக்கு என்னை போன்ற
ஒரு முகம் அடிக்கடி பார்க்க
நேரிடுகிறதா என தெரியவில்லை...
ஏதோ ஒன்று எப்போதும்
தொடர்பில்தான் இருக்கிறது...
அவளை போன்ற ஒரு முகத்தை
பார்க்கும் ஒவ்வொரு முறையும்
எதுவும் பேசாமல் என்னை நானே
அமைதிபடுத்திக் கொள்கிறேன்.
காரணம்...
பிற்பாடு வரப்போகும்
காதல்காலமொன்றில்
ஏதேச்சையாக அவளும்...
தெரியாத்தனமாக நானும்...
எங்கோ எப்படியோ
சந்திக்கப் போகிறோம் என...
மீண்டும் தோன்றுகிறது...
ஏதோ ஒன்று எப்போதும்
தொலைக்க முடியாத - தொடர்பில்தான்
இருந்து கொண்டிருக்கிறது.
காதலில் காத்திருத்தலை தவிர வேறு
காரணம் என்ன சொல்ல முடியும் ???ர்

ஓடிக் கொண்டேயிருக்கிறேன் !!!

இன்னும் கொஞ்ச தூரம்தான்...
எனக்கான கடைசி பகுதியில்
ஓடிக் கொண்டிருக்கிறேன்...
கால்கள் பின்னுகின்றன...
கைகள் காற்றில் தன் இஷ்டம்
போல் பறக்கின்றன...
கண்கள் தன் இலக்கை நோக்கிய
பிம்பத்தை சிறைபடுத்த முயன்று
தவித்துக் கொண்டிருக்கிறது...
வெளியே நான் ஓட என் உடலின் உள்ளே
இரத்தம் என்னைவிட வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
மெல்ல மெல்ல தோய்ந்து
என் ஓட்டம் நிற்கும் நிலையில்
உன் ஒரேயொரு ஓரப் பார்வை
என் மேல் வந்து விழுகிறது...
இதற்கு மேல் நான் ஓடினேன்
என்றா சொல்ல வேண்டும்...
இலக்கை அடைந்த பின்னும்,
வெற்றிய எட்டிய பின்னும்
ஓடினேன்... ஓடினேன்... இன்று வரை ஓடிக் கொண்டேயிருக்கிறேன்...

Monday, August 25, 2014

இருப்பதும் இல்லாததும் !!!

நிறமற்றது எதுவென
நிறமுள்ளவற்றை பார்த்தேன்...
பலமற்றது எதுவென
பலமுள்ளவற்றை பார்த்தேன்...
நிலையற்றது எதுவென
நிலையுள்ளவற்றை பார்த்தேன்
இப்படி
இல்லாததை தேடி
இருப்பதில் அலைகின்றேன்...
இருப்பதை நான் தொலைத்த அதே கணம்
இல்லாததும் தொலைந்து போகும்
நிலை ஏனோ ???

மௌன பேரலை

நான் பேசாமல் இருக்கின்றேன்
என்பது என் மௌனம் அல்ல... 

உள்ளுக்குள் உனக்கான 
ஆயிரம் வார்த்தைகள் தன்னை பயிற்சி 
செய்து பார்த்துக் கொண்டிருக்கின்றன... 

அது என்னவோ 
என்ன மாயமோ தெரியவில்லை
உன்னைப் பார்த்ததும் 
அத்தனை வார்த்தைகளும்
என்னுள் ஓடி ஒளிந்து கொள்கின்றன...

இவற்றுள் தப்பித் தவறி தைரியம் பெற்ற
அந்த மூன்றெழுத்து வார்த்தைகளும்
உன் ஒரே ஒரு பார்வையில்
செயலற்றுப் போகின்றன

- அதன் பின்

உன் ஒரே ஒரு ஒற்றை புன்னகையில்
என் அத்தனை வார்த்தைகளையும் வீழ்த்தி
மீண்டுமொரு மௌன பேரலையை எனக்குள்
உருவாக்கிவிட்டு நகர்கிறாய்...

மின்னலும் மழையும் இடியும்

என் வாழ்வில் நான் பார்த்த
முதல் மழை, முதல் இடி, முதல் மின்னல்
எப்போது? 

யோசித்தால் மழையும் இடியும் மின்னலும்
மனதிற்கு மிக நெருக்கமானவையாகவே
இருக்கின்றன... 

அறிவுக்கு அப்பாற்பட்டு, அடையாளங்களுக்கு
அப்பாற்பட்டு உள்ளார்ந்து நின்று பார்த்தால்
எப்போதும் ஏதோ ஒரு வடிவத்தில்
நான் இங்கு இருந்து கொண்டிருப்பதாகவே
தோன்றுகிறது

நாம் யாவரும் எப்போதும் எந்த நிலையிலும்
உய்த்துணராத ஏதோ ஒரு தொடர்பில்தான் எல்லாம்
நிகழ்ந்து கொண்டிருக்கின்றன...

யாருடனோ பேசுவது போல் !!!

வெகு நேரமாய்
உன்னை பார்ப்பதற்காய்
நின்று கொண்டிருக்கிறேன்...
நீயும் வந்தாய்... - எனக்கெதிரே 
சற்று தள்ளி நின்றாய்...
என்னைப் பார்த்துக் கொண்டே
அங்கே யாருடனோ பேச ஆரம்பித்தாய்...
அவ்வப்போது என்னை தீண்டிய
உன் பார்வையோ - என்னுள்
ஆயிரமாயிரம் மின்வெட்டுக்களை
விட்டு விட்டு வெட்டியது...
சத்தியமாகச் சொல்லடி..
யாருடனோ பேசுவது போல்
என்னிடம் அப்படி என்னதான்
பேசிக் கொண்டிருக்கிறாய்... ???

Sunday, August 24, 2014

எல்லாம் எல்லாமே

பல சமயம்... 
நான் ஒரு உயிராய்... கல்லாய்... 
மரமாய்... செடியாய்... கொடியாய்... 
ஆனால் இப்போது எனக்கு 
மரத்தின் இலையாய் ஒரு அவதாரம்... 

விழுந்தேன்... ஒரு நதியில்... 
மிதந்தேன்... அதன் மடியில்... 
மரணத்திற்கு பின்னால் 
வரும் பயணம் போல் ஆனந்தமாய் மிதக்கிறேன்... 

தண்ணீரில் தவித்து, தத்தளித்து, விக்கித்து
என் மேல் ஏறிய ஒரு எறும்பு
மரணத்தின் பிடியிலிருந்து
தன்னை மீட்டுக் கொள்கிறது.

இலை படகாகும் போது
மனிதன் வானமாகக் கூடாதா என்ன ???

மௌனக்கூடு

கிடைத்தவன்
தப்பித்து விட்டோம் என நினைக்கிறான்
கிடைக்காதவன்
அதிஷ்டமில்லை என நினைக்கிறான்... 
இடைபட்டவன் இன்னும் கொஞ்சம்தான்
என நினைக்கிறான்... 

எது கிடைத்தால் இந்த மனம்
இன்புற்று மாயுமென 
தெரியாத - புரியாத தன்மைதான்
பரவி கிடக்கிறதோ !!!

இதற்கிடையில் மேற்கண்டவாறு
வியாக்கியானம் பேசும்
பற்பல வெங்காயங்கள் வேறு அலைகின்றன...

எனக்கோ இந்த ”மனம் என்றால்
என்ன?” என்பதே இன்னும் புரியவில்லை...

நான்கு சுவருக்குள் அடைந்து கொண்டு
தன்னிறைவடைந்தேன் எனச் சொல்லும்
வேடிக்கைகளை சற்று
நினைத்துப் பார்த்தால்
இந்த மனமென்று எண்ணப்படும்
மௌனக்கூடு ஒன்று வெற்றிடமாகிறது !!!

ஒரே நிலை

உன் மேலுள்ள கோபம்... 
நீ சிந்திய வெறுப்பு... 

இப்படி இன்னபிற... 

அனைத்தும் என் ஒரு துளி
மௌனத்தில் சுக்கு நூறாய் உடைகிறது... 

அந்த மௌனத்தின் அடுத்த நொடியில்
வெளிப்படும் புன்னகையில் கலந்திருக்கிறது
உனக்கான என் எல்லை கடந்ததொரு அன்பு...

பாவம் உன்னை என்ன செய்வது...

இரு வேறு நிலைகளாக
எண்ணப்படுகிற நானும் நீயும்
சில குறிப்பிட்ட
கால இடைவெளிக்குப் பிறகு
ஒரு நிலையாக மாறித்தானே ஆக வேண்டும் !!!

என்னுள் ஒரு பிம்பம்

என்னுள் எனக்கேயான பாதையில்
யாரோ என்னை அழைப்பது
போன்றதொரு பிம்பம்

யாரடா என்பது போல்
அதன் அருகில் செல்ல முற்படுகிறேன்... 

ஆனால் 
அந்த பிம்பம் என்னை விட்டு நகர்கிறது... 

நான் செல்ல செல்ல...
பிம்பம் நகர்ந்து கொண்டேயிருக்கிறது...

யாரென்று தெரிந்து கொள்ள நான் துடிக்கிறேன்...
யாரென்று தெரியாத தன்மையாய் பிம்பம் நகர்கிறது....

இப்படி துடிப்பதும், நகர்வதும்
நடந்து கொண்டேயிருக்கிறது....

பின்பொரு காலத்தில்
துடிப்பது நின்றுவிட்ட பொழுதில்
நகர்வதும் நின்றுவிடுவதாக சொல்லப்படுகிறது...

நான் துடிப்பது நின்றவுடன்
நான் நகர்வதை யான் எப்படி
பார்ப்பேன்?

இருந்தாலும் தொடர்கிறது...
நான் அருகே செல்ல செல்ல
பிம்பம் நகர்ந்து கொண்டேயிருக்கிறது..

அவனும் நானும்

அவனுக்கு எதுவும் தெரிய 
வாய்ப்பில்லை என்றெல்லாம் இல்லை... 

அவனுக்கு எது தேவை... எது தேவையில்லை
என பிரித்து பார்க்கும் பக்குவம் இல்லாமல் இல்லை...

அவனுக்கு ஏன் எப்படி என்ற
கேள்விகள் கேட்க தெரியாமல் இல்லை... 

அவனுக்கு இது அது எது வென
தனித்துப் பார்க்கும் தன்மையில்லாமல் இல்லை...

அவனுக்கு மொழியின் அடுக்குகளில்
வெளிப்படும் அர்த்தங்கள் புரியாதென்பதலாம் இல்லை...

ஆதியும் அந்தமும் என எப்போதும் அவனிருப்பதால்
அவனுக்கு எல்லாம் தெரியுமென்பதாய்
ஏற்படும் இருமாப்பு இருப்பதென்பதெதுவும் இல்லை...

அவனிடம் இருக்கும் ஒரே குறை,
ஒரே பிரச்சனை, ஒரே குழப்பம்... என்னவெனில்

அவனுள் இருக்கும் 

“அவன்” என்பதற்கும் “நான்” என்பதற்கும் 
இடையில் நூலிலையாய் வெளிப்படும்
இடைவெளி என்பதுதான் 
அவனுக்கு இன்றுவரை புரியவில்லை...
ஒரு முறைதான்... 
நினைத்து பார்க்கிறேன்... 
எனக்குள் இருக்கும் என்னை... 
ஒரே முறைதான் நினைத்து பார்க்கிறேன்... 

விடிவதற்குள் மெல்ல மெல்ல 
தொலைந்து போகின்ற இருளை 
போல் நகர்கிறது காலம்... 

வெளிச்சங்கள் யாவும் இருட்டை
விரட்டி விட்டு வெளிபடும் யாவற்றையும்
வெற்றிடமாக்குகின்றன...

எல்லாவற்றையும் நிரப்புகின்ற இருளோ...
புதிர் நிறைந்ததாய்...
பயம் நிறைந்ததாய்...
என்னவென்று புரியாததாய்...
அர்த்தங்கள் மிகுந்ததாய்...
எப்போதும் காட்சியளிக்கின்றன...

இப்போதும் எப்போதும்
நினைத்துக் கொண்டிருப்பேன்...
என் மனதை கவ்விக் கொண்டிருப்பது
வெற்றிடமான வெளிச்சங்களா...
விவேகமான இருளா...

என்னை கேட்டால்
இருளாகவே இருந்துவிட்டு போகட்டும் என்பேன்...
ஏதுமில்லாததாய் இருப்பதற்கு
யாவுமாய் இருப்பதே சாலச்சிறந்ததல்லவா

Saturday, January 4, 2014

அதிர்வுகளன்றி ஓர் அணுவும் அசையாது !!!

எதிர்பாராத ஒரு நேரத்தில் இன்றைய பொழுதில் நடக்கும் ஏதோ ஒரு நிகழ்வு நேற்று போல் இன்று இல்லை என்பதை மிக அழகாக சொல்லி விடுகிறது. ஆனால் ஒரு போதும் இன்று போல் நாளை இல்லை என்பதை இன்று நடக்கும் எந்த நிகழ்வும் எனக்கு சொல்வதேயில்லை.

தினசரி வாழ்வு எதையாவது ஒன்றை கற்றுக் கொடுத்துக் கொண்டேயிருக்கிறது. இன்றைய நாளின் ஓட்டத்தை துவங்கியவுடன் அதன் பாதையில் யார் யாரை நான் சந்திக்க போகிறேன் என்பதே மிகப் பெரிய புதிராக இருக்கும் நேரத்தில் அந்த சந்திப்பில் என்ன நடக்கப் போகிறதென்பதை நான் எவ்வாறு முன் கூட்டியே தெரிந்து கொள்ள முடியும். 

ஒருவேளை அப்படி முன் கூட்டியே தெரிந்து கொள்ளக் கூடிய சக்தி எல்லோருக்கும் இருந்தால் இந்த உலகத்தில் அடுத்த நிமிட பயணம் என்பது மிகப் பெரிய கேள்விக் குறியாகிப் போய்விடுமோ?

வருவதை வருவது போல் ஏற்றுக் கொள்ள வேண்டும். போவதை அதன் போக்கில் விட்டு விட வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் ???

ஏதோ ஒன்றின் அதிர்வு ஏதோ ஒன்றின் அழிவுக்கு வித்திடும். அதே நேரத்தில் ஏதோ ஒன்றின் உருவாக்கத்திற்கும் அது முக்கிய காரணமாகிறது. தினசரி என்னை நோக்கி படையெடுக்கப்படும் ஒவ்வொரு அதிர்வும் எனக்குள் பூகம்பமாக புரண்டு பின் அது மெல்ல மெல்ல ஒரு பூ பூப்பது போல் பரிணாம வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது.

பூகம்பமானால் என்ன? பூ பூப்பதானால் என்ன? இரண்டுமே அதிர்வுகள்தானே… அவன் இல்லாமல் கூட அசையும் அணு ஏதேனும் இருக்கலாம். ஆனால் அதிர்வுகளன்றி ஓர் அணுவும் அசையாது !!!

Wednesday, January 1, 2014

ஏதோ ஒன்று !!!


ஒவ்வொரு முக்கியமான தருணத்திலும் 
எனக்குள் இருக்கும் 
ஏதோ ஒன்று 
சரியெனச் சொல்கிறது... 
ஏதோ ஒன்று 
தவறெனச் சொல்கிறது... 

”ஏதோ ஒன்று” என்று 
சொல்லும் போதெல்லாம்
ஏன் அது ”நான்” -தான் 
என்று சொல்ல மறுக்கிறேன்... 

பிறந்ததிலிருந்து சந்தித்த மனிதர்களின் 
கூட்டு முயற்சிகளால்
உருவாக்கப்பட்ட நினைவுகளை 
தாங்கும் இந்த “நான்” 
எந்த நேரத்தில் எனது 
தனியொருவனின் 
அடையாளமாக தன்னை 
முடிசூட்டிக் கொண்டது ?