Friday, December 27, 2019

அவதாரம்

வெவ்வேறு காலத்தில்
நான் ஒரு உயிராய்... கல்லாய்...
மரமாய்... செடியாய்... கொடியாய்... - என
இந்த இயற்கையின் ஒவ்வொன்றாய்
அவதரித்து வெளிப்பட்டிருக்கிறேன்.
ஆனால் இப்போது எனக்கு
ஒரு மரத்தின் இலையென அவதாரம்...
காற்றுடன் ஊஞ்சலாடும் போது
விழுந்தேன்... ஒரு நதியில்...
மிதந்தேன்... அதன் மடியில்...
முதிர்ந்த மரணத்திற்கு பின்னால்
வரும் பயணம் இதுவென
ஆனந்தமாய் மிதக்கிறேன்...
எங்கிருந்தோ தண்ணீரில் தவித்து,
தத்தளித்து, விக்கித்து
என் மேல் ஏறிய ஒரு எறும்பு
மரணத்தின் பிடியிலிருந்து
தன்னை மீட்டுக் கொள்கிறது.
நதியின் பயணத்தில்
இருவரும் இணைந்தோம்...
எறும்பின் தவிப்பில், நதியின் அதிர்வில்,
நதிக்கரையின் அரவனைப்பில்
என்னுள் உணர்ந்தேன்... இங்கே
வெவ்வேறு காலம் என
ஒன்றில்லை - ஒரே காலத்தில்
இந்த இயற்கையின்
எல்லாமுமாக நான் தான்
அவதரித்திருக்கிறேன் என...

Thursday, September 5, 2019

மீண்டும் மீண்டும்

இந்தத் தீயில்
மீண்டும் மீண்டும் நின்று
கருகி சாம்பலாகிறேன்…
சாம்பலின் மணமாக
காற்றில் கரைகிறேன்…
காற்றை கடந்து வானத்தை
துளையிட முற்படும் போது – சில துளிகளின்
வலைகளில் சிக்கி நிலத்திற்குள்
சிறைபிடிக்கப்படுகிறேன்…
சிறையென்றால் கைதியல்ல…
இருளின் சிம்மாசனத்தில் – மௌனத்தின்
ராஜாவாகிறேன்…
எல்லாம் வல்லவனாக
ஏதுமற்றவனாக
எல்லையில்லாதவனாக
நிலைமாற்றமில்லாதவனாக
மீண்டும் மீண்டும் அவதரிக்க,
இந்தத் தீயில் மீண்டும் மீண்டும்
கருக துடித்துக் கொண்டிருக்கிறேன்…

மௌனவதம்

என் மௌனத்தின்
ஒவ்வொரு பக்கமும்
அமைதியால் நிரப்பப்பட்டிருக்கிறதென
நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய்…
ஆனால், உன் மீதான வன்மம்,
கோபம், சொல்லக்கூடாத
வார்த்தைகள் அனைத்தையும்
இந்த மௌனம் தன் வலிமையால்
ஒரு மாபெரும் அமைதியாக மாற்றி
அதை உன்னிடமும் கடத்துகிறது…
உனக்கு நான் நன்றி சொல்வேன்…
உன் கோபமான, உணர்ச்சி ததும்பும் வார்த்தைகள்
அனைத்தையும் தனக்குள் வாங்கி
கொன்று குவித்து, பின் அமைதி கலந்த
புன்னகையொன்றை வெளிப்படுத்தும் – என்
மௌனத்தின் வலிமையை நான்
கண்டுணர்ந்ததற்காக, - நான் மீண்டும் மீண்டும்
நன்றி சொல்லிக் கொண்டேயிருப்பேன்…

வரமும் சாபமும்

கடவுள்களின் சந்நிதிகளில் வரம்
கேட்டுவிட்டு வெளியில் வந்து
சாபங்களை அள்ளி அள்ளி வீசும்
போது அந்த சாபங்கள்
அனைத்தையும் வரமாக மாற்றும்
வல்லமையை மீண்டும் கடவுளிடம்
எதிர்பார்க்கின்ற சூழ்நிலையில்
நீ வரம் என
பெற்ற ஒன்றே
சாபமாக மாறும் போது
நீ சாபம் என வீசிய ஒன்று
வரமாகிவிடுமா என்ன?
மாபெரும் சாபமாகத்தானே உருவெடுக்கும்...

The Revenge

முன்னொரு காலத்தில்...

ஒருபுறம்
அரசவைகளில் மன்னனின்
வீரமும், சேவையும் பாடல்களாக பாடிய
புலவர்களுக்கோ சன்மானங்கள் குவிந்தன...

இன்னொரு புறம்
அந்தப்புரத்தில் மன்னனின்
போகப்பொருள்களாய் பெண்கள்
குவிந்திருக்க, தாகம் தீர்ந்தப்பின்
பெண்களோ குப்பைகளாய் குறுகினர்...

வருடங்கள் பல கடந்தன...

பின்னொரு காலத்தில்...

ஒரு புறம்
மன்னனின் வீரமும், தீரமும்
மேடைகளில் தீப்பொறி போல்
நாடகமாக்கப்பட, ஆணியடித்தது போல்
பார்த்துக் கொண்டிருப்பவர்களிடம்
வீரமும், விவேகமும் கடத்திய.
வீரபாண்டிய கட்ட பொம்மன், ராமன் போல்
வேடமிட்டவர்கள் காசுக்காக
கைகட்டி குறுகி நின்று கொண்டிருக்கிறார்கள்.

இன்னொரு புறம்
திண்டுக்கல் ரீட்டாவும், மதுரை மீனாவும்
மேடைகளை வசியப்படுத்தி, பார்ப்பவர்களை
பைத்தியமாக்கி, தன் காலடியில் கிடத்த
அவர்கள் மேல் பண மழை
குவிய தொடங்கியது...

வீரபாண்டிய கட்ட பொம்மனும், ராமனும்
பழிவாங்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்..


Saturday, October 7, 2017

முன்பொரு காலம்

இப்போதெல்லாம் நீ
முன்பு போல இல்லை
என்றாய்...
அப்போது என்னோடு இருக்கும்
எப்பொழுதிலும்
நீ முன்பைத்தான் நினைக்கிறாயா என்றேன்...

நீயோ ஆமாம் என்றாய்
உன் ஜிமிக்கிகள் சிரித்தன...
உன் கேசம் மெல்ல பறந்து
என் நெற்றியில்
அன்பாய் அலைந்தன...
நான் சொன்னேன்...
அப்படியென்றால் நீ என்னோடு
இருக்கும் இப்பொழுது கூட
என்றாவது ஒரு நாள் உன்னுடைய
முன்பு என்றதொரு காலத்துக்குள்
அடங்குமடி என்றேன்...
நீ சிரித்துக் கொண்டே
என் மேல் சரிந்தாய்
நான் சிலிர்த்துக் கொண்டே
மண் மேல் சரிந்தேன்....
இரவின் உஞ்சலில்
நம் காதல் மெல்ல
ஊஞ்சலாட ஆரம்பித்தது..

Monday, September 11, 2017

முரண்

உரக்க கத்தினேன்
அதை கேட்க வேண்டாதவர்களெல்லாம்
கவனித்து கேட்டார்கள்...
மனதிற்குள் மெதுவாக பேசினேன்...
கேட்க வேண்டியவர்களுக்கு - நான் பேசியது
மிக மிக தெளிவாக கேட்டது...

கண்டேன் பேயை

ஒரு பேயை பற்றி
தெரிந்து கொள்ள வேண்டுமென
அங்குமிங்கும் சுற்றி அலைந்தேன்...
இரவை துளைத்து
தூக்கத்தை தொலைத்து
நெளிந்தும், நீண்டும்,
நடந்தும் அவ்வப்போது
கொஞ்சம் விழிப்புணர்வுடனும்
இருந்து பார்த்தேன்...

சில இரவுகள்
சில பகல்கள்
பல முகங்கள்
கடந்து தூங்காமல் ஏதும்
கண்டறியாதவனாக என் வீட்டு
நிலை கண்ணாடியை கடந்த போது
கண்டேன் பேயை...

வெற்றுக் காகிதம்

எதுவும் எழுதப்படாத
ஒரு வெற்றுக் காகிதம்
ஒரு கதையை, கற்பனையை,
கவிதையை, இலக்கியத்தை,
குற்றத்தை, வரலாற்றை - தன் மேல்
சுமக்க காத்திருக்கிறது.
அது ஒரு வெற்றுக் காகிதம்தானே
என கடந்து செல்லாதீர்கள்...
அது உங்கள் காலத்தை தாண்டியும்
வாழ்கின்ற வல்லமை படைத்தது.

பயணம்

நான் போவதற்குள்
அந்த பேருந்து நகர ஆரம்பித்தது...
நான் வேகமாக நடந்தேன்...
அதுவும் வேகமெடுத்தது...
நான் ஓட ஆரம்பித்தேன்
அதுவும் ஓட ஆரம்பித்தது...
இடைவெளி கொஞ்ச தூரம்தான்...
எட்டிப் பிடிக்க வேண்டும்...
ஓடுகிறேன்... ஓடிக் கொண்டேயிருக்கிறேன்...

ச்சே.... நான் இரண்டு நிமிடம் முன்பாக
கிளம்பியிருக்கலாம்...
ச்சே.... அந்த பேருந்து அதன் குறிப்பிட்ட
நேரத்திற்கு இரண்டு நிமிடம் முன்பாக
கிளம்பாமல் இருந்திருக்கலாம்...