Monday, September 11, 2017

முரண்

உரக்க கத்தினேன்
அதை கேட்க வேண்டாதவர்களெல்லாம்
கவனித்து கேட்டார்கள்...
மனதிற்குள் மெதுவாக பேசினேன்...
கேட்க வேண்டியவர்களுக்கு - நான் பேசியது
மிக மிக தெளிவாக கேட்டது...

கண்டேன் பேயை

ஒரு பேயை பற்றி
தெரிந்து கொள்ள வேண்டுமென
அங்குமிங்கும் சுற்றி அலைந்தேன்...
இரவை துளைத்து
தூக்கத்தை தொலைத்து
நெளிந்தும், நீண்டும்,
நடந்தும் அவ்வப்போது
கொஞ்சம் விழிப்புணர்வுடனும்
இருந்து பார்த்தேன்...

சில இரவுகள்
சில பகல்கள்
பல முகங்கள்
கடந்து தூங்காமல் ஏதும்
கண்டறியாதவனாக என் வீட்டு
நிலை கண்ணாடியை கடந்த போது
கண்டேன் பேயை...

வெற்றுக் காகிதம்

எதுவும் எழுதப்படாத
ஒரு வெற்றுக் காகிதம்
ஒரு கதையை, கற்பனையை,
கவிதையை, இலக்கியத்தை,
குற்றத்தை, வரலாற்றை - தன் மேல்
சுமக்க காத்திருக்கிறது.
அது ஒரு வெற்றுக் காகிதம்தானே
என கடந்து செல்லாதீர்கள்...
அது உங்கள் காலத்தை தாண்டியும்
வாழ்கின்ற வல்லமை படைத்தது.

பயணம்

நான் போவதற்குள்
அந்த பேருந்து நகர ஆரம்பித்தது...
நான் வேகமாக நடந்தேன்...
அதுவும் வேகமெடுத்தது...
நான் ஓட ஆரம்பித்தேன்
அதுவும் ஓட ஆரம்பித்தது...
இடைவெளி கொஞ்ச தூரம்தான்...
எட்டிப் பிடிக்க வேண்டும்...
ஓடுகிறேன்... ஓடிக் கொண்டேயிருக்கிறேன்...

ச்சே.... நான் இரண்டு நிமிடம் முன்பாக
கிளம்பியிருக்கலாம்...
ச்சே.... அந்த பேருந்து அதன் குறிப்பிட்ட
நேரத்திற்கு இரண்டு நிமிடம் முன்பாக
கிளம்பாமல் இருந்திருக்கலாம்...

இருளும் ஒளியும்

ஒவ்வொரு இரவும் தன்னுள் பேரொளி கொண்ட சூரியனை
மறைத்து வைத்திருக்கிறது !!!

நான் - நீ

நானும் நீயும் வேறல்ல...
அப்போதும் என்னுடன் இருந்தாய்
இப்போதும் என்னுடன் இருக்கிறாய்
எப்போதும் என்னுடன் இருப்பாய்...
இந்த பிரபஞ்சத்தின் கடைசி உயிர்
இருக்கும் வரை நான் இருப்பேன்...
நீயும் என்னுடன் இருந்து கொண்டேயிருப்பாய்...

கடவுளை காப்பாற்ற

உழைப்பவன் கடவுள் சிலை
செய்து விற்கிறான்.
காசிருப்பவன் அந்த கடவுளை
விலைக்கு வாங்குகிறான்.
இரண்டும் இல்லாதவன் சாலையில்
ஊர்வலமாக சென்று பின்
கடலில் கரையும் சிலையை, sorry...
கடலில் கரையும் கடவுளை
வேடிக்கை பார்க்கிறான்.

கடலில் மெல்ல மெல்ல மூழ்கி
மூச்சு திணறி, தன் நிறமிழந்து
கண்கள் வெளிறிப் போய்
தத்தளித்து தவிக்கும் கடவுளை காப்பாற்ற
யாரும் முன்வரவில்லை.

குரல்கள்

எனக்குள் பல குரல்கள்
ஒலிக்கின்றன... - ஆனால்
நான் இன்னும் மௌனத்தையே
தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறேன்.