Sunday, November 30, 2014

புத்தகம் - ஒரு ஜன்மம்

ஒரு புத்தகத்தின்
முதல் எழுத்தின் ஆரம்பம்
ஒரு நெருப்பை எனக்குள்
பற்ற வைக்கிறது.
எழுத்தின் பின் எழுத்தாக
பல எழுத்துக்கள்
வார்த்தைகளாக வரிகளாக சேர்ந்து
என்னுள் தீ வளர்க்க ஆரம்பிக்கிறது...
அவ்வப்போது
எனக்குள் நகரும் மௌனம்
அந்த தீயை மென் மேலும்
பெரிதாக்க ஆரம்பித்தது.
நானும் அதனுள் சுடர் விட்டு
எரிய ஆரம்பித்தேன்
புத்தகத்தின் கடைசி எழுத்தில்
வந்து நிற்கும் போது - நான்
இன்னொரு ஜன்மத்தில்
புதிதாக பிறந்த குழந்தை
போல் வீறிட்டு அழ ஆரம்பிக்கிறேன்.

Monday, November 17, 2014

மொழியின் சப்தம் ???

இயற்கையின்
சத்தங்களிலிருந்து
பிறந்ததுதான் மொழி
என்று நினைக்கிறேன்...
ஆனால் மொழியின்
சத்தங்களில் இங்கே
மேலோங்கியதான
சண்டை சச்சரவுகள் மட்டுமே - என்
நினைவுகளாய் போனதால்தான்
கொஞ்சம் கூட சத்தம் எழுப்பாத
இயற்கையின் இருப்பிடத்தை தேடி
அலைந்து கொண்டிருக்கிறேன் !!!

காத்திருப்பின் அர்த்தம்

ஒரு காத்திருப்பின் அர்த்தம்
அதன் நீண்டதொரு மௌனத்தில்
உரக்க சொல்லப்படுகிறது...
ஆனால் அது உரக்க சொல்லப்பட்டு
வெகு காலத்திற்கு பின்-தான்
இந்த உலகத்தின் பார்வைக்கு
வைக்கப்படுகிறது...
கொஞ்சம் உற்று நோக்கினால்
இந்த உலகம் என்பதே
பல நூறு வருடங்களின் காத்திருப்பின்
மௌனத்தில்தான் உருவாக்கப்பட்டதோ !!!

Friday, November 7, 2014

பயணத்தின் பக்கங்கள்

என்னுள் இருந்து
எனக்குள்ளாக எனக்கான
வழித்தடத்தில்
பயணிக்க ஆரம்பித்தேன்...
அங்கங்கே குன்றுகள்...
மலைகள்... அருவிகள்... ஆறுகள்..
காடுகள்...
நான் பரவசமாகிறேன்...
தடதடவென
தான் தோன்றித்தனமாய்
தவிப்புடன் தகிப்புடன் அலைகிறேன்...
குன்றில் ஏறி கூவுகிறேன்
அருவியில் நின்று அழுகிறேன்...
காடுகளில் சுற்றி கரைகிறேன்...
பின் பயணம் முடித்து வீடு
திரும்புதல் என முடிவெடுத்து
கண்களை திறந்தேன்...
என்னை சுற்றியவர்கள்
கைகளை பிசைந்தவாறு
நின்று கொண்டிருக்கிறார்கள்...
கண்களில் அச்சத்தோடு
கனன்று கொண்டிருக்கிறார்கள்..
என் முன்னால் ஒரு
பைத்தியத்திற்கு வைத்தியம்
செய்யும் டாக்டர் ஒருவர்
நின்று கொண்டிருக்கிறார்.
இப்போது இந்த உலகத்தின்
ஒரு பயணத்திற்காக
தயார் செய்யப்படுகிறேனோ... ???

மௌன மலை

மௌனத்தின் பிரதான
மலை உச்சியில்
உட்கார்ந்திருக்கிறேன்...
அங்கிருந்து பெருக்கெடுத்த
நினைவுகளின் ஆறுகளோடு
அடித்துச் செல்லப்படுகின்றன
மன அழுத்தங்களும் அழுக்குகளும் !!!

Wednesday, November 5, 2014

கம்பீரமான கடவுள்கள்

கருவூலத்தில் கம்பீரமாய்
வீற்றிருப்பது கடவுள் என்று
சொன்னார்கள்...
கைதட்டி கூப்பிட்டு பார்த்தேன்
திரும்பினார்கள்...
என்னை சுற்றியுள்ள
மனிதர்கள் !!!

யாரோ ஒருவனாய் நான்

யாரோ ஒருவன்
என்னிடம் வருகிறான்...
என் முன்னால்
நிற்கிறான்... 
இமைக்காமல் என்னை
பார்க்கிறான்...
என்னுள் ஊடுருவி எனக்குள்
உதிர்த்த அவனுக்கான
நினைவை மீட்டெடுக்கிறான்.
எனக்குள் தன்னை
கண்டெடுத்த பின் மெல்ல
புன்னகைத்து என்னை கடக்கிறான்...
நான் மௌனமாக யாரோ
இன்னொருவன் வருகைக்காக
காத்திருக்க ஆரம்பிக்கிறேன் !!!

யாருக்கோ

யாருக்கோ நான் 
எழுதியதை போல் நினைத்து
நீ நாளும் படித்துக் கொண்டிருக்கிறாய்
உனக்கான என் கவிதைகளை !!!

பேச வேண்டியன பேசியன

உன்னிடம் இதைப் பற்றி
பேச வேண்டுமென - பலமுறை
நினைத்திருக்கிறேன்.
சில நேரம் நீயும் அதையேதான்
எதிர்பார்ப்பது போல்
என்னை எதிர்நோக்குகிறாய்...
உன் பார்வையின் புரிதலில்
என் சொற்களும் உன் சொற்களும்
ஒன்றையொன்று பரஸ்பரம்
விசாரித்துக் கொண்டன...
சொற்கள் அல்லாத சொற்கள்
அங்கே பிறந்தன...
உன்னையும் என்னையும்
அதன் அர்த்தங்களாக்கின...
உன்னிடம் சொல்லப்பட வேண்டிய
என் வார்த்தைகள் - அந்த
அர்த்தங்களில் மெல்ல
நடனம் ஆட ஆரம்பித்தன

Tuesday, November 4, 2014

இரவின் கவிதையொன்று

இருட்டில் அலையும்
என் நினைவுகளையெல்லம்
திரட்டி ஒரு கவிதை
எழுதிக் கொண்டிருக்கிறேன்...
ஒரே ஒரு நம்பிக்கைதான்...
அது வெட்ட வெளிச்சத்தில்
மிக மிக சத்தமாக படிக்கப்படும் என...

வந்ததும் தங்கியதும்

எங்கிருந்து எது
வந்ததென தெரியவில்லை...
ஏதோ ஒன்று வந்துவிட்டது...
தங்கிவிட்டது...
அதை வைத்துக் கொள்வது
விட்டு விடுவது மட்டும்
என் கையில் என்றால்
என்ன நான் செய்வேன்...

பெருவெளியும் மனமும்

நீண்டதொரு இந்த பெருவெளிக்கும்
அதைவிட நீண்டதொரு என் மனதிற்கும்
இடைவெளி என்பதே இல்லை...
என்னை சுற்றிய இந்த பெருவெளி
என் முன் இங்கே வாழ்ந்தவர்களின்
மனமாக இருந்திருக்குமோ...
என் மனம் ஒருவேளை
என் பின் வாழ்பவர்களின்
பெருவெளியாக மாறிப் போகுமோ...
சுற்றிய பெருவெளி
எனக்குள் உருவாக்குவது
என் மனமா?
என் போன்ற மனங்கள் ஒன்றினைந்து
உருவாக்கியது
இந்த பெருவெளியா...
ஆனால் இரண்டிற்கும் இடைவெளி
எதுவுமில்லை என்பது மட்டும்
எனக்கு சத்தியமாகத் தெரியும்...

வினையில்லா எதிர்வினை

எதிர்வரும் ஒவ்வொரு நொடியும்
புதிராக இருக்கிறதோ இல்லையோ
புதிதாக இருக்கிறது...
ஒவ்வொரு வினைக்கும் சமமான
எதிர்வினை உண்டென்று நியூட்டன் சொன்னான்...
எந்த வினையும் புரியாமல்
எந்த வினாவும் எழுப்பாமல்
எதிர்வினை நிகழ்ந்தால்
அதற்கு நியூட்டன் என்ன பெயர்
வைத்திருப்பான்... ???

யாவும் யாவுமாக

எனக்குள் சில சமயம்
ஒரு புலி உறுமுகிறது
ஒரு ஆடு துள்ளுகிறது
ஒரு பறவை சிறகடிக்கிறது
ஒரு நாய் குலைக்கிறது
ஒரு குயில் கூவுகிறது
ஒரு பூனை என் மூளை செல்களை
சுற்றி சுற்றி ஊர்வலம் வருகிறது
ஒரு யானை தன் தும்பிக்கையை
உயர்த்தி பிளிருகிறது
ஒரு சிங்கம் நடப்பன -யாவற்றையும்
பார்த்து கர்ஜிக்கிறது...
இப்படி மிருகங்கள் என
வகைபடுத்தப்பட்ட யாவையும்
எனக்குள் கண்டறிந்த நான்...
எனக்குள் நகரும் ஒரு மனிதனை
கண்டறிய சந்தர்ப்பம் வாய்க்கவில்லை...

எப்போது மீள்வேன்???

நிலையில்லா மௌனத்தின்
சிறகுகளோடு எதிர்காற்றில் பறக்கிறேன்...
ஒரே ஒரு முறை ஏதோ ஒன்றில்
முட்டி மோதி கீழே விழுந்து
செத்து தொலைந்து பின் மீள ஆசை...
எதிரே புன்னகையுடன் நீ வந்தாய்...
பட்டென உன் காதலில்
முட்டி மோதி கீழே விழுந்து
கொஞ்சம் கொஞ்சமாக செத்து 
பின் தொலைந்தே விட்டேன்...
எப்போது மீள்வேன் ???

அவளை போன்ற ஒரு முகம்

அவளை போன்ற ஒரு முகத்தை
அடிக்கடி பார்க்க நேரிடுகிறது...
ஏதாவது பேசலாம் என்று
நினைத்தால் அவளுக்கு என்னை போன்ற
ஒரு முகம் அடிக்கடி பார்க்க
நேரிடுகிறதா என தெரியவில்லை...
ஏதோ ஒன்று எப்போதும்
தொடர்பில்தான் இருக்கிறது...
அவளை போன்ற ஒரு முகத்தை
பார்க்கும் ஒவ்வொரு முறையும்
எதுவும் பேசாமல் என்னை நானே
அமைதிபடுத்திக் கொள்கிறேன்.
காரணம்...
பிற்பாடு வரப்போகும்
காதல்காலமொன்றில்
ஏதேச்சையாக அவளும்...
தெரியாத்தனமாக நானும்...
எங்கோ எப்படியோ
சந்திக்கப் போகிறோம் என...
மீண்டும் தோன்றுகிறது...
ஏதோ ஒன்று எப்போதும்
தொலைக்க முடியாத - தொடர்பில்தான்
இருந்து கொண்டிருக்கிறது.
காதலில் காத்திருத்தலை தவிர வேறு
காரணம் என்ன சொல்ல முடியும் ???ர்

ஓடிக் கொண்டேயிருக்கிறேன் !!!

இன்னும் கொஞ்ச தூரம்தான்...
எனக்கான கடைசி பகுதியில்
ஓடிக் கொண்டிருக்கிறேன்...
கால்கள் பின்னுகின்றன...
கைகள் காற்றில் தன் இஷ்டம்
போல் பறக்கின்றன...
கண்கள் தன் இலக்கை நோக்கிய
பிம்பத்தை சிறைபடுத்த முயன்று
தவித்துக் கொண்டிருக்கிறது...
வெளியே நான் ஓட என் உடலின் உள்ளே
இரத்தம் என்னைவிட வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
மெல்ல மெல்ல தோய்ந்து
என் ஓட்டம் நிற்கும் நிலையில்
உன் ஒரேயொரு ஓரப் பார்வை
என் மேல் வந்து விழுகிறது...
இதற்கு மேல் நான் ஓடினேன்
என்றா சொல்ல வேண்டும்...
இலக்கை அடைந்த பின்னும்,
வெற்றிய எட்டிய பின்னும்
ஓடினேன்... ஓடினேன்... இன்று வரை ஓடிக் கொண்டேயிருக்கிறேன்...