Thursday, March 21, 2013

சென்னப்பட்டனம் முதல் சென்னை வரை. .



நம் உலகத்தின் பாதை நம் வீட்டிலிருந்து துவங்குகிறது. வீட்டின் கலாச்சாரம் நம் ஊரை செப்பனிடுகிறது. நமது சுவாசம் நம் ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கிறது. நமது எண்ணங்கள் நம் ஊர் முழுவதும் சிதறிக் கிடக்கின்றன. நாம் வசிக்கும் ஊரின் எல்லா திசைகளிலும் நம் உணர்வுகள் தன்னை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கிறது. மொத்தத்தில் நாம் வசிக்கும் ஊர்தான் நம்மை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறது. 

ஆனா பாருங்க நாம எந்த ஊர்ல வசிக்கிறோமோ அந்த ஊரப் பத்தி தெரிஞ்சி வச்சிக்கறதுல்ல…

அதாங்க… இருக்கறத விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசைப் படறது மாதிரி – நம்ம ஊரப் பத்தி தெரிஞ்சுக்காம எங்கியோ நம்ம கலாச்சாரத்துக்கு அப்பாற்பட்டு, மொழிகளுக்கு அப்பாற்பட்டு இயங்கிகிட்டு இருக்குற இன்னொரு ஊரப்பத்தி தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கோம். அதுவுமில்லாம யாரோ சொல்றத கேட்டுட்டு, பல புத்தகங்கள்ல படிச்சிட்டு அந்த ஊருக்கு போறதுக்காக ஏக்கத்தோட அலைஞ்சிட்ருக்குறோம்…

எப்பவுமே இக்கரைக்கு அக்கரை பச்சைதானேன்னு நீங்க உங்களுக்குள்ளாவே முணுமுணுக்கறது எனக்கு கேக்குது.. இருந்தாலும் இக்கரைய பத்தி தெரிஞ்சுக்கணும்ல…

பொதுவா இப்பலாம் நாம சென்னைய ரொம்ப செல்லமா சிங்காரச் சென்னைன்னு சொல்வோம். ஆனா அதுக்கு முன்னாடி இந்தச் சென்னைக்கு என்னென்ன பெயர் இருந்துச்சின்னு உங்களுக்குத் தெரியுமா… இதோ அதோட வரலாற கொஞ்சம் பாப்போம்.

சென்னப்பட்டனம் உருவான கதை… 
பொதுவா சென்னையை தமிழின் தலைநகரம்னு சொல்லலாம். எத்தனையோ மொழிகள் வந்தாலும் சரி, எத்தனையோ கலாச்சாரங்கள் இவ்விடத்தில் வந்து பஞ்சம் பிழைப்பது போல் தஞ்சமைடந்தாலும் சரி, சென்னை என்றவுடன் தமிழ் மொழியும், தமிழ் கலாச்சாரமும்தாங்க முன்னோங்கி நிற்கும்.

நாமெல்லாம் இன்னிக்கு சில நேரம் ஆர்வமா, சில நேரம் அன்பா, சில நேரம் இரைச்சலா, சில நேரம் எரிச்சலா, பல நேரம் பிரமிப்பா பார்த்துக் கொண்டிருக்கிற இந்த சென்னை தன்னை உருவாக்கிக் கொள்ளும் காலகட்டத்தில் ஒரு சிறிய கிராமமாக இருந்ததென்றால் அது உங்களுக்கெல்லாம் ஆச்சரியமான ஒன்று.

நம்மால் செல்லமாக அழைக்கப்படும் இந்த சிங்காரச் சென்னை ஆகஸ்ட் 22, ஆண்டு 1639 ஆண்டு தன்னை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கிறது. அன்றுதான் அய்யப்பன் மற்றும் வேங்கடப்பன் என்பவர்கள் கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ்டே மற்றும் கோகன் என்பவர்களிடம் அவர்கள் காலத்தில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை உள்ள இடத்தை மானியமாக வாங்கிக் கொண்டதாக பதிவுகள் கூறுகின்றது.

அந்த காலகட்டத்தில் இந்த செயிண்ட் ஜார்ஜ் கோட்டை உள்ள பகுதி சென்னப்பசவ நாயக்கன் என்பவரால் ஆண்டு வரப்பட்டது. இந்த சென்னப்பசவநாயக்கனின் புதல்வர்கள்தான் அய்யப்பனும், வேங்கடப்பனும். அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவர்களின் தந்தை பெயரின் நினைவாக இந்தக் கோட்டையின் வடக்கே இருக்கும் பகுதிகள் சென்னப் பட்டணம் என்று அழைக்கப்பட்டது.

சென்னப் பட்டணம் – சென்னப்பசவ நாயக்கன் என்பவரின் பெயரிலிருந்து உருவாக்கப்பட்டது.

அன்றிலிருந்து சுமார் ஓராண்டு கால கட்டத்தில் இந்த செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கிழக்கிந்தியக் கம்பெனிகாரர்களால் 1640 ஆண்டு ஏப்ரல் 23 ம் தேதி. கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் கோட்டையை மையமாக வைத்து ஆங்கிலேயர்களின் கால் சென்னை மண்ணில் ஆழமாக வேரூன்ற ஆரம்பித்தது. வந்தாரை வாழ வைக்கும் தமிழ் பண்பாடு வஞ்சகத்தில் வீழ்ந்த வருடம் என்று கூட இதை வர்ணிக்கலாம். இதன் பின்பு 1658 ஆம் ஆண்டு திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், சேத்துப் பட்டு, எழும்பூர் போன்ற கிராமங்கள் இதனுடன் இணைக்கப்பட்டன.

திருவல்லிக்கேணி


வத்தக்கொழம்பு வாசமும், சிக்கன் பிரியாணி வாசமும், காற்றில் பேச்சுலர்களின் சுவாசமும் திருவல்லிக்கேணியின் சாலைகளில் போட்டிப் போட்டுக் கொண்டு தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு போகும். புதிதாய் மேன்ஷன் தேடியலையும் கண்கள், எளிதாய் தன்னை இங்கே உள்ளடக்கிக் கொண்டு வாழ்க்கையை ஓட்டும் எண்ணற்ற ஆண்கள் என இந்த திருவல்லிக்கேணி தன்னை சற்று கொஞ்சம் வித்தியாசமாக அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறது.

திருவல்லிக்கேணி – அல்லிப் பூக்கள் நிறைந்த குளம் இருந்ததால் இது திரு – அல்லி – கேணி என்பதிலிருந்து மருவி திருவல்லிக்கேணி என்று அழைக்கப்பட்டிருக்கிறது. அதுவுமில்லாம நாலாயிர திவ்யப் பிரபந்தத்திலிருந்து ஒரு பாசுரம் திருவல்லிக்கேணியைப் பற்றி பதிவு செய்திருக்கிறது.

வேதத்தை வேதத்தின் சுவைப்பயனை விழுமிய முனிவர் விழுங்கும்
கோது இல் இன் கனியை நந்தனார் களிற்றை குவலயத்தார் தொழுதேத்தும்
ஆதியை அமுதை என்னை ஆளுடை அப்பனை ஒப்பவரில்லா
மாதர்கள் வாழும் மாடமாமயிலைத் திரு அல்லிக்கேணி கண்டேனே.

வைணவர்களின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த திருவல்லிக்கேணி இன்றைய பேச்சுலர்களின் புகலிடமாக திகழ்கிறது. எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பார்த்தசாரதி கோயில் இந்த திருவல்லிக்கேணியில்தான் இருக்கிறது. மகாகவி பாரதியாரின் இறுதிக்காலத்தை தன் மடியில் வைத்து தாலாட்டிய பெருமையும் இந்த திருவல்லிக்கேணிக்கு இருக்கிறது.

புரசை வாக்கம், சேத்துப்பட்டு, எழும்பூர்:


புரசைவாக்கம் என்பது புரசை பாக்கம் என்கிற பெயரிலிருந்து மருவி வந்திருக்கிறது. அன்று புரசைக் காடுகள் மண்டியிருந்த இடம் இன்று புரசைவாக்கமாக அழைக்கப்பட்டு வருகிறது. அன்றிலிருந்து இன்று வரை இந்த இடம் வணிகத்திற்கு சிறந்த இடமாகக் கருதப்படுகிறது.

சேத்துப்பட்டு என்கிற பெயரைக் கேட்டவுடன் மெட்ராஸூக்கு வரும் எல்லோரின் மனதிலும் இது என்னடா ஊர் ”சேத்துப்பட்டு” என்றதொரு கேள்வி தொக்கி நிற்கும். என்னங்க நான் சொல்றது சரிதானே…

நம்ம தமிழ் கலாச்சாரத்துல மிக முக்கியமான ஒண்ணு மண்பாண்டம். மண்பாண்டம்னு கேட்டதும் இப்பலாம் எங்கங்க மண்பாண்டம் கெடைக்குது, மண்ணால செஞ்ச சிலைகளும், அழகுப் பொருள்களும்தாங்க இருக்குன்னு நாம எல்லாரும் நமக்குள்ளயே வெட்டிப் பேச்சு பேசிட்டு போய்டுவோம். இதத்தான் பாரதியார் அன்னிக்கே சொன்னார்

”கூட்டத்தில் கூடி நின்று
கூவிப் பிதற்றலன்றி
நாட்டத்தில் கொள்ளாரடி கிளியே
நாளில் மறப்பாரடி” 


கூட்டத்துல எங்கியோ ஒலிக்கிற ஒரு குரலா பேசறதோட சரி. அதப் பத்தி நம்ம யோசிக்கறதேயில்ல. சரி அதவிடுங்க… அந்த காலத்துல மண்பாண்டம் செய்கிற குயவர்கள் தாங்கள் மண்பாண்டம் செய்வதற்காக இந்த சேத்துப்பட்டில் வந்து வண்டி வண்டியாக செற்று மண்ணை எடுத்துக் கொண்டு செல்வார்களாம். அதனால் இந்த இடத்திற்கு சேத்துப்பட்டு என்று பெயர் வந்துச்சின்னு சொல்றாங்க. கேக்கறதுக்கே சுவாரஸ்யமா இருக்குல்ல.

சரி வாங்க எழும்பூரப் பத்திப் பாப்போம். சேத்துப்பட்டு பெயர் வந்தக் கதை அப்டின்னா எழும்பூர் பெயர் வந்தக் கதை வேறமாதிரி இருக்குங்க. பொதுவா நம்ம பசங்க ரோட்ல போற அழகான பொண்ண ரொம்ப ஆர்வமா பாப்பாங்க.. ஆனா இதுல வேடிக்கை என்னன்னா அந்த பொண்ணு யாரப் பாக்குது அப்டிங்கறதுதானே ரொம்ப முக்கியமான விஷயம்.

அதுமாதிரி இந்த உலகத்துக்கே முக்கியமான ஒரு சக்தில - ஒளிக்கு அதிக பங்குண்டு. அந்த வகையில சூரிய ஒளி எல்லாத்துக்கும் ரொம்ப முக்கியம். காலைல நாம சீக்கிரம் எழுந்தோம்னா – நம்ம வாழ்க்கைல சீக்கிரம் எழுந்திரிக்கிறது கொஞ்சம் கஷ்டம்தான் – என்னிக்காவது தப்பித் தவறி சீக்கிரம் எழுந்திரிச்சிட்டோம்னா சூரியன் கொஞ்சம் கொஞ்சமா மேல வர்றதப் பாக்க நமக்கு உற்சாகமா இருக்கும். இப்டி பீச்சுல, மொட்ட மாடில, பால்கனில நின்னுகிட்டு உற்சாகமா எழுந்து வர்ற சூரியனைப் பாக்க நாம பிராயத்தனப்படுவோம்.

நாம மட்டுமா என்ன…. இந்த உலகத்துல உயிரா ஜனித்திருக்குற அத்தனை ஜீவராசிகளும், செடி மரம், கொடிகளும், நிலப்பகுதிகளும் சூரிய ஒளிக்காகத்தான் ஏங்கிட்டிருக்கும். ஆனா பாருங்க இவ்வளவு பேரும் நேரடியாவோ, மறைமுகமாகவோ ஏங்கிட்டிருக்குற அந்த சூரியன் மொதல்ல எங்க தன்னை உயிர்ப்பித்துக் கொள்கிறதென்பதுதான் ரொம்ப முக்கியம்.

அந்த வகையில பாத்தா நம்ம சென்னையில சூரியன் மொத மொதல்ல எழுகிற இடம்தான் எழும்பூர். தினமும் சூரியன் அந்த இடத்தில்தான் எழுகிறது என்பதற்காக அந்த இடத்திற்கு சூரியன் – எழும் – ஊர் என பெயர் வந்தது. நாளடைவில் அந்தப் பெயர் மாறி இன்று எழும்பூர் என அழைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த மாதிரி நம்ம சென்னைல நம்மள சுத்தியிருக்குற எல்லா ஊருக்கும் ஒரு சுவாரஸ்யமான கதை இருக்குங்க.


தொலைதூரமாக நீண்டு - இந்த
உலகத்தை சுற்றிக் கொண்டிருக்கும்
எனக்கான பாதைகள் - என்
வீட்டிலிருந்து ஆரம்பிக்கிறது.

எத்தனையோ யுகம் யுகமாய்
யார் யாரோ வாழ்ந்த சுவடுகள்
உணர்வுகள், எண்ணங்கள் – இந்த மண் வழி
என் மனதுக்குள் உயிர்பெறுகிறது…

சொல்லிப் புரியாத, கேட்டு அறியாத,
பார்த்து உணராத
பலவித எண்ணங்களை - எனக்குள்
இந்த நகரம் உயிர்ப்பிக்கிறது.

எனக்கான சில பதிவுகளை
இங்கே பதிவு செய்வதென நினைத்து
என்னையும் இந்த மண்ணோடு
தொலைக்கிறேன் - நான் வாழ்வதென்பது
நிச்சயமில்லையென்றாலும் - இந்த மண் 

என் நினைவுகளை சுமந்து வாழும் 
என்ற நம்பிக்கையுடன். . .

No comments: