பரதேசி - படம் பார்த்தேன்...
இப்படி ஒரு படம், நடப்புச் சூழலில் எங்கள் இயக்குநர் திரு பாலாவைத் தவிர வேறு யாரால் எடுக்க முடியும் என்ற கர்வம் எனக்குள்.
அது மட்டுமல்லாமல் இந்த வாழ்வியல் தடங்களை அனுபவித்தவர்களின் கதைகளை நான் ஏராளம் கேட்டிருக்கிறேன்.
என் பாட்டனார் (என் தந்தையின் தந்தை) இது போன்று தன் குடும்பத்தோடு 100 ரூபாய் கடனுக்காக 1940 வாக்கில் பிழைப்புத் தேடி இலங்கைக்கு புலம் பெயர்ந்திருக்கிறார். அங்குள்ள டீ எஸ்டேட்டில் பல தமிழ் குடும்பங்கள் பட்ட கஷ்டம் வேதனையுடன் அவர்கள் சொல்ல நான் சிறுபிள்ளையில் கேட்டிருக்கிறேன்... அதனுடைய ரணம் அப்போது எனக்குப் புலப்படவில்லை.
இந்தப் படம் பார்க்கும் போது அவர்கள் இந்த நாட்டை , தன் ஊரை, உறவை விட்டுப் போகும் போது அவர்களுக்கு எப்படி வலித்திருக்கும் என்பதை அதே வலியோடு இப்போது உணர்கிறேன்.
மீண்டும் திரும்பி வருவோமா, வரும் போது இந்த வறண்ட பூமியில் தாங்கள் வாழ்ந்த தடயங்கள் மிஞ்சியிருக்குமா, எஞ்சியிருக்குமா என்ற மருண்ட விழிகளுடன்-தானே பயணித்திருப்பார்கள்.
இன்று நம்மிடையே இருக்கும் எல்லா வசதிகளும், வாய்ப்புகளும் ஏதோ ஒரு வகையில் பலரின் துயரங்களைத் தாண்டித்தான் நம்மை வந்தடைந்திருக்கின்றன...
படம் பாருங்கள்...
நம் பயணிக்கக் கூடிய காலம்
இதோ இன்னும் கொஞ்ச தூரம்தான்...
ஆனால்
முடிவிலா தூரத்தை நோக்கி பயணிக்கப் போகும்
இந்த படைப்பை தவறாமல் ஒரு முறையாவது
பார்க்கக் கூடிய பாக்கியத்தைப் பெறுங்கள் !!!
No comments:
Post a Comment