தினசரி என் உலகத்தின் எல்லா இரவும் என்னுடன் தன்னையும் தொலைத்துக் கொண்டிருக்கிறது.
அதைத் தொடர்ந்த என் ஒவ்வொரு விடியலும் என் இன்னொரு உலகத்தின் புது முகம்.
அந்த புது முகம் எனக்கான புது அனுபவங்களோடு காத்திருக்க, நானோ நேற்றைய இரவின் மிச்சம் மீதியில் சுழன்றவாறு எழுந்திருக்கிறேன்...
சந்தித்த மனிதர்கள், பகிர்ந்து கொண்ட வார்த்தைகள், பார்வையில் பதிந்த பிம்பங்கள் இவைகளில் ஏதாவது ஒன்றைப் பின்பற்றி அந்த நாளை ஆரம்பிக்கிறேன்...
புதிதாக அனுபவம் ஒன்றை எனக்காக வைத்திருந்த விடியலுக்கோ என் செயல்களின் ஏமாற்றம்.
நேற்றைய என் உலகத்தின் முற்றுப் பெறாத நிகழ்வுகளை தேடி, நான் பயணிக்கிறேன்.
நேற்று நான் சந்தித்த மனிதர்களை சந்திக்க நேரிடுகிறது.
ஏற்கனவே பேசிய வார்த்தைகளை மீண்டும் உச்சரிக்க நேரிடுகிறது.
மீண்டும் மீண்டும் என் பார்வையில் பதிந்த பிம்பங்களை பார்க்க நேரிடுகிறது.
தினசரி என்னுடன் பயணிக்கும் என்னுடைய புது உலகம் எனக்கான புது அனுபவத்துடன்
நான் போகின்ற வழியில்,
பார்க்கின்ற பிம்பங்களில்,
பேசுகின்ற வார்த்தைகளில்
இப்படி என்னைச் சுற்றி எல்லாவற்றிலும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்க அவை எதையும் கண்டுகொள்ளாத அறிவிலியாக ஒவ்வொரு நாளையும் நான் கடந்து கொண்டிருக்கிறேன்.
இறுதியில் ஐயோ ஒன்றுமே நடக்கவில்லை என என் போர்வைக்குள் எண்ணிலடங்கா முறையாக சொல்லி என் அன்றைய உலகத்தை முடித்துக் கொள்கிறேன்...
”அட மடையா”... என்பது போல் என்னுடைய அன்றைய உலகம் என்னை பார்த்து சலித்துவிட்டு எனக்கான ஒரு அற்புதமான தூக்கத்தை தாரைவார்த்துக் கொடுக்கிறது..
அதற்கொரு சந்தோஷம்...
அப்பாடா !!!... நான் கொடுத்த இந்த தூக்கத்தையாவது இவன் தன்னுள் ஏந்திக் கொண்டானே என்று !!!
No comments:
Post a Comment