எல்லோருக்கும் எப்படி இந்த இரவை போக்குவது என்று ஓர் இரவு வரும். அது போல் நானும் ஒரு இரவை எப்படி தொலைப்பது என தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். இருந்த படங்களையெல்லாம் பார்த்தாகிவிட்டது. அந்த இரவின் மூன்று நாட்களுக்கு முன்புதான் INCEPTION படத்தை நானும் நண்பனும் பார்த்துவிட்டு சிலாகித்துக் கொண்டிருந்தோம். அது சரி இந்த இரவை என்ன செய்வதென யோசிக்கும் போது நண்பன் பாணா காத்தாடி போகலாம் என ஐடியா தர எனக்கோ பயம். ஏனென்றால் அதை பற்றிய விமர்சனங்களெல்லாம் மொக்கையாக இருந்தன. சரி வா வெட்டியாக தொலையப் போகும் இந்த இரவை பாணா காத்தாடியில் தொலைக்கலாம் என முடிவெடுத்தோம்.
பாணா காத்தாடி, காத்தாடி விடும் ஒரு குப்பத்துப் பையனை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம். வழக்கம் போல குப்பத்துப் பையனுக்கும் கோபுரத்து நாயகிக்கும் வரும் காதலை ( காதல்தான் எங்கே இருக்கிறதென தெரியவில்லை ) சொல்லுகிற படம். படத்தின் ஆரம்பத்திலேயே நூல் அறுந்து போன பட்டம் ஒன்றை துரத்திக் கொண்டு நாயகன் குழு செல்கிறது. அப்படிப் போகிற அந்த அபூர்வப் பயணத்தில்தான் ஹீரோ ஹீரோயினை மோதுகிறார். ஹீரோயினின் PEN DRIVE ஹீரோவுக்கு தெரியாமலே ஹீரோவிடம் மாட்டிக் கொள்கிறது. அந்த PEN DRIVE ஐ தேடி ஹீரோயின் ஹீரோவிடம் வருகிறார். ஹீரோ குரூப்புக்கு பார்ட்டி வைக்கிறார். அப்படியும் இப்படியுமாக அவர்களின் சந்திப்பு தொடர்கிறது. ஹீரோவாக அதர்வா, ஹீரோயினாக சமந்தா நன்றாக நடித்திருக்கிறார்கள்.
இதற்கிடையில் காமெடிக்கு கருணாஸ், ஆக்ஷனுக்கு பிரசன்னா என கதையில் சில கதாபாத்திரங்கள் வருகிறது. இந்த இரண்டு கேரக்டரும் படத்தினுள் ஒட்டாமல் வந்தாலும் போரடிக்கவில்லை. அப்பாவின் சட்டை பையில் வைக்கும் பணம் எங்கே போகிறது என வரும் காமெடி தமிழ் சினிமாவுக்கு ரொம்ப ரொம்ப புதுசாக இருக்குமோ( அட என்னப்பா ) என நினைத்து வைத்திருக்கிறார்கள். மற்ற படி கருணாஸ் வழக்கம் போல சிரிக்க வைக்கிறார். பிரசன்னாவின் அழுத்தமான நடிப்பு அவர் வரும் காட்சிக்குண்டான உணர்வுகளை அப்படியே பிரதிபலிக்கிறது. ஆனால் ஹீரோவின் நண்பன் அம்மாவிற்காக பிரசன்னாவிடம் வேலை தேடிப் போய் உயிரை விடுவது எந்த வகையில் கதைக்கு பலம் சேர்க்கிறதென தெரியவில்லை. இதெல்லாம் சரி... நடிகர் முரளி வேறு வந்து காதலை பற்றி பேசுகிறார். ஒரே ஒரு குறை அவர் கையில் மைக் இல்லை. (நல்ல வேலை பூ இருந்தது)
+டூ படிக்கிற பைனுக்கும் பேஃஷன் டெக்னாலஜி படிக்கும் பெண்ணுக்கும் வயது வித்தியாச காதலா என்கிற கேள்விக்கு அற்புதமான பதில் வைத்திருக்கிறார்கள் ( அந்த பதிலை தியேட்டரில் போய் தெரிந்து கொள்ளுங்கள் ). அந்த காதல் மீண்டும் ஒரு அற்புதமான காரணத்தால் பிரிக்கப்படுகிறது. அதன் பின் அவர்கள் எப்படி இணைகிறார்கள் என்பதுதான் கதை என்பது உங்களுக்கும் தெரியும்.
இதன் நடுவே பிரசன்னா குழு ஒரு எக்ஸ் எம்.எல்.ஏ வை போடும் போது காதல் பிரிந்த வேதனையில் இருக்கும் அதர்வா அதை பார்த்து விடுகிறார். பிரசன்னாவின் ஆள் ஒருவன அதர்வாவை போட எத்தனிக்கும் போது பிரசன்னா தடுத்து விடுகிறார். பணம் கொடுத்து ஊரை விட்டு போகும் படி அதர்வாவை பிரசன்னா எச்சரிக்க ஹீரோ குஜராத் கிளம்பிப் போய் பட்டம் விட்டு ஜெயிக்கிறார். மீண்டும் சென்னை வருகிறார். இருந்தாலும் போலிஸ் அந்த கேஸை நோண்டிக் கொண்டிருக்க பிரசன்னாவே அதர்வாவை போட்டுத் தள்ள வேண்டிய சூழல் வருகிறது. பிரசன்னா அதர்வாவை கொன்றாரா? நாயகியின் காதல் ஜெயித்ததா? என்பதுதான் படத்தின் இறுதி. ஆனால் அந்த இறுதி ட்விஸ்ட். அப்பா... இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத ஒன்று?
( படிப்பவர்கள் சிரிக்க வேண்டாம் )
மொத்தத்தில் என்னைப் பொறுத்தவரை படத்தின் எந்த கட்டத்திலும் எனக்கு போரடிக்க வில்லை. ஏண்டா இந்த படத்துக்கு வந்தோம் என சில படங்கள் உண்டு. ஏண்டா இந்த படம் இவ்வளவு சீக்கிரம் முடிகிறதென சில படங்கள் உண்டு. ஆனால் பாணா காத்தாடி இதன் இரண்டுக்கும் நடுவில் இருக்கிறது.
தியேட்டர் கமெண்ட்ஸ்
படம் முடிந்து வெளிவரும் போது சக பார்வையாளர்கள் பேசிக் கொண்ட கமெண்ட்ஸ் இது
- பரவால்லடா, படம் போரடிக்கல. பாட்டெல்லாம் நல்லாருந்துச்சி
- பாணா காத்தாடி அறுந்து போச்சி.
- நல்ல டைம் பாஸ். ஒரு தடவை பாக்கலாம்.
- படம் ஓடிடும்...
1 comment:
Very Nice Keep it up
Post a Comment