”நம்ம வம்சம் தழைக்க ஒரு வாரிசு வேணும்”
இன்றும் கிராமப்புறங்களில் உள்ள, வயல்வெளிகள், தோப்புகள், சுற்றியிருக்கும் மலைகள் வழி நாம் போக நேரிட்டால் இந்த உரையாடலின் எதிரொலியை நாம் கேட்க நேரிடும். ஆனால் தேவர் சமூகத்தின் அடிநாதமே இதுதான் என்கிற முத்திரையுடன் பாண்டிராஜ் வந்திருக்கிறார். வம்சம் பாண்டிராஜின் இரண்டாவது படம். அருள்நிதி அறிமுக ஹீரோவாக நடிக்க, நாயகியாக சுனைனா நடித்திருக்கும் படம்.
படத்தின் ஆரம்பமே திருவிழா. எங்கே பருத்திவீரனை போல் இருக்குமோ என்கிற பயம் ஆரம்பத்திலேயே வர ஆரம்பிக்கிறது. கண்ணெதிரே பிரமாண்டமான விஷுவல் மீடியாவை வைத்துக் கொண்டு ஒரு போலிஸ்காரரை விட்டு வம்ச வழி கதையை சொல்ல ஆரம்பிப்பதும் கொஞ்சம் நம்மை நெளிய வைக்கிறது. இருந்தாலும் போகப் போக படம் வேறு திசையில் பார்ப்பவர்களை உள் நோக்கி இழுக்க ஆரம்பிக்கிறது.
தேவரில் உள்ள மொத்த வம்ச வகை 11 எனவும் அதில் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை இருக்கிறது எனவும் உண்மைக்கதை சொல்ல ஆரம்பிக்கிறார். இதில் அருள்நிதியின் வம்சம் “எப்பாடு பட்டாலும் பிற்பாடு ஓடாதவர்” . அவர் வம்சத்தில் அவர் ஒருவர் மட்டும்தான் பாக்கி இருக்கிறார். 11 நாள் நடக்கும் திருவிழாவில் ஒவ்வொரு வம்சமும் ஒவ்வொரு நாளை எடுத்து திருவிழாவை ஜாம் ஜாம் என நடத்துகிறார்கள். இதில் திருவிழாவினை சிறப்பாக நடத்துவது நீயா நானா என போட்டியும் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் தன் எதிரியை பழி தீர்த்துக் கொள்ள திருவிழாவை பயன்படுத்துகிறார்கள். திடீரென திருவிழா பரபரப்பை நிறுத்திவிட்டு ஒரு வருடத்திற்கு முன்பு என கதை பின் நோக்கி போகிறது.
நாயகன் அருள்நிதியின் அப்பா ஒரு ரவுடி. அவரால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவன் அருள்நிதியை பழிவாங்க வரும் போது “நஞ்சுண்டம் மாபொசி” வம்சத்தை சார்ந்த ஜே.பி.பிரகாஷால் காப்பாற்றப்படுகிறார். ஜே.பி. எதிலும் தான் தான் என்கிற சுயநலத்தோடு வாழ்கிறார். அருள்நிதியின் வீட்டில் வளர்ந்த மாடு சுனைனா வீட்டிற்கு விற்கப்படுகிறது. அந்த மாடு அடிக்கடி பிய்த்துக் கொண்டு அருள்நிதி வீட்டை நோக்கி வந்துவிடுகிறது. இப்படி இந்த மாடு விடு தூது மூலம் இருவரின் காதல் வளர்கிறது. அதற்கு உதவியாக கஞ்சா கருப்பு பூனை விடு தூது விடுகிறார். ஏதோ காமெடி பண்ண வேண்டும் என இல்லாமல் இலைமறை காயாக ஒரு கருத்தை தூவி விட்டு கஞ்சா கருப்பை இயங்க விட்டிருப்பதில் இயக்குநர் கவனம் ஈர்க்கிறார்.
தன் வீட்டு வேலையாளின் சுட்டித்தனத்தை ஒடுக்க ஜே.பி. போக அதுவே அவருக்கு அவமானமாக வந்து விடுகிறது. அந்த அவமானத்திற்கு காரணம் புதிவதன ஊரைச் சார்ந்த சுனைனாவின் தந்தை. தன் அவமானத்தை துடைக்க ஜே.பி. புதிவதன திருவிழாவில் சுனைனாவின் தந்தையை திட்டம் போட்டு கருவறுக்கிறார். அதன் பின்னணியில் சுனைனா ஜே.பி. யை முச்சந்தியில் வைத்து அவமானபடுத்த( இந்த இடத்தில் சுனைனாவின் நடிப்பு அற்புதம் ), அதன் பின் வரும் ஆபத்திலிருந்து சுனைனாவை அருள்நிதி காப்பாற்றுகிறார். இருவரின் காதலுக்கு ஆபத்து வருகிறது. ஜே.பி யின் மகன் அருள்நிதியை கொன்று அந்த வம்சத்தை வேரோடு அழிக்க திட்டம் போடுகிறார். அருள்நிதி தான் காதலித்த பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு தன் வம்சத்தை வளர்க்கிறேன என மார்தட்டுகிறார்.
இடையில் வரும் அருள்நிதியின் அப்பாவை பற்றிய அத்தியாயம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. படம் முழுக்க ஆங்காங்கே அவசரத்தனம் தெரிகிறது. சில காட்சிகளில் நம் மனது ஒட்டவில்லை. அதற்கு காரணம் படத்தின் பின்னணி இசை கூட காரணமாக இருக்கலாம்.
கதை தேடுகிறேன் என்ற பெயரில் DVD கடைகளில் தன் நேரத்தை தொலைத்து, தன் அறிவுத்திறனை மழுங்கடிக்க வைக்கும் பலருக்கு இடையில் தன்னைச் சுற்றி நடக்கும் அதிர்வுகளை, நிகழ்வுகளை பதிவு செய்ய முற்படும் இயக்குநர் பாண்டிராஜின் முயற்சிக்கு ஒரு சல்யூட் அடிக்க வேண்டும் என தோன்றுகிறது.
No comments:
Post a Comment