Friday, October 30, 2015

கோபம்

எரிச்சலின் மிகுதியில்
கட்டுக்கடங்கா கோபம் ஒன்று
என்னுள் வருகிறது...
என் முன் இருக்கும்
புத்தகத்தை தூக்கி வீசுகிறேன்..
பூமியை உதைக்கிறேன்...
காற்றில் கைளை வீசி
சுவரில் குத்துகிறேன்...
இன்னும் ஆற்றாமை தாங்காமல்
என் டேபிளில் இருந்தவையெல்லாம்
கீழே தள்ளி பின் ஒவ்வொன்றையும் எடுத்து
என் ரூம் முழுவதும்
வீசிக் கொண்டேயிருக்கிறேன்.
கையில் கிடைத்ததெல்லாம்
அள்ளி வீசிப் பார்க்கிறேன்...
ஆனால்
கடைசி வரை என்னுள் பிறந்த
அந்த கோபத்தை அள்ளி
வெளியே வீச முடியவில்லை...

Saturday, October 24, 2015

வரமா சாபமா ?

நீ வரமா
இல்லை சாபமா
நீ வரும் போது
புன்னகை புரிந்தால் அது வரம்
முறைத்தால் அது சாபம்
நீ என்னை
பார்த்தால் அது வரம்
பாராமுகம் காட்டினால் - அது சாபம்
நீ என்னுடன்
பேசினால் அது வரம்
மௌனமாய் சென்றால் - அது சாபம்
நீ தனியாக
நடந்து வந்தால் - அது வரம்
இன்னொருவனுடன் உரசி உரசி
வந்தால் - அது சாபம்
. . .
நீ என்னை காதலித்தால்
அது வரம்...
என்னை காதலிக்கா விட்டால்
அதுவும் எனக்கு வரம்தான்...
ஏனெனில் - உன் மேல்
நான் கொண்ட காதல்
என்சாபங்கள் அனைத்தையும்
வரமாய் மாற்றும்
வல்லமை பெற்றது.

Friday, October 23, 2015

உனக்கான நேரம்

இது உனக்கான நேரம்
அவ்வளவுதான்...

பயன் படுத்துகிறாயோ - இல்லையோ
என்பதை பற்றியெல்லாம்
அந்த நேரத்திற்கு கொஞ்சம் கூட
கவலையில்லை...

நேரம் - அது
ஒரு போதும் நீ அதை
செவ்வனே பயன்படுத்துகிறாய்
என மகிழ்ந்ததுமில்லை.
மாறாக நீ அதை
பயன்படுத்தவில்லை என
வருத்தப்பட்டதுமில்லை.

உனக்கான நேரம்
உன்னைவிட்டு சீக்கிரம்
நகராது - அதே சமயம்
உன்னுடனே எப்போதும் இருக்காது.

ஏனெனில்

உனக்கான நேரம்
உன்னுடன் இருக்க வேண்டிய
காலம் மட்டும் உன்னுடன்
இருந்துவிட்டு பின் உன்னை விட்டு
நகர்ந்துவிட கடமைப்பட்டது..

மீண்டும் சொல்கிறேன் !!!

இது உனக்கான நேரம்
அவ்வளவுதான் - அது உன்
உயிர் இருக்கும் வரை
உன்னுடன்-தான் இருக்கும். 

Wednesday, October 21, 2015

வலிமை உன்னுள் இருக்க கடவதாக

என் மௌனங்களில்
நிறைந்திருக்கும் வன்மங்களில்
ஒன்றாக நீயும் இருக்கிறாய்...
நல்லதொரு சந்தர்ப்பமல்ல...
உனக்கான மிக மிக மோசமானதொரு
சந்தர்ப்பத்திற்காக
நான் காத்திருக்கிறேன்...
என்னை கடக்கும் போதும்
என்னை பார்க்கும் போதும்
உன் பார்வையின் அலட்சியம்
உன் புன்னகையின் ஏளனம்
... ... ...
மீண்டும் மீண்டும்
உன் எல்லாவற்றையும்
என் மௌனத்தின் கூர்வாள்களாக
சேமித்து வைக்கிறேன்...
நான் வேண்டுவன
என்பதெல்லாம் யாதெனில்
என் கூர்வாள்கள்
உன்னை நோக்கி வீசப்படும் போது
அதை தாங்கிக் கொள்ளும்
தாராளமான வலிமை உன்னுள்
இருக்கக் கடவதாக...

Sunday, September 27, 2015

தாமதம்.

தாமதம் 

நிதானத்தை தருகிறது...
கோபத்தை தாண்டுகிறது...
மௌனத்தை கற்றுத்தருகிறது...
துரோகத்தை துடைத்தெறிகிறது...
குரூர மனத்தை மென்மையாய்
மாற்றி விடுகிறது...
இதெல்லாம்
ஏன் எதற்காக என பல
கேள்விகளை எனக்குள் கேட்கிறது...
மொத்தத்தில் தாமதம்
எல்லாவற்றையும் மேம்படுத்துகிறதே தவிர
ஒரு போதும் பின் நோக்கி
அழைத்துச் சென்றதேயில்லை.

எறும்பு

ஒரு சமயம்
கையில் ஓர் எறும்பு
ஊர்வது போன்றதொரு உணர்வு...
கொஞ்சம் உற்றுப் பார்த்தால்
உணரப்பட்ட இடத்தில் எதுவுமில்லை...
இன்னொரு சமயத்தில்
முதுகில் அதே எறும்பு
ஊர்வது போன்றதொரு உணர்வு...
கண்ணாடி பிம்பத்தில் தலையை
சொடுக்கிப் பார்த்தால்
எதுவுமில்லை...
பிரிதொரு சமயத்தில் கால் பாதத்தில்
அதே எறும்பு ஊர்வதாய்
உணர்ந்தேன்... சட்டென பார்த்தேன்
வழக்கம் போல் எதுவுமில்லை...
பின் அதே எறும்பு உடல்
முழுவதும் ஊர்வதாய் உணரக் கண்டேன்...
இம்முறை அதை பார்க்க
என் மனம் விரும்பவில்லை.
ஏனெனில் எறும்பாகப்பட்டது
அவ்வப்போது என் மூளைக்குள்தான்
ஊர்ந்து சென்று கொண்டிருக்கிறதென
பல தேடல்களுக்கு பின்னால்
படிந்த ஆழமானதொரு
மௌனத்தின் மூலம் அறிந்து கொண்டேன்.

Thursday, September 10, 2015

சொல்வதும் சொல்லக் கூடாததும்

இதை எப்படி
சொல்வதென தெரியவில்லை
ஆனால்
எப்படியாவது
சொல்லியே ஆக வேண்டுமென
சொல்ல முற்படுகிறேன்...
நான் சொன்ன போது
இதை கேட்கும் நிலையில்
இருந்தவன் - இதை எப்படி
கேட்பதென - இறுதியில்
கேட்காமல் விட்டு விட்டான்...
அவன் இதை கேட்டும்
கேட்காதது போல்
விட்டு விட்டான் - என்பது
எனக்குத் தெரிந்தும் - நான்
சொல்லக் கூடாததை
சொல்லுவது போல்
அவனிடம் சொல்லாமல்
விட்டு விட்டேன்...
இன்னமும் இதை மட்டும்
எப்படி சொல்வதென
தெரியவே இல்லை !!!

Wednesday, April 8, 2015

வாழ்வே...

இதுதான் சரி
இதுதான் தவறு
என்று யாராலும்
எப்போதும் கூற முடியாது...

என் பார்வையில்
என் வாழ்க்கையில்
எது சரி என
என்னை தவிர வேறு
யாரால் தீர்மானித்துவிட முடியும்...

இதனால் இப்படி...
அதனால் அப்படி... என பேசும்
பல தர்க்கங்கள் அனைத்தும்
இதற்கு முன் நடந்த உதாரணங்களால் - அல்லது
இதற்கு பின் இப்படித்தான் நடக்கும்
என்றதொரு அதீதமான
கற்பனை கலந்த பொய்களால்
பின்னப்பட்டிருக்கின்றன.

எனக்கு முன் சென்றவனுக்கு
என்ன நடந்ததோ அதுதான் எனக்கும்
நடக்க போகிறதென்றால் - நான்
தோன்றியதின் அர்த்தம்தான் என்ன?

இதனை இதனால் இவன் முடிக்கும்
என்றாய்ந்து அதனை அவனிடம் கொடுப்பதென
என் வடிவில் ஒரு உயிர் படைக்கப்பட்டது.
அதனிடம் ஒரு வாழ்க்கை கொடுக்கப்பட்டுள்ளது...

வாழ்வதும்... வாழாமல் இருப்பதும்
என்னை மட்டுமே சார்ந்திருக்கிறது...

ஏனெனில் அற்புதமானதோ...
இல்லை அற்பமானதோ...

இந்த வாழ்க்கை என்பது
ஒவ்வொரு உயிரின்
தனித்துவமான இயல்பை
பிரதிபலிக்கிறதே ஒழிய - இன்னொரு
உயிருடன் ஒப்பிட்டு பார்ப்பது அல்ல...

Thursday, March 19, 2015

பயம் ???

என் பாதையெங்கும்
அங்கங்கே பயத்தின் மேடுகள்
பலரால் பல ரூபத்தில்
எட்டிப் பார்க்கின்றன.

ஐயோ
இது நடக்கவில்லை என்றால்
என்னாகும் ?

ஐயோ
இது நடந்துவிட்டால்
என்னாவது ?

இதில் இவையெதுவும்
எனக்குள் இருந்து வருவதில்லை - அதனால்
அவை ஒரு போதும் எனக்குள்
அனுமதிக்கப்படுவதும் இல்லை...

அது... இது... எது... - என
தொடர்ந்து பயங்களால் என்னை தீண்டும்
முன்னால் உனதொரு பலமான
பலவீனத்தில்-தான் ஒவ்வொரு பயமும்
உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதை
எப்போது புரிந்து கொள்ளப் போகிறாய் !!! 

Wednesday, March 11, 2015

அந்த நேரம் மட்டுமே !!!

எல்லாம் அந்தந்த நேரம்தான்...
சிரித்தது...
மகிழ்ந்தது...
விளையாடியது... 
சண்டை போட்டது...
பின் சேர்ந்தது
இப்படி அணுஅணுவாய்
வாழ்ந்து பின் இறுதியில்
மரணம் வருவது !!!
இப்படி எல்லாம் எல்லாம்
அந்தந்த நேரம் மட்டும்தான்...

The Magic of Your Name !!!

உனது பெயரை எங்காவது
பார்க்க நேரிட்டால்
உள்ளுக்குள் ஒரு பல்ப் எரிகிறது...
இதயத்தில் மென் மின்சாரம்
பரவுகிறது...
உடல் முழுவதும் உன் நினைவின்
அதிர்வில் சிலிர்க்கிறது...
நடப்பதறியாது மனம்
உன் ஞாபகத்தின் வெளியில்
மிதக்கிறது...
ஏதோ ஒன்றை செய்ய வந்தவன்
என்ன செய்வதென தெரியாமல்
செய்வதறியாமல் செய்வினை
செய்யப்பட்டவன் போலாகிறேன்...
மீண்டுமொரு முறை - உனது
பெயரை எனக்கே எனக்கு மட்டும்
கேட்குமாறு ஒவ்வொரு எழுத்தாக
உச்சரித்துக் கொள்கிறேன்...
ஐய்யோ... இன்பமாய்
செத்து பின் உயிர்த்தெழுவது
எதுவென கேட்டால் உன் பெயரை
உச்சரித்துப் பின்பு மீண்டும் நான் எனும்
என் நினைவு திரும்பும்
அந்த நொடியைத்தானடி
சொல்வேன்...

அகப்பேய் !!!

பேய் இருக்கா... இல்லையா ???
தேடிக் கொண்டிருக்கிறேன்...

கடைசிவரை கிடைக்கவில்லை...

அது சரி...

நாய்களிருக்கும் கூட்டத்தில்
எருமையை தேடினால்
மிக அருமையாக
அடையாளம் காணலாம்...

அகத்திலொரு முகமாய்
புறத்திலொரு அகமாய்
முட்டாள்களின் முகாமாய்
அலைந்து கொண்டிருக்கும்
சராசரி பேய்கள் கூட்டத்தில் ஒரு பேயை
மட்டும் தேடினால்
நேரில் காண முடியுமோ என்ன? 

Sunday, March 8, 2015

மீண்டும் நான்

நான்” எனும் தனியொருவன்
வழித்தடத்தில் நிகழ்ந்த
விபத்தொன்றில் அவன் பிளவுபட்டான்
ஒருவன் மறைந்து போய்
இருவரானார்கள்...
பின் வீடு உருவானது...
தெருவானது...
தெரு ஊரானது..
ஊர் நகரானது...
நகர் நாடானது...
நாடு உலகமானது...
உலகம் முழுவதும் இந்த “நான்”
பரவ ஆரம்பித்தான்...
படாத பாடு பட்டான்..
படாத பாடு படுத்திக் கொண்டிருக்கிறான்.
படாத பாடு படுத்துவான்...
யார் யாரோ வருகிறார்கள்... போகிறார்கள்...
இறுதிவரை இந்த “நான்” சிம்மாசனத்தில்
கால் மேல் கால் போட்டு
வீற்றிருப்பான்...

Saturday, March 7, 2015

உதிரும் மண் துகள்கள் !!!

இந்தக் கணத்தில்
ஒன்று தோன்றுகிறது...
இதற்கடுத்த கணத்தில்
மற்றொன்று தோன்றுகிறது...
இந்த ஒன்றுக்கும்
அந்த மற்றொன்றுக்கும்
எந்தவித தொடர்புமில்லை - என
எண்ணி கையில் ஒட்டிக் கொண்ட
மண் துகளை உதிர்த்து விடுவது போல்
நொடிகளை உதிர்த்து விடுகிறேன்...
உதிர்ந்த நொடிகளில்
சிக்கிக் கொண்டன எனது ஞாபகங்கள்...
இனி உதிரப் போகும் நொடிகளில்
பரவி விரவி காத்திருக்க
ஆரம்பிக்கிறது - உதிர்த்து விடப்படும்
ஆயிரமாயிரம் மண் துகள்கள்???

Friday, March 6, 2015

இருளும் ஒளியும்

வெளிச்சத்தை விட
இருளையே நான் அதிகமாக
விரும்புகிறேன்...
இந்த இரவு
இன்னும் எவ்வளவு
தூரம் நீண்டு செல்லும்
என தெரியவில்லை...
ஆனால் அதன் சிறப்பே
மாபெரும் ஒளியை தன்னுள்
எங்கு ஒளித்து வைத்திருக்கிறது
என்பதுதான்...
மீண்டும் எண்ணிப் பார்க்கிறேன்...
ஒலி பரவுகின்ற வெளிச்சத்தை விட
மௌனம் படர்கின்ற இருளில்தான்
நான் என்னை மிகச் சரியாக
அடையாளம் கண்டு கொள்கிறேன்...

Tuesday, February 24, 2015

உயிர் !!!

இது எதுவரை நகரும்
எனதெரியவில்லை...
இதுவரை நகர்ந்த
சுவடும் இதற்கு இல்லை...
இனிமேல் நகரக்கூடிய
பாதையும் தெரியவில்லை...
உயிர் - அதன் வழித்தடத்தில்
தன்னியல்போடு தன்னையறியாமல்
எந்தவித தடுமாற்றமுமின்றி
நகர்ந்து கொண்டிருக்கிறது...
நான் -தான் பிடிவாதமாக
என்னை நானே நகர்த்திக் கொண்டிருக்கிறேன்
என எண்ணி எண்ணி
எனக்குள் இருமாந்து கொண்டிருக்கிறேன்....

Tuesday, February 3, 2015

மாயை

ஏதோ ஒன்றை
யோசிக்க... 
ஏதோ ஒன்று
தோன்ற... 
ஏதோ ஒன்றை
பின்பற்ற...
ஏதோ ஒன்று
சட்டென மறந்து போய்விட்டிருக்கிறது...

எனக்குள் நீ

எனக்குள் இருக்கும் நீ
அவ்வப்போது உன்னிடம் நான்
பேச வேண்டுமென அடம் பிடிக்கிறாய்...
செல்போஃனை எடுக்கிறேன்.
உன் நம்பரை தயங்கி தயங்கி
அழுத்துகிறேன்..
நீ எடுப்பாயா... மாட்டாயா...
என்றதொரு தவிப்பில்
நின்றபோது எதிர்முனையில்
உன் காந்தக் குரல்...
...
...
...
உன்னுடன் தொடர்ந்து
பேசிக் கொண்டிருந்த போதுதான்
தெரிந்து கொண்டேன்...
நீயும் என்னைப் போல அடிக்கடி
உன்னுள் இருக்கும் என்னுடன்
பேசிக் கொண்டிருக்கிறாய் என....

Friday, January 16, 2015

எனக்கும் உனக்குமான சந்திப்பு...

ஒரு தேடலின் போது
நிகழும் சந்திப்புகள்
வெறும் சந்திப்புகளாகவே
இருக்கின்றன...
அந்த தேடலின் முடிவில்
பல முறை நிகழ்ந்த சந்திப்புகள்-தான்
அந்த தேடலின் விடை என்பது
வெகு இயல்பாக புரிகிறது...
அடிக்கடி நிகழ்ந்த சந்திப்பில்
தொலைந்த நிகழ்வுகளை மீட்பது
போல்தானடி உன்னையும் எனக்குள்
மீள்விக்கிறேன்...
நீ மீண்டும் மீண்டும்
வெவ்வேறு சந்திப்புகளில்
மெலிதாக சிரித்தபடி...
ஒற்றை பார்வையை வீசியபடி
என்னை கடந்து செல்கிறாய்...
ஆனால் அந்த சந்திப்பில்
தவற விட்டதை இந்த
சந்திப்பில் எப்படி எட்டி பிடிப்பேன்
என தெரியவில்லை...
உண்மையில்
எனக்கு உன்னுடனான
ஒவ்வொரு சந்திப்பிலும்
எதை உணர்ந்து கொள்வது
எதை உனக்கு உணர்த்துவது
என்றதொரு தவிப்பில்தானடி
உறைந்து நிற்கிறேன்...

Friday, January 2, 2015

அப்போதும் இப்போதும் எப்போதும்

இவரை எங்கோ பார்த்திருக்கிறேன்
என நினைத்துப் பார்க்கும் போது
என் மனதில் உருவெடுத்த
எனக்கு அ, ஆ-வன்னா சொல்லிக் கொடுத்த
என் ஆசிரியர் போல...
நண்பனின் வீட்டுக்கு செல்லும்
போதெல்லாம் அடிக்கடி ஞாபகம் வரும்
என் அம்மா போல என் அப்பா போல...
எனக்கு பிடித்ததையெல்லாம் - தனக்கு
பிடித்தாலும் பிடிக்காதென சொல்லி
அதோடு அன்பையும் சேர்த்து
என்னிடம் கொட்டிக் கொடுத்த
என் தங்கையை போல...
எப்போதும் எனக்குள் பட்டாம் பூச்சியாய்
பறந்து சுற்றி என் மன சுவரெங்கும்
இன்று வரை வண்ணங்களை தன்
நினைவால் தீட்டிக் கொண்டிருக்கும்
என் அவளைப் போல...
ஐந்தாவது படிக்கும் போது
பேசாமல் அடிதடி சண்டையில் பிரிந்து
பின் கல்லூரி படிக்கும் போது இறந்த
என் மௌனத்தில் இறுக்கமாய் நிறைந்த
என் நண்பனை போல...
இப்படி அடிக்கடி
இவர்களையெல்லாம்
ஏதோ ஒரு வடிவில்
இங்கே பார்த்துக் கொண்டேயிருக்கிறேன்
அப்போதும்
இப்போதும்
எப்போதும்
யாரும் இங்கே இல்லாமல்
போவதுமில்லை...
யாரும் இங்கே நிரந்தரமாய்
இருப்பதுமில்லை...