Wednesday, September 18, 2013

மௌன நிலை...

யாரும் யாவையும்
எதற்காகவும் யாருக்காகவும்
காத்திருப்பதில்லை...

நான் மட்டும் யாருக்காகவோ, எதற்காகவோ
காத்திருக்க வைக்கப்படுகிறேன்....

ஆனால்

என்னைப் பொறுத்தவரை
காத்திருத்தல் என்பது என்னைச் சூழ்கின்ற
புற இயல்புகளையோ,
புற வெளிப்பாடுகளையோ
பொறுத்தல்ல...

அது முற்றிலும் என்
உள் முக பயணமாயிருக்கிறது...

அது ஒரு
விடியாத இரவைப் போல
இருளாத பகலைப் போல

தன்னை நீட்டித்து கொண்டிருக்கும்
பலவிதமான நினைவுகளில்
சஞ்சரிக்கும் மௌன நிலை... 

ஏன் இப்படி கற்றுக் கொடுக்கப்பட்டது ???


இதெல்லாம் சேமித்து வை... 
எதிர்காலத்தில் உதவும்... 
எதிர்காலத்தில் நீ ஜொலிப்பாய்... 
எதிர்காலத்தில் நீ பெரிய ஆளாவாய்...

இப்படியெல்லாம் இருந்தால்
எதிர்காலத்தில் நீ வீணாவாய்
எதிர்காலத்தில் நீ பைத்தியமாவாய்
எதிர்காலத்தில் நீ சின்னாபின்னமாவாய்

தொடர்ந்து விடாப்பிடியாக
எனக்கு கற்றுக்கொடுக்கப்பட்ட

இந்த எதிர்காலம் எனப்படுவது யாது?
அது எங்கே இருக்கிறது?
அதன் எல்லைகள் எதுவரை ?

இந்த கேள்விகள் என் முன்
எதிர்படும் இந்த இயற்கையின்
எல்லா பதிவுகளிலும்
தன்னை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது...

அகன்று பரந்து விரிந்திருப்பதாய்
எண்ணப்படும் இந்த உலகில்
சிலர் பிறப்பதை நான் பார்க்கிறேன்...
சிலர் இறப்பதையும் நான் பார்க்கிறேன்...

இன்னொருவரின் பார்வையில்
அந்த சிலருக்குள் ஒருவராய் - நானும்
அடங்கி விடுகிறேன்...

இதில் இந்த எதிர்காலம் எனப்படுவது யாது???

Wednesday, September 11, 2013

இன்னும் எத்தனை தூரம் ???

இன்னும் எத்தனை தூரம் 
இந்தப் பயணம்... 

பயம் அற்றுப் போகிறேன்... 
பற்று இற்றுப் போகிறேன்... 

விடுதலையின் அர்த்தம் 
விழிகளில் வழிய
எதிர்படும் நிமிடங்களை 
சிறு புன்னகையுடன் கடந்து கொண்டிருக்கிறேன்... 

இதற்கு முன்னும்
இதற்கு பின்னும்
வந்தேனா - வருவேனா
எனக்குத் தெரியாது...

ஆனால் வந்தது போலும்
வருவது போலும் எண்ணங்கள்
எனக்குள் தன்னை கிளை பரப்புகின்றன...

தற்சமயம் எனக்குள்ளே
நான் கேட்காமல் எழுந்த கேள்வி

இன்னும் எத்தனை தூரம்
இந்தப் பயணம் ?

?????

கேள்விகள்... கேள்விகள்... கேள்விகள் !!!!!!!


இயல்பும் இயல்பற்ற நிலையும் 
மாறி மாறி எனக்குள்... 

விடுதலையாய் சிலிர்க்கும் போதெல்லாம்
சிறைபட துடிக்கிறேன்... 
சிறைபட்ட நேரங்களில் விடுதலை உணர்வுகளால்
தகிக்கிறேன்... 

இதற்கு முன் ”நான்” இருந்தேனா...
இதற்கு பின் ”நான்” இருப்பேனா...
இப்போது ”நான்” -தான் இங்கே இருக்கிறேனா...

ஆமாம்... அது என்ன ”நான்”...
ஒருவேளை அது இந்த பிரபஞ்சத்தில் இருக்கும்
கோடான கோடி உயிர்களுக்கே உரித்தான
பொதுவான ”நான்” -ஆக இருக்குமோ....

அந்த “நான்” -தான் எனக்குள்ளும்
தன்னை செருக்குடன் - இருமாப்புடன்
தன்னிலைப் படுத்திக் கொண்டிருக்கிறதோ???

நடுவில் முளைத்த ஆசை

பிறத்தல்... 
வாழ்தல்... 
இறத்தல்... 
இவைகளுக்கு நடுவே ஏன்
உனக்கு மட்டும் இந்த ஆசை? 
இதில் இந்த வாழ்வென்றால் என்ன
என்றதொரு கேள்வி வேறு???

நான் ???

ஒரு செல் உயிரி
பல செல் உயிரி
செடி, கொடி, 
மரங்கள்... 

இவையனைத்தும் நான் என்ற 
திமிருடன் வளர்ந்து தன்னை
வெளிப்படுத்துகின்றன... 

ஏன்... நீ - நான்
என்ற செருக்குடன் வளர்ந்திருக்கிறாய்
நான் - நான் என்ற செருக்குடன்
வளர்ந்திருக்கிறேன்...

தோன்றியன யாவும் மறைவன
என்னும் விதிப்படி உடற்கூறுகளும்
உருவங்களும் மறைந்து போகலாம்...

ஆனால் இந்த ”நான்”
இந்த உலகத்தின் படைப்பாற்றல்
அற்றுப் போகும் வரை

வெவ்வேறு வடிவங்களில்
வெவ்வேறு தன்மைகளில்
அடக்க முடியா திமிருடன்
தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது...

முடிவிலா எல்லை எது???

முடிவிலா எல்லை
என் முன் விரிந்திருப்பதாய்
எனக்கு கற்பிக்கப்பட்டிருக்கிறது... 

தேடியதும்... தேடப்படுவதும்... தேடிக் கொண்டிருப்பதும்
கைக்கிட்டும் நேரத்தில் எதுவுமே தேவைப்படும் 
நிலையில் இருப்பதேயில்லை... 

அர்த்தமற்ற வாழ்வெனவும்
அர்த்தமுள்ள சாவெனவும்
பிரகடனப்படுத்துகிற சூழ்நிலையிலெல்லாம்
நான் நடுக்கத்துடனே வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறேன்...

ஒரு மரணம் உணர்த்துவதை
ஒரு ஜனனம் கற்பிப்பதை
இரண்டையும் இணைத்துக் கொண்டிருக்கிற
இந்த வாழ்வு சொல்ல தவறிக் கொண்டிருக்கிறது...

இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறேன்...

முடிவிலா எல்லை என்
முன்னால் விரிந்திருக்கிறதென
எனக்கு கற்பிக்கப்பட்டதை...

நான் இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறேன்... !!!

நானென்ற நானற்ற பிம்பங்கள் !!!

வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வும்
எதையாவது ஒன்றை 
என்னுள் பதிவு செய்கின்றன... 

தினசரி ஓட்டங்களுக்குள் 
சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிற
ஒவ்வொரு நொடிக்குள்ளும்
நான் தவித்து தகிக்கின்றேன்

நான் பார்த்த மனிதர்கள்
நான் பேசின வார்த்தைகள்
நான் பழகிய கடவுள்
நான் பரவசப்பட்ட இயற்கை

இப்படி என்னற நான்
என்ற நானுக்குள் - நான்
சிக்கித் தவிக்கும் போது
எனக்குள் நானாய் வந்தமர்ந்த
இந்த எல்லா பிம்பங்களும்
என்னை பார்த்து
கண் சிமிட்டிக் கொண்டிருக்கின்றன !!!

முடிவில்லா இம்சையடி நீ...

பார்ப்பதுமாய் பார்க்காததுமாய்
பேசுவதுமாய் பேசாததுமாய்
முறைப்பதுமாய் சிரிப்பதுமாய்
சிலிர்ப்பதுமாய் சிலாகிப்பதுமாய்
இருப்பதுமாய் இல்லாததுமாய்
முடிவதுமாய் தொடங்குவதுமாய் - என்
முடிவில்லா இம்சையடி நீ !!!

யாரோ யாரிடமோ !!!

யாரோ யாரிடமோ

ஞாபகப்படுத்தபடுகிறார்கள்... 

உரையாடுகிறார்கள்... 

சிரித்து மகிழ்ந்திருக்கிறார்கள்... 

அழுது புலம்புகிறார்கள்... 

ரகசியம் பேசுகிறார்கள்...

மௌனமாய் இம்சிக்கிறார்கள்...

இப்படி யாரோ யாரிடமோ
யாவற்றையும் நிகழ்த்திக் கொண்டிருக்க

காலம் இந்த யாரையும்
பொருட்படுத்தாது முன்னோக்கி
தனது - முடிவிலாததொரு
பயணத்தை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது...

கேள்விகளின் கணம்

இதெல்லாம் எதற்கு நடக்கிறது 
என்பது தெரியாமலே நடந்தேறுகிறது... 

முதலில் ஏன் நடக்கிறது
என்ற எண்ணம் மேலோங்க
எனக்குள் தகிக்கிறேன்... 

இறுதியில் நல்ல வேளை
இப்படி நடக்காமல் போயிருந்தால் என்னவாயிருக்குமோ
என்று தோன்றுகிறது... 

ஏன் இப்படி நடக்கிறது, நடந்தது,?
இவையெல்லாம் எந்த கணத்தில் நிர்மாணிக்கப்படுகிறது?

ஒரு பிறப்பும் இறப்பும் யார் கையிலும் இல்லாத போது
இடையில் நடப்பது மட்டும் கை கூட வேண்டுமென்ற
ஆசையின் பயம்தான் இந்த கேள்விகளின் கணம்....

மழையும் நீயும் ஒன்றல்லோ

இந்த மழைக்கும் 
உனக்கும் பெரும் தொடர்பிருக்கிறது போலும்... 

அடர்ந்த வெயில் பொழுதில்

நீ வந்தால்
மழை வாசம் வரும்... 

மழை வந்தால் - மனதில்
உன் வாசம் வரும். 

நீ அழைத்தால் உடனே வருவதில்லை...
மழையும் அப்படித்தான்...

சரி நீ போ என்றால்
போகிறேன் போகிறேன் என்று நின்று
பேசிக் கொண்டேயிருப்பாய்...
விடாமல் இருக்கும் தூரல் போல...

மழை பெய்து ஓய்ந்த போதும்
ஒட்டிக் கொண்டிருக்கின்ற ஈரம் போல

நீ சென்ற பின்னும்
என்னுடன் இருப்பதை போலவொரு
பிம்பத்தை செதுக்கிச் செல்கிறாய்....

இப்போது கூட மழை...
மனமெங்கும் பூக்களாய் பூக்கின்ற
உன் வாசத்தோடு அமர்ந்திருக்கிறேன்...