Monday, October 24, 2011

என் பாதையின் தூரம்...


இந்தப் பாதை போகும் தூரம்
அறியாமல் பயணிக்கிறேன்...

நான் நகர நகர
என் பாதை தன்னை நீட்டிக் கொண்டே போகிறது...

ஓர் விடியல்
ஓர் இரவு
நடுவில் பகல்...

பயணித்து பயணித்து
நான் கொஞ்சம் அயர்ந்து தொய்ந்து
தொடர்ந்து நகர ஆரம்பிக்கிறேன்...

மீண்டும்

ஓர் விடியல்
ஓர் இரவு
நடுவில் பகல்....

இடையிடையே
கொட்டும் மழை
சுட்டெரிக்கும் வெயில்
குளிர்காற்றாய்....
கோடைகாற்றாய்...
என் சுவாசமும் அங்கங்கே திக்கித் தவிக்கின்றது...

நாட்களுக்கேற்றவாறு
என் எண்ணங்கள் தன்னை உருமாற்றிக் கொள்கிறது...

மாதங்களுக்கேற்றவாறு
என் இலக்கின் தன்மை மாறிக் கொண்டே போகிறது....

வருடங்களுக்கேற்றவாறு
என் பாதையின் அடையாளமும் மாறுகிறது...

எங்காவது நான் எங்கிருக்கிறேன்
என திரும்பிப் பார்க்கும் வேளையில்
என்னை கடந்து முடிந்த என் பாதை
என்னையும் சேர்த்து
தன்னையும் தொலைத்து விட்டிருக்கிறது...

Thursday, August 11, 2011

நில்லாயோ என் சகியே...


ஒரு கோடைக்காலத்தின்
வெப்பமான நேரம் அது...

மனதின் இறுக்கத்துடன்,
மழையின் ஏக்கத்துடன்
தனித்து தகித்திருக்கிறேன்...

தூரத்தில் தேவதையாய்
நீ அலைந்து அலைந்து
நடந்து வருகிறாய்...

நீ என் பக்கத்தில் வந்த போது....
நான் மறந்து போகிறேன்....
நீ என்னுள் வளர்கிறாய்...

உதட்டோரம் ஒரு புன்னகை,
உயிர் வருடும் ஒரு பார்வை...
இமைக்காமல் நான் பார்த்துக்கொண்டே இருக்கிறேன்...
நிற்காமல் நீ நடந்து கொண்டிருக்கிறாய்... .

என் பார்வையிலிருந்து
விலகி - நீ தொலை தூரமாய்
போய்க் கொண்டிருக்கிற - அதே வேளை
என் இதயத்திற்கு மிக மிக மிக
நெருக்கமாகிக் கொண்டே இருக்கிறாய்...

Monday, June 13, 2011

ஆரண்ய காண்டம்: - அடரிருள் காட்டில் குழந்தை போல் திக்கித் திணறுகிற மர்மம்


சுருக்கமாகச் சொன்னால் சமுதாயத்தின் போக்கில் நல்லவனாகவும் கெட்டவனாகவும் நூறு சதவிகிதம் வாழ முடியாதவனின் ஒரு நாள் விஸ்வரூபம். காலத்தின் குறியீடுகள் இலக்கணமின்றி அவன் வாழ்வில் அலைய அவனுக்கான அன்றைய பாதையில் அவன் நா தவறி உடைந்து விழும் ஒரு வார்த்தையில் ஆரம்பிக்கிறது அவனது வளர்ச்சிக்கான மற்றும் வீழ்ச்சிக்கான அறிகுறி. அவன் வளர்ந்தானா…. வீழ்ந்தானா…?

ஆண்டு அனுபவித்து அடங்காமல் துள்ளி திரிய நினைக்கும் முதுமையின் அடையாளமாய் ஒரு தலைவன். அவனுக்கு உடல் ரீதியாக, ஆளுமை ரீதியாக, நெஞ்சுரம் ரீதியாக வயதாகிவிட்டது, என்பதை இப்படி ஒரு காட்சியில்தான் சொல்ல வேண்டுமென்பதில் ஒரு சராசரி பார்வையாளனாய் எனக்கு உடன்பாடில்லை. இன்னமும் ஒரு விஷயத்தை ஒரு நீளமான காட்சியில் உறுத்தலோடு சொல்லிவிட்டு அதையே உரையாடலின் மூலம் பதிவு செய்வது கூறியதைக் கூறுவது போல் இருக்கிறது. இப்படி படம் முழுவது முரணான சில/பல விஷயங்கள் அழுத்தமாக விரவிக் கிடக்கிறது.

சரி கதை என்ன என்று பார்த்தால் அழகான கதை இருக்கிறது. நூறு சதவிகிதம் ஒரு சராசரி பார்வையாளனை இருக்கையின் நுனிக்கு வரவைக்கக் கூடிய கதை. ஆனால் அது பின்னப்பட்ட விதத்தில், பயணித்த தளங்களில் தயக்கமின்றி தாமதப்படுத்தப்படுகிறது. யாரை தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்ற குழப்பம் நேரிடுகிறது. திடீரென்று புத்திசாலித்தனமாக பேசுகிறார்கள். திடிரென்று சில்லரைத்தனமாக பேசுகிறார்கள்.

படத்தின் ஆரம்பத்தில் நாகதத்தன்(இதுவரை ஒரு சராசரி பார்வையாளன் அறிந்திடாத பெயர்) மற்றும் விஷ்ணுகுப்த மகாராஜா இருவருக்கும் ஒரு சின்ன உரையாடல். அந்த உரையாடல் இல்லாமல் பார்த்தால் படம் அதைத்தான் சொல்கிறது என்பது புரியும். தர்மம் எனபது தேவைப்படுவதுதான் என்று சொன்னால் இன்றைக்கு கோடி கோடியாக ஊழல் செய்பவர்களெல்லாம் செய்வது சரி எனத் தோன்றுகிறது. ஒருவனுக்கு ஒரு விஷயம் இன்னொருவனின் பார்வையிலிருந்து அளவுக்கதிகமான ஆசை என்று சொல்லலாம். ஆனால் இங்கு நடைபெறும் அநியாயமான தவறுகள் அனைத்தும் அவர்களுக்கு அந்த தவறுகளால் விளையும் நன்மைகள் தேவைப்படுவதால்தான் நிகழ்கிறது. இன்னமும் இந்த கேள்வி எனக்குள் விரக்தியாக விசும்பிக் கொண்டு நிற்கிறது. தேவைப்படுவதை எடுத்துக் கொள்வது தர்மமா? ஆளுமையா?

இந்தப்படத்தில் இன்னும் சில சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள் இருக்கிறார்கள். நடிக்கவேண்டுமென்று தாதாவிடம் மாட்டிக் கொண்டு சிரமப்படும் ஆண்மைத்தனம் (இங்கே ஆண்மைத்தனமென்றால் வீரம்) கொண்ட அபலைப் பெண். சப்பை என்கிற ஏமாளி, காளையன் என்கிற வெள்ளந்தி அப்பா. கொடுக்காபுலி என்ற துறுதுறு சிறுவன். இவர்கள் எல்லோரும் அற்புதமாக செதுக்கப்பட்டிருக்கிறார்கள். பசுபதியின் நாவினால் வந்த நாசம் அவன் வாழ்க்கையை துரத்துகிறது. அந்த இடைவெளியில் அந்த பசுபதியின் அவசரகதி பயணத்தில் இவர்கள் அனைவரும் ஆங்காங்கே வந்துபோகும் கதைமாந்தர்கள். ஆனால் ஒரு சராசரியான பார்வையாளனாக முதல் பாதியில் என்னால் கதையை பின் தொடர்ந்து பயணிக்க முடியவில்லை. இரண்டாம் பாதியில் என்னை நானாக ஈடுபடுத்திக் கொண்டேன்.

என்னைப் பொறுத்தவரை, ஒரு படம் என்னை தன் போக்கில் தன்னுள் இழுத்து பயணிக்கும் தன்மையுடன் இருக்கவேண்டும். அல்லது என்னை ஒரு பார்வையாளனாக பாவித்து பரவசப்படுத்தவேண்டும். அந்த வகையில் இந்த படம் என்னை முழுதாக ஏமாற்றியிருக்கிறது.

Saturday, June 4, 2011

உனக்கான எனது இன்னொரு உலகம்


இந்த இரவின் ரீங்காரம்
உனக்கான என் மௌனத்தை
இன்னும் கொஞ்சம்
நீட்டிக் கொண்டிருக்கிறது....

என்றோ ஒரு நாள் நீ என்
அருகிலிருந்த தருணங்களை
மீண்டும் எனக்குள்
உயிர்ப்பிக்கப் பார்க்கிறேன்.

விளையாட்டாய் நீ பேசிய
வார்த்தைகள் அர்த்தமுள்ளதென
இப்போது உணர்கிறேன்...

சற்று முன் கடந்த என்
நொடிகள் அனைத்தும் உன்
நினைவை சுமந்து கொண்டே
இறந்து கொண்டிருக்கின்றன.

உன் மீதான பிரியம் -
மரணம் சம்பவித்த அடுத்த நொடியிலும்
நான் வாழ்ந்து கொண்டிருப்பதை
உணர்த்திக் கொண்டிருக்கிறது.

Saturday, May 14, 2011

ஒரு முறையல்ல,,, பல முறை

ஒரு முறை, இரு முறையல்ல,
ஓராயிரக்கணக்கான முறை ஜனித்திருக்கிறேன்.
இவ்வுலகத்தின் ஒரு புள்ளியாய் நானிருக்கும்
அதே வேளையில் என்னுள் ஒரு புள்ளியாய்
இந்த உலகமும் தன்னை சுருக்கிக் கொள்கிறது.
உடல் மாற்றம், மொழி மாற்றம், இடமாற்றமென
பல பரிமாணங்களை கொண்டு
வந்திருந்தாலும் என் தேடலின் ஒரு பகுதி
என் பரிமாணத்தின் அடுத்த கட்டத்திற்கு
என்னை அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது....

Monday, May 9, 2011

மழையுடனான உன் நினைவுகள்


அடர்ந்து பொழியும் மழை நாளில்
ஒரு சுவரின் மறைவில் மிரட்சியான
விழிகளுடன் உன்னைக் கண்டேன்….

என்னைத் தீண்டிய
உன் பார்வையின் வெப்பம்
அந்த அடைமழையின் அடர்த்தியை
கொஞ்சம் அனலாக்கியது.

சற்றும் அங்கே என்னை
நீ எதிர்பார்க்கவில்லை…

உனக்கும் எனக்குமான இடைவெளியை
கூட்ட உன் தோழியை கிள்ளினாய்.
கை விரல்களை முறுக்கிக் கொண்டாய்…
என்னை பார்த்தும் பார்க்காமலும்
உனக்குள் தடுமாறினாய்…

உன் கையில் உள்ள நோட்டும்,
கைக்குட்டையும் தடுமாறி என்னருகில் விழ
அவசரமாய் நீயும், பரவசமாய் நானும்
அதை எடுக்க குனிந்தோம்…

அவசரத்தில் உன் தலை என் நெற்றியில்
இடிக்க,பதறிப்போனாய்…
உன் விரல்களால் நீவினாய்…
மயில் தெரியாமல் கொத்திவிட்டு பின் தன்
மயிலிறகால் வருடுவது போலிருந்தது உன் செய்கை…

உனக்கும் எனக்குமான இடைவெளி
தன்னை சட்டென விடுவித்துக் கொள்ள
என் கைகளுக்குள் நீ அடங்கினாய்

உன் பார்வையின் மௌனம்
என்னை விழுங்கிக் கொண்டிருந்தது…

ஏதோ நினைவு வந்தவளாய்
என்னிலிருந்து விலகி,
உன் தோழியின் அருகில் சென்றாய்.
அவள் உன் காதில் ஏதோ
முணு முணுக்கிறாள்…

நீ செல்லமாக அவள் காதை திருக
மழைக்கு ஒதுங்க வந்த நான்
மீண்டும் மழையில் நனைய துவங்கினேன்….

ம்....சாதாரணமாகவே மழை சில்லென இருக்கும்
இப்போது கேட்கவா வேண்டும்…?

Wednesday, May 4, 2011

கவனிக்க மறந்த சில பேர்

ஒரு சந்திப்பின் வலிமை, அர்த்தம்

அந்த சந்திப்பு நிகழும் போது புலப்படுவதில்லை....

காரணமின்றி யாரோ என்னையும்,

யாரையோ நானும் கவனிப்பதில்லை....

ஏற்கனவே அறிமுகமானவரை

மறுபடி சந்திக்கும் போதெல்லாம்

நான் சிறு புன்னகையை

பரிமாறிக் கொள்கிறேன்...

என்றோ எப்போதோ எவ்வழியிலோ

என் கவனிப்பில் தவறிய சில பேர்

என்னைக் கவனித்த பல பேர்

என்னைப் பார்த்து சிரிக்கிறார்கள்...

அவர்கள் சிரிப்புக்கு என்ன பதில் தருவது

என தெரியாமலே

நானும் பதிலுக்கு சிரித்து வைக்கிறேன்....

Tuesday, April 12, 2011

நகர்கின்ற பொழுதும் நானும்

ஒவ்வொரு இரவும் கரைகிறது....
ஒவ்வொரு விடியலும் நகர்கிறது...
நானும் நகர்ந்து கொண்டே இருப்பதாக
நினைத்துக் கொள்கிறேன்...
என்னைக் கடந்தும் சில பேர் சென்று
கொண்டிருப்பதாக பிம்பங்கள் பிரதிபலிக்கின்றன....
ஆனால் அவ்வப்பொழுது
காற்றின் வழி போல் வெற்றிடம்
நிரப்புவது என் பணியல்ல - என்பதை நான்
எனக்குள் உரக்க கூவிக் கொண்டிருக்கிறேன்...

Friday, March 25, 2011

மௌனம்

இருப்பவை இல்லாமலிருப்பதும்
இல்லாமலிருப்பதாக எண்ணப்படுவதும்
யாவும் இருப்பதாக நம்பப்படுவதும்
நாள் தோறும் நடக்கிறது....

ஒவ்வொரு
மௌனத்தின் மறுபக்கமும்
இந்த வாழ்வின் அர்த்தம்
அலசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஆயிரம் தேசங்கள் வந்தால் என்ன?
ஆயிரமாயிரம் மொழிகள் பிறந்தால் என்ன?
மௌனத்தை தாண்டி வேறென்னவொன்று
அர்த்தமுள்ளதாக இருக்கிறது?

Friday, February 4, 2011

யுத்தம் செய்: - அழுத்தமான போர்க்களம்






- சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, நந்தலாலா, அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் வந்த இந்த படம் ஒரு சராசரி பார்வையாளனின் காட்சி பிம்பங்களிலிருந்து வெகு தொலைவில் இருக்கிறது.



- முதன் முதலாக சேரன் அழகாக அற்புதமாக நடித்திருக்கும் படம். சேரன் மட்டுமல்ல, படத்தின் அனைத்து பாத்திரங்களும் மிஷ்கின் பேசுவது போல் பேசிக் கொண்டிருப்பதுதான் கொஞ்சம் நெருடலாக இருக்கிறது...



- ஒரு படம் இப்படித்தான் எடுக்கப்பட வேண்டுமோ என்று பல இடங்களில் தோன்றினாலும் இதெல்லாம் எத்தனை பேருக்கு புரியும் என்று நினைத்தால் குழப்பமாக இருக்கிறது.



- கதை என்று பார்த்தால் சமீபத்தில் சசிகுமாரின் இயக்கத்தில் வெளிவந்த ஈசன் படமும் இதே கதைதான் என இரண்டு படத்தையும் 120 ரூபாய் கொடுத்து ஐநாக்ஸ் திரையரங்கத்தில் பார்த்த என் மனதுக்கு தோன்றுகிறது. ஆனால் காட்சியமைப்புகளில் இரண்டுக்கும் துளி கூட சம்பந்தமில்லை.



- குறையோ, அபத்தமோ என்று படத்தில் எதுவுமில்லை என தோன்றினாலும், படம் பார்த்து விட்டு வெளியே வரும் போது மனதில் எந்தவொரு பாதிப்புமில்லை. இடைவேளையின் போதும், படத்தின் இறுதியிலும் கைதட்டல்கள் விழுகிறது.



- ஒரு இண்டர்வியூவில் மிஷ்கின் நான் ஒரு கதை சொல்லி மட்டுமே, இந்த சமுதாயத்திற்காக எந்தவொரு செய்தியையும் சொல்ல வரவில்லை. அதற்கெல்லாம் பாரதியார், ஔவையார், திருவள்ளுவர் வந்தார்கள் எனவும், பாட்டி கதை சொல்வது போல் நானும் மக்களுக்கு கதை சொல்கிறேன் எனவும் பேசுவதை கேட்டிருக்கிறேன். ஆனால் பாட்டி கதை சொல்லும் போது ஆங்காங்கே சுவாரஸ்யங்கள், நகைச்சுவை, என பல விஷயங்கள் இருக்கும். இந்தப் படத்தில் அப்படி எதுவும் இருப்பதாக தோன்றவில்லை. மிகவும் பழைய கதையை புதிய விதத்தில் சொல்லியிருப்பது அற்புதம்.



- ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமென்றால் யுத்தம் செய் ஒரு அழுத்தமான போர்க்களம், ஆனால் வரலாற்றில் நிற்குமா ?



- நீங்களும் படம் பார்த்து விட்டு சொல்லுங்களேன்...

Wednesday, February 2, 2011

என்னுயிர் எதிரியே...



உன் பயம்
என் பலமல்ல….
உன் பலவீனமும்
என் பலமல்ல

என் உணர்வுகளின் தீ
உன்னை முற்றிலும் எரிக்க முயல்வதை
நீ தடுக்க நினைப்பதாய் தவிர்க்க முயல்கிறாய்…

ஆனால் ஒரு போதும்
தடுக்க முடியாதென்பதை
பின்னால் நீ அறிவாய்

ரகசிய ஆலோசனையில்
என் முடிவை தீர்மானிக்கிறாய்…
அணுதினமும்
உன் எண்ணங்களாய்
என்னை சுமந்து கொண்டிருக்கிறாய்.

வெட்டப்படும் சதுரங்கக் காயாக
இருப்பதைப் பற்றி
நான் எப்போதும் கவலைபடுவதில்லை…

நீ வெட்டும் முன்னும்,
வெட்டிய பிறகும் நான் ராஜாதான்…

வெட்டி விட்டோம் என
உனக்குள் நீ மார்தட்டிக் கொள்ளாதே…

நீ வெட்டியது என் உயிரைத்தான்
உன்னை சதா எரித்துக் கொண்டிருக்கும்
என் உணர்வுகளை அல்ல

.....
.....

நீ வெட்ட வெட்ட
நான் உயிர்த்துக் கொண்டேயிருப்பேன்…