Monday, August 23, 2010

நினைவின் பிம்பங்கள்











என் இரவின் அமைதி

உன் ஞாபகங்களால் அலைமோதுகிறது..

இந்த இரவில் உன் நினைவின்
மெல்லிய அதிர்வுகள் என்னுள்
உன்னோடு இருந்த
நொடிகளை

உன்னோடு நனைந்த
மழைத் துளிகளை

உன்னோடு இறுகிய
மௌனங்களை

உன்னோடு நழுவிய
தழுவல்களை

உன்னோடு நகர்ந்த
மாலை நேரங்களை

உன்னோடு மலர்ந்த காதலை
மெல்ல மெல்ல
இழைய செய்ய..
என் இரவின் அமைதி முழுவதும்
உன் ஞாபகங்களால் நெய்யப்படுகிறது.

Saturday, August 14, 2010

சுதந்திரதினம்

63 வது சுதந்திரதினத்தை கொண்டாடும் நம்மில் சிலர் அதற்காக யார் யார் தங்களை அர்ப்பணித்தார்கள் என எண்ணுவதற்கு கூட நேரமில்லாமல் வாழ்க்கைச் சக்கரத்தில் சிக்கி வதை பட்டுக் கொண்டிருக்கிறோம். ஒரு வேளை அந்த அவதாரபுருஷர்கள் இப்படியெல்லாம் இன்றைய நிலை இருக்குமென முன் கூட்டியே நினைத்திருந்தார்களேயானால் இதற்கு ஏதாவது வழிவகை செய்துவிட்டு போயிருப்பார்கள். என்ன இருந்தாலும் நம்முடைய ஒவ்வொரு துளி சந்தோஷத்திற்கும் அவர்கள் அனைவரும் ரத்தம் சிந்தியிருக்கிறார்கள் என்பதை ஒரு போதும் மறந்து விடக்கூடாது.

சுதந்ததிரதின நாள் என நாம் நமக்காக நடத்திக் கொள்ளும் கேளிக்கைகளுக்கு நடுவில் நம் தேசத்தைப் பற்றி அன்று நம் பாரதி பாடிய இந்த கவிதையையாவது நாம் நினைவில் கொள்வோம்.

பாரத தேசம்

பாரத தேசமென்று பெயர்சொல்லு வார் - மிடிப்
பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லு வார்.

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம், எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்,
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம்.


வெட்டுக் கனிகள் செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்,
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.


முத்துக் குளிப்பதொரு தென் கடலிலே,
மொய்த்து வணிகர்பல நாட்டினர்வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்தே
நம்மருள் வேண்டுவது மேற்க ரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேர நன்னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்துத்
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.


காசி நகர்ப்புலவர் பேசும் உரை தான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற் கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சினில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்
காசினி வணிகருக்கு அவை கொடுப்போம்


ஆயுதம் செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
ஒயுதல்செய் யோம்தலை சாயுதல் செய்யோம்
உண்மைகள்சொல்வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள்செய் வோம்உழு படைகள் செய் வோம்
கோணிகள்செய் வோம் இரும் பாணிகள் செய்வோம்
நடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம்
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்

மந்திரம்கற் போம்வினைத் தந்திரம்கற் போம்
வானையளப் போம்கடல் மீனையளப்போம்
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்
சந்திதெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம் நல்ல காடு வளர்ப்போம்
கலைவளர்ப் போம் கொல்ல ருலைவளர்ப் போம்
ஓவியம்செய் வோம் நல்லஊசிகள் செய் வோம்
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.

சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மென்போம்
நீதிநெறி யினின்று பிறர்க்கு தவும்
நேர்மையர் மேலவர், கீழவர் மற்றோர்.

Friday, August 13, 2010

வம்சம் - தலைமுறை தாண்டும்.









நம்ம வம்சம் தழைக்க ஒரு வாரிசு வேணும்

இன்றும் கிராமப்புறங்களில் உள்ள, வயல்வெளிகள், தோப்புகள், சுற்றியிருக்கும் மலைகள் வழி நாம் போக நேரிட்டால் இந்த உரையாடலின் எதிரொலியை நாம் கேட்க நேரிடும். ஆனால் தேவர் சமூகத்தின் அடிநாதமே இதுதான் என்கிற முத்திரையுடன் பாண்டிராஜ் வந்திருக்கிறார். வம்சம் பாண்டிராஜின் இரண்டாவது படம். அருள்நிதி அறிமுக ஹீரோவாக நடிக்க, நாயகியாக சுனைனா நடித்திருக்கும் படம்.

படத்தின் ஆரம்பமே திருவிழா. எங்கே பருத்திவீரனை போல் இருக்குமோ என்கிற பயம் ஆரம்பத்திலேயே வர ஆரம்பிக்கிறது. கண்ணெதிரே பிரமாண்டமான விஷுவல் மீடியாவை வைத்துக் கொண்டு ஒரு போலிஸ்காரரை விட்டு வம்ச வழி கதையை சொல்ல ஆரம்பிப்பதும் கொஞ்சம் நம்மை நெளிய வைக்கிறது. இருந்தாலும் போகப் போக படம் வேறு திசையில் பார்ப்பவர்களை உள் நோக்கி இழுக்க ஆரம்பிக்கிறது.

தேவரில் உள்ள மொத்த வம்ச வகை 11 எனவும் அதில் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை இருக்கிறது எனவும் உண்மைக்கதை சொல்ல ஆரம்பிக்கிறார். இதில் அருள்நிதியின் வம்சம் “எப்பாடு பட்டாலும் பிற்பாடு ஓடாதவர். அவர் வம்சத்தில் அவர் ஒருவர் மட்டும்தான் பாக்கி இருக்கிறார். 11 நாள் நடக்கும் திருவிழாவில் ஒவ்வொரு வம்சமும் ஒவ்வொரு நாளை எடுத்து திருவிழாவை ஜாம் ஜாம் என நடத்துகிறார்கள். இதில் திருவிழாவினை சிறப்பாக நடத்துவது நீயா நானா என போட்டியும் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் தன் எதிரியை பழி தீர்த்துக் கொள்ள திருவிழாவை பயன்படுத்துகிறார்கள். திடீரென திருவிழா பரபரப்பை நிறுத்திவிட்டு ஒரு வருடத்திற்கு முன்பு என கதை பின் நோக்கி போகிறது.

நாயகன் அருள்நிதியின் அப்பா ஒரு ரவுடி. அவரால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவன் அருள்நிதியை பழிவாங்க வரும் போது “நஞ்சுண்டம் மாபொசி வம்சத்தை சார்ந்த ஜே.பி.பிரகாஷால் காப்பாற்றப்படுகிறார். ஜே.பி. எதிலும் தான் தான் என்கிற சுயநலத்தோடு வாழ்கிறார். அருள்நிதியின் வீட்டில் வளர்ந்த மாடு சுனைனா வீட்டிற்கு விற்கப்படுகிறது. அந்த மாடு அடிக்கடி பிய்த்துக் கொண்டு அருள்நிதி வீட்டை நோக்கி வந்துவிடுகிறது. இப்படி இந்த மாடு விடு தூது மூலம் இருவரின் காதல் வளர்கிறது. அதற்கு உதவியாக கஞ்சா கருப்பு பூனை விடு தூது விடுகிறார். ஏதோ காமெடி பண்ண வேண்டும் என இல்லாமல் இலைமறை காயாக ஒரு கருத்தை தூவி விட்டு கஞ்சா கருப்பை இயங்க விட்டிருப்பதில் இயக்குநர் கவனம் ஈர்க்கிறார்.

தன் வீட்டு வேலையாளின் சுட்டித்தனத்தை ஒடுக்க ஜே.பி. போக அதுவே அவருக்கு அவமானமாக வந்து விடுகிறது. அந்த அவமானத்திற்கு காரணம் புதிவதன ஊரைச் சார்ந்த சுனைனாவின் தந்தை. தன் அவமானத்தை துடைக்க ஜே.பி. புதிவதன திருவிழாவில் சுனைனாவின் தந்தையை திட்டம் போட்டு கருவறுக்கிறார். அதன் பின்னணியில் சுனைனா ஜே.பி. யை முச்சந்தியில் வைத்து அவமானபடுத்த( இந்த இடத்தில் சுனைனாவின் நடிப்பு அற்புதம் ), அதன் பின் வரும் ஆபத்திலிருந்து சுனைனாவை அருள்நிதி காப்பாற்றுகிறார். இருவரின் காதலுக்கு ஆபத்து வருகிறது. ஜே.பி யின் மகன் அருள்நிதியை கொன்று அந்த வம்சத்தை வேரோடு அழிக்க திட்டம் போடுகிறார். அருள்நிதி தான் காதலித்த பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு தன் வம்சத்தை வளர்க்கிறேன என மார்தட்டுகிறார்.

இடையில் வரும் அருள்நிதியின் அப்பாவை பற்றிய அத்தியாயம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. படம் முழுக்க ஆங்காங்கே அவசரத்தனம் தெரிகிறது. சில காட்சிகளில் நம் மனது ஒட்டவில்லை. அதற்கு காரணம் படத்தின் பின்னணி இசை கூட காரணமாக இருக்கலாம்.

கதை தேடுகிறேன் என்ற பெயரில் DVD கடைகளில் தன் நேரத்தை தொலைத்து, தன் அறிவுத்திறனை மழுங்கடிக்க வைக்கும் பலருக்கு இடையில் தன்னைச் சுற்றி நடக்கும் அதிர்வுகளை, நிகழ்வுகளை பதிவு செய்ய முற்படும் இயக்குநர் பாண்டிராஜின் முயற்சிக்கு ஒரு சல்யூட் அடிக்க வேண்டும் என தோன்றுகிறது.

மழைக்காலத்தில் நீயும் நானும்












மாலையின் நிழலில்
உன் கைகோர்த்து நடக்கிறேன்.

உன் இடைவிடா மௌனம்
உன் உள்ளங்கையின் அதிர்வின் வழி
என் ஞாபகத்தை கலைக்கிறது.

காற்றின் மெல்லிய விரல்கள் பட்டு
உன் கேசம் என் முகத்தில்
விளையாட
ஒதுக்கிவிட உனக்கும் தோன்றவில்லை
தடுத்துவிட எனக்கும் மனமில்லை.

காற்றின் வேகம் அதிகரிக்க
கருமேகத்தின் அடர்த்தி - வானில்
காதலின் அடர்த்தி - நம் மனதில்

ஒரு துளி விழுந்து நம் கைவிரல்களின் - வழி
இருவரின் உள்ளங்கைகளுக்கு
இடையில் நகர்கிறது.

அந்த ஒரு துளியின் பயணத்தை
தொடர்ந்து சில துளிகள். பின் பல துளிகள்

இடைவிடாமல் வந்த மழைத்துளிகளால்
நமக்குள் இடைவெளியில்லாமல் போனது.

உன் மூச்சிக்காற்றின் வெப்பம்
என் முகத்தில் இழைய
என் விடுதலை உணர்வுகள்
வெப்பம் கொண்டன.

வெளியே மழையின் குளிர்
நம்மை விழுங்கி கொண்டிருக்கிறது.
உள்ளே வெப்பத்தின் வேர்கள்
என்னை உன்னோடு எரிக்க ஆரம்பிக்கிறது.

Thursday, August 12, 2010

நூறு ரூபாய் நோட்டு










நீங்கள் செலவழிக்கப் போகும்
இந்த நூறு ரூபாயின் முன் கதை
உங்களுக்குத் தெரியுமா?

யாரோ ஒருவன்
அவசரத்தில் சாலையோரமாய்
தொலைத்திருக்கலாம்.

கூலித் தொழிளாளியின்
பொக்கிஷமாக சிலகாலம்
இருந்திருக்கலாம்.

ஒரு விபச்சாரியின் வெப்பத்தால்
தழுவப்பட்டிருக்கலாம்.

ஒருவனின் போதை மயக்கத்தை
சற்று நேரம் நீட்டித்திருக்கலாம்

பேச்சுலர் பார்ட்டி என
பத்தோடு பதினொன்றாய்
நழுவியிருக்கலாம்.

திருடனின் கையிலிருந்து
மீண்டு வந்திருக்கலாம்

லஞ்சத்தின் ரேகை அதன்
மேல் கவிழ்ந்திருக்கலாம்

இப்படி ஆயிரமாயிரம்
கதைகள் இருக்கிறது.

ஒருமுறைக்கு பல முறை
யோசித்துக் கொள்ளுங்கள்
இந்த நூறு ரூபாயை - நீங்கள்
என்ன காரணத்திற்காக செலவழிக்கப்போகிறீர்கள்?

சே குவேராவின் கடிதங்கள் - மூத்த மகள் ஹில்டாவுக்கு எழுதிய கடிதம்




















அன்புள்ள ஹில்டா,

இந்தக் கடிதத்தை நீ நீண்ட காலத்துக்குப் பிறகுதான் படிப்பாய். உன்னைப் பற்றித்தான் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

இப்போது நீ வளர்ந்து விட்டிருப்பாய். ஒரு குழந்தைக்கு எழுதுவதைப் போல செல்லம் கொஞ்சி எழுத முடியாது.

நான், உன்னை விட்டு வெகு தொலைவில், நமது எதிரிகளுடன் போரிட்டுக் கொண்டிருக்கிறேன்.

நான், உன்னைப் பற்றி பெருமையாக நினைத்துக் கொண்டிருப்பதைப் போல நீயும் உன் தந்தையை நினைத்து பெருமை படுவாய் என நினைக்கிறேன். இல்லை அதுதான் உன் அப்பாவின் நம்பிக்கை.

இந்த போராட்டம் இன்னும் நீண்ட காலம் நீடிக்கும். எனவே நீயும் இதில் உன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அதற்காக உன்னை நீ தயார் செய்து கொள்ள வேண்டிய தருணம் இது.

புரட்சிகர எண்ணங்களை உனக்குள் விதைத்துக் கொள். படி, படி, படித்துக் கொண்டே இரு. அம்மாவின் அசைவுகளை கவனித்து அதன் படி நட.

எல்லாவற்றிலும் நீதான் சிறந்தவள் என பெயரெடுக்க வேண்டும். நன்னடத்தை, அற்பணிப்பு, அன்புணர்வு போன்றவை உன் குணங்களாக இருக்க வேண்டும்.

உன்னுடைய வயதில் என் நிலை வேறு மாதிரியானது. ஆனால் இன்றைய சூழ்நிலைக்கு ஏதுவாக உன்னை நீ மாற்றிக் கொள்ள வேண்டும்.

பெரிய மனுஷியே! உனக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள், இறுதியாய் உன்னைப் பார்த்த நாளிலிருந்து இந்த நாள் வரைக்கும் சேர்த்து உன்னை ஆரத் தழுவிக் கொள்கிறேன்.

- அப்பா

Wednesday, August 11, 2010

பாணா காத்தாடி - நடுவானில் பறக்கிறது.


எல்லோருக்கும் எப்படி இந்த இரவை போக்குவது என்று ஓர் இரவு வரும். அது போல் நானும் ஒரு இரவை எப்படி தொலைப்பது என தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். இருந்த படங்களையெல்லாம் பார்த்தாகிவிட்டது. அந்த இரவின் மூன்று நாட்களுக்கு முன்புதான்
INCEPTION படத்தை நானும் நண்பனும் பார்த்துவிட்டு சிலாகித்துக் கொண்டிருந்தோம். அது சரி இந்த இரவை என்ன செய்வதென யோசிக்கும் போது நண்பன் பாணா காத்தாடி போகலாம் என ஐடியா தர எனக்கோ பயம். ஏனென்றால் அதை பற்றிய விமர்சனங்களெல்லாம் மொக்கையாக இருந்தன. சரி வா வெட்டியாக தொலையப் போகும் இந்த இரவை பாணா காத்தாடியில் தொலைக்கலாம் என முடிவெடுத்தோம்.

பாணா காத்தாடி, காத்தாடி விடும் ஒரு குப்பத்துப் பையனை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம். வழக்கம் போல குப்பத்துப் பையனுக்கும் கோபுரத்து நாயகிக்கும் வரும் காதலை ( காதல்தான் எங்கே இருக்கிறதென தெரியவில்லை ) சொல்லுகிற படம். படத்தின் ஆரம்பத்திலேயே நூல் அறுந்து போன பட்டம் ஒன்றை துரத்திக் கொண்டு நாயகன் குழு செல்கிறது. அப்படிப் போகிற அந்த அபூர்வப் பயணத்தில்தான் ஹீரோ ஹீரோயினை மோதுகிறார். ஹீரோயினின் PEN DRIVE ஹீரோவுக்கு தெரியாமலே ஹீரோவிடம் மாட்டிக் கொள்கிறது. அந்த PEN DRIVE ஐ தேடி ஹீரோயின் ஹீரோவிடம் வருகிறார். ஹீரோ குரூப்புக்கு பார்ட்டி வைக்கிறார். அப்படியும் இப்படியுமாக அவர்களின் சந்திப்பு தொடர்கிறது. ஹீரோவாக அதர்வா, ஹீரோயினாக சமந்தா நன்றாக நடித்திருக்கிறார்கள்.

இதற்கிடையில் காமெடிக்கு கருணாஸ், ஆக்‌ஷனுக்கு பிரசன்னா என கதையில் சில கதாபாத்திரங்கள் வருகிறது. இந்த இரண்டு கேரக்டரும் படத்தினுள் ஒட்டாமல் வந்தாலும் போரடிக்கவில்லை. அப்பாவின் சட்டை பையில் வைக்கும் பணம் எங்கே போகிறது என வரும் காமெடி தமிழ் சினிமாவுக்கு ரொம்ப ரொம்ப புதுசாக இருக்குமோ( அட என்னப்பா ) என நினைத்து வைத்திருக்கிறார்கள். மற்ற படி கருணாஸ் வழக்கம் போல சிரிக்க வைக்கிறார். பிரசன்னாவின் அழுத்தமான நடிப்பு அவர் வரும் காட்சிக்குண்டான உணர்வுகளை அப்படியே பிரதிபலிக்கிறது. ஆனால் ஹீரோவின் நண்பன் அம்மாவிற்காக பிரசன்னாவிடம் வேலை தேடிப் போய் உயிரை விடுவது எந்த வகையில் கதைக்கு பலம் சேர்க்கிறதென தெரியவில்லை. இதெல்லாம் சரி... நடிகர் முரளி வேறு வந்து காதலை பற்றி பேசுகிறார். ஒரே ஒரு குறை அவர் கையில் மைக் இல்லை. (நல்ல வேலை பூ இருந்தது)

+டூ படிக்கிற பைனுக்கும் பேஃஷன் டெக்னாலஜி படிக்கும் பெண்ணுக்கும் வயது வித்தியாச காதலா என்கிற கேள்விக்கு அற்புதமான பதில் வைத்திருக்கிறார்கள் ( அந்த பதிலை தியேட்டரில் போய் தெரிந்து கொள்ளுங்கள் ). அந்த காதல் மீண்டும் ஒரு அற்புதமான காரணத்தால் பிரிக்கப்படுகிறது. அதன் பின் அவர்கள் எப்படி இணைகிறார்கள் என்பதுதான் கதை என்பது உங்களுக்கும் தெரியும்.

இதன் நடுவே பிரசன்னா குழு ஒரு எக்ஸ் எம்.எல்.ஏ வை போடும் போது காதல் பிரிந்த வேதனையில் இருக்கும் அதர்வா அதை பார்த்து விடுகிறார். பிரசன்னாவின் ஆள் ஒருவன அதர்வாவை போட எத்தனிக்கும் போது பிரசன்னா தடுத்து விடுகிறார். பணம் கொடுத்து ஊரை விட்டு போகும் படி அதர்வாவை பிரசன்னா எச்சரிக்க ஹீரோ குஜராத் கிளம்பிப் போய் பட்டம் விட்டு ஜெயிக்கிறார். மீண்டும் சென்னை வருகிறார். இருந்தாலும் போலிஸ் அந்த கேஸை நோண்டிக் கொண்டிருக்க பிரசன்னாவே அதர்வாவை போட்டுத் தள்ள வேண்டிய சூழல் வருகிறது. பிரசன்னா அதர்வாவை கொன்றாரா? நாயகியின் காதல் ஜெயித்ததா? என்பதுதான் படத்தின் இறுதி. ஆனால் அந்த இறுதி ட்விஸ்ட். அப்பா... இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத ஒன்று?

( படிப்பவர்கள் சிரிக்க வேண்டாம் )

மொத்தத்தில் என்னைப் பொறுத்தவரை படத்தின் எந்த கட்டத்திலும் எனக்கு போரடிக்க வில்லை. ஏண்டா இந்த படத்துக்கு வந்தோம் என சில படங்கள் உண்டு. ஏண்டா இந்த படம் இவ்வளவு சீக்கிரம் முடிகிறதென சில படங்கள் உண்டு. ஆனால் பாணா காத்தாடி இதன் இரண்டுக்கும் நடுவில் இருக்கிறது.

தியேட்டர் கமெண்ட்ஸ்

படம் முடிந்து வெளிவரும் போது சக பார்வையாளர்கள் பேசிக் கொண்ட கமெண்ட்ஸ் இது

  1. பரவால்லடா, படம் போரடிக்கல. பாட்டெல்லாம் நல்லாருந்துச்சி

  1. பாணா காத்தாடி அறுந்து போச்சி.

  1. நல்ல டைம் பாஸ். ஒரு தடவை பாக்கலாம்.

  1. படம் ஓடிடும்...

Monday, August 9, 2010

சே குவேராவின் இறுதிக் கடிதம்

ஃபிடல்,

இந்த நேரத்தில் எனக்குப் பல விஷயங்கள் நினைவுக்கு வருகின்றன. உங்களை மரியா அந்தோனியாவின் வீட்டில் சந்தித்தது; உங்களுடன் வர என்னை நீங்கள் அழைத்தது; புறப்படத் தயாரானபோது நமக்கு ஏற்பட்ட பரபரப்பு.

நடக்க இருக்கும் விபரீதம் எனக்கு எப்போது புரிந்தது தெரியுமா? நீங்கள் இறந்துபோனால் யாருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று ஒரு நாள் அவர்கள் வந்து கேட்டார்கள். பிறகு, எல்லாம் புரிந்துவிட்டது. ஒரு புரட்சியின் முடிவு, வெற்றி அல்லது வீரமரணம் என்பதைப் புரிந்துகொண்டேன்.

இன்று, நாம் வளர்ச்சி அடைந்திருக்கிறோம். அன்று போல் இல்லாமல் பக்குவப்பட்டிருக்கிறோம். ஆனால், கடந்த காலம் மீண்டும் திரும்புகிறது. க்யூப மண்ணில் நிகழ்ந்த க்யூபப் புரட்சியில், எனக்கு அளிக்கப்பட்டிருந்த கடமைகளை நான் நிறைவேற்றிவிட்டேன் என்று நினைக்கிறேன்.

ஆகையால், நான், உங்களிடமிருந்தும் நமது தோழர்களிடமிருந்தும், என்னுடைய க்யூப மக்களிடமிருந்தும் விடைபெறுகிறேன்.

கட்சியின் தலைமையில் என்னுடைய பொறுப்புகளிலிருந்தும், அமைச்சர் பதவியில் இருந்தும், மேஜர் பொறுப்பிலிருந்தும், க்யூபாவின் பிரஜைக்கான உரிமையிலிருந்தும் நான் விலகுகிறேன். இனி, எனக்கு க்யூபாவுடன் சட்ட ரீதியான எந்த உறவும் இல்லை. ஆனால், வேறு வகையில் பிணைப்புகள் உள்ளன. நிச்சயமாக அவற்றை என்னால் உதறித்தள்ள முடியாது.

கடந்த காலத்தை திரும்பிப் பார்க்கும்போது, புரட்சியின் வெற்றியை உறுதிப்படுத்த, நான் நேர்மையாகவும் அர்ப்பணிப்போடும் செயல்பட்டு வந்தேன் என்றே நம்புகிறேன். நான் செய்த ஒரே தவறு என்ன தெரியுமா? சியாரா மிஸ்த்ரா மலைத்தொடரில் கழித்த முதல் சில தினங்களில் உங்கள் மீது மேலும் அதிக நம்பிக்கை வைக்காதது. ஒரு புரட்சியாளராக, ஒரு தலைவராக பரிமணித்த உங்கள் குணாதிசயங்களை உடடியாகப் புரிந்துகொள்ள தவறியது.

கரீபிய சிக்கல் கொழுந்து விட்டு எரிந்துக் கொண்டிருந்த அந்த சோகமான, ஆனால் துடிப்பு மிக்க காலகட்டத்தில், உங்களுடன் சேர்ந்து, நமது மக்களின் பக்கம் நின்ற தருணத்தை இன்றும் பெருமையுடன் உணர்கிறேன். உங்களைப் போல் ஒரு தலைவர் செயல்படுவது அபூர்வமானது. உங்களை தயக்கம் இன்றி பின்பற்றியதற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

என்னுடைய எளிமையான முயற்சிகளும் உதவிகளும் வேறு சில நாடுகளுக்குத் தேவைப்படுகிறது. க்யூபாவின் தலைவராக நீங்கள் இருப்பதால் உங்களுக்கு மறுக்கப்பட்டதை என்னால் செய்ய முடியும் என்று நம்புகிறேம்.

ஆக, நாம் பிரிய வேண்டிய நேரம் வந்துவிட்டது.

ஒரு பக்கம் மகிழ்ச்சியோடும் மறு பக்கம் துயரத்தோடும் நான் என் பயணத்தை மேற்கொள்கிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். என் நேசத்துக்குரிய மக்கள் ஒரு சிறப்பான சமுதாயத்தை கட்டி எழுப்புவார்கள் என்ற என் நம்பிக்கையை இங்கே விட்டுவிட்டு பிரிகிறேன். புதிய போராட்டக் களங்கள் காத்திருக்கின்றன.

நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருப்பேன். ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடுவதை புனித கடமையாக மேற்கொள்வேன். அதை நிறைவேற்றவும் செய்வேன். இதுதான் என்னுடைய பலத்துக்கு ஆதாரமாக இருக்கிறது.

எங்கோ, கண் காணாத இடத்தில் முடிவு என்னை நெருங்குமானால், அந்தக் கடைசி தருணத்தில் க்யூப மக்களையும், குறிப்பாக உங்களையும்தான் நினைத்துக் கொண்டிருப்பேன்.

எனக்கு கற்றுக்கொடுத்ததற்கும் அதற்கு நீங்களே ஒரு உதாரணமாக விளங்கியதற்கும் என் நன்றி. என்னுடைய செயல்களின் விளைவுகள் உங்கள் நம்பிக்கைக்கு பங்கம் விளைவிக்காமல் இருக்க முயல்வேன். நமது புரட்சியின் அயல்நாட்டு கொள்கையோடு எப்போதும் அடையாளம் காணப்பட்டவன் நான். இப்போதும், அது தொடர்கிறது. நான் எங்கு இருந்தாலும், ஒரு க்யூபப் புரட்சியாளனின் பொறுப்புணர்வோடு இருப்பேன்.

எனது மனைவி, மக்களுக்கு எந்த சொத்தையும் நான் விட்டுச் செல்லவில்லை. அதற்காக வருத்தப்படவும் இல்லை. உண்மையில் எனக்கு மகிழ்ச்சிதான். அவர்கள் வாழ்வதற்கு தேவையானவற்றை கவனித்துக்கொள்வதற்கும், குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதற்கும் ஓர் அரசாங்கம் இருக்கிறது.

இன்னும் பல விஷயங்களை உங்களிடமும், நமது மக்களிடமும் சொல்ல விருப்பம். ஆனால் தேவையில்லை என்றே நினைக்கிறேன். நான் சொல்ல விரும்புவதை வெளிப்படுத்தும் சக்தி வார்த்தைகளுக்கு இல்லை. காகிதங்கள் வீணாவதைத் தவிர வேறு பயன் ஏதும் ஏற்பட்டுவிடப்போவதில்லை.

நமது முன்னேற்றம் எப்போதும் வெற்றியை நோக்கியே. வெற்றி அல்லது வீரமரணம்.

என் முழுமையான புரட்சிகரமான உணர்ச்சி வேகத்துடன் உங்களை ஆரத் தழுவிக்கொள்கிறேன்.

சே.