Saturday, November 23, 2013

அதிர்வுகள்

யாரோ சொல்வது போல்
சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள்... 
யாரோ அதை கேட்பது போல்
கேட்டுக் கொண்டேயிருக்கிறார்கள்.... 

யாராவது சொல்லி
யாராவது கேட்டு - இங்கே
யாரவது அதன்படி 
நடந்திருக்கிறார்களா என்ன??? 

என்னைப் பொறுத்தவரை
சொல்லப்படுவதும்
கேட்கப்படுவதும்
இயற்கையின் இயல்பானதொரு
அதிர்வின் வெளிப்பாடே... 

நாம் வாழ்வது இந்த உலகத்தில் என்று 
எண்ணப்படுவதாய் கருதப்படும் வேளையில்
இங்கே உலகம் என்பது - நமக்கு
ஆறறிவு இருக்கிறது என்ற
மமதையில் நாம் அதற்கு 
வைத்துக் கொண்ட பெயராகவே
எனக்குத் தோன்றுகிறது... 

யாருக்கும் யாவும் 
தெரிந்திருக்க வேண்டும் 
என்றதொரு முனைப்புடன் 
இங்கே செயல்படும் போது... 

இயற்கை என்று கருதப்பட்ட 
கண்களால் அடக்க முடியாத
இந்த பரந்த பசுமையான மற்றும் 
உலர்ந்த பெரு வெளி 
அவ்வப்போது பல அதிர்வுகளில்
தன் வெளிப்பாட்டை இடைவிடாமல்
நமக்கு உணர்த்தியவாறே இருக்கிறது.... 

அதிர்வு என்றால் பூகம்பம்தான்
என்று நினைப்பவர்களுக்கெல்லாம் - என் செய்வேன்??? 
தனக்குள் மட்டும் அதிர்ந்தவாறு
ஒரு பூ பூப்பது கூட - இந்த இயற்கை
தருவிக்கும் அதிர்வின் வெளிப்பாடுதான்
என்பதை எப்படி புரியவைப்பது... 

பூ மட்டுமல்ல... 
தோன்றியதாக
எண்ணப்பட்ட யாவையும் - ஏன்
படைப்பிலேயே உயர்வானது
உன்னதமானதென நமக்கு நாமே
மார்தட்டிக் கொண்டிருக்கிற

ஆறறிவு அதிசயம் என அடிக்கடி
அழுத்தமாக பிதற்றபட்டுக் கொண்டிருக்கிற - நாம் கூட 
அதிர்வுகளின் அழுத்தத்தில்தான் 
தோற்றுவிக்கப்பட்டோம் என்பதை 
இந்த இயற்கை எப்போதும் 
உணர்த்திக் கொண்டேதான் இருக்கிறது... 

No comments: