Saturday, November 23, 2013

மௌனங்களின் கூர்வாள்கள்

யாரிடம் எப்படி பேச வேண்டும்
யாரிடம் எவ்வளவு இடைவெளி விட வேண்டும்
யாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்... 

நீ நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்
என அப்பா சொல்லும் போதெல்லாம்
மெலிதாக சிரித்துக் கொண்டு போய் விடுவேன்... 

ஒரு மரம் போல்
ஒரு பறவை போல்
ஒரு மிருகம் போல்
நான் ஒரு உயிர் - அவ்வளவே...

சந்திக்கும் ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு முகம் காட்டி
ஒவ்வொரு வேஷம் காட்டி
என்னை வெளிப்படுத்த வேண்டிய
அவசியத்தை என் படைப்பின் மூலமான
இந்த இயற்கை
ஏன்னில் ஏற்படுத்தியதேயில்லை...

என்னைப் பற்றிய
என் வாழ்வின் சூழலோடு
என்னைச் சுற்றியிருப்பவர்களின்
வார்த்தைகளின் அர்த்தங்கள் என் சுயத்திற்கு
முற்றிலும் புறம்பானதாக இருக்கிறது...

எனது சுயத்தின் பிம்பமும்
அவர்களுக்குள் ஞாபகமாய் இருக்கும்
எனது பிம்பமும்
பொருந்துவதேயில்லை...

3 வருடங்களாய், 6 வருடங்களாய்
என் பிம்பத்தை ஏதோ ஒரு சூழ்நிலையில்
அவர்களின் வெவ்வேறு தருணங்களில்
வரும் உணர்ச்சிகளோடு சேர்த்து
உள்வாங்கிக் கொண்டு அதை வைத்து
என்னை வரையறுக்கிறார்கள்....

32 வருடங்களாய் என்னை எனக்குத்
தெரிந்திருக்கும் தருணத்தில் - எனக்குள்
இடையில் வந்து பின் இடையில் போன
இவர்களுக்கென்ன அருகதை இருக்கிறது
என்னைப் பற்றி வரையறுக்க !!!

அவர்களுக்கெல்லாம் எப்போதும்
என்னிடமிருந்து வரும் பதில்
என் மௌனங்கள்தான்...
ஆனால் அந்த மௌனங்கள் ஒவ்வொன்றும்
பல அழகிய கூர்வாட்களாய்
பட்டை தீட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

No comments: