Tuesday, November 26, 2013

கோபமாய் நீயும் அன்புடன் நானும் !!!

நான் பிறந்து இந்த 
மண்ணில் விழுந்த - அதே நேரத்தில்
எனக்குள்ளும் ஒரு குழந்தை பிறந்தது... 

அவ்வப்போது 
எனக்குள் வளரும்
அந்த குழந்தையை 
களவாடும் நோக்கிலோ
காயப்படுத்தும் நோக்கிலோ 
நீ அவதாரம் எடுக்கிறாய்... 

ஏன் சில சமயம் அதை
கொன்று போடவும் செய்கிறாய்...

எத்தனை முறை நீ கொன்றாலும்
மீண்டுமொரு குழந்தையை
உயிர்ப்பிக்கும் வல்லமை பெற்றவன் நான்...

ஒன்றை மட்டும் நீ உணர்ந்து கொள் !!!

மீண்டும் மீண்டும் கொல்வதால்
நீ பலவீனமாகிக் கொண்டிருக்கிறாய்
மீண்டும் மீண்டும் உயிர்ப்பிப்பதால்
நான் பயமற்றவனாகிறேன்...

உன் களவாடும் புன்னகை

யாருக்கும் தெரியாமல்
யாரோ என்னை களவாடியது 
போன்றதொரு உணர்வு... 

சட்டென நிமிர்ந்தேன்... 

மென் புன்னகையுடன் 
என்னை உற்றுப் பார்த்தவாறு
உன் தோழிகளுடன்
நீ நடந்து செல்கிறாய்...

Saturday, November 23, 2013

தூக்கமும் நீயும்

தூக்கம் வரும் போதெல்லாம்
என் அருகில் இருளின் 
இன்னொரு பிம்பமாக - நீ 
வந்தமர்ந்து கொள்கிறாய்... 

நான் தூங்குவதா... 
இல்லை உன்னையே
பார்த்துக் கொண்டிருப்பதா ??? 

எப்போதும் போல என் இந்த
கேள்விக்கும் உன் காந்தக் கண்களை
உருட்டிக் காண்பிக்கிறாய்...

உன் கண்களின் இமை
விளிம்பில் என் தூக்கம் - 

நொடிப்பொழுதில்  தூக்கிலேற்றப்படுகிறது....

முட்டாள்தனமான பதில் !!!

நீ பஸ் வராமல் 
தவித்ததொரு வேளையில்
எனக்கான பஸ் வந்தாலும் 
உன்னை விட்டு விட்டு 
எப்படி என -அதில்
ஏறாமல் ஏதோவென்பது போல்
உன்னைப் பார்த்து 
“இதுவல்ல எனது பஸ்” 
எனச் சொல்வேன்...

முட்டாள்தனமான பதில்தான்...
ஆனால் நீ அதற்குத்தான்
சிரித்து வைப்பாய்...

எங்காவது புத்திசாலித்தனமான
வார்த்தைகளுக்கு உன் போன்ற
பெண்கள் சிரித்திருக்கிறார்களா என்ன???

ஆறுதல் பெண்ணே

நான் அழும் நேரத்திலெல்லாம்
உன் ஞாபகம் வருகிறது... 
என் அழுகைக்கு பின்னால் 
வரும் அழகானதொரு அமைதியாய் 
என்னை தழுவிக் கொள்ள 
நீ ஒரு போதும் தயங்குவதில்லை !!!

அதிர்வுகள்

யாரோ சொல்வது போல்
சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள்... 
யாரோ அதை கேட்பது போல்
கேட்டுக் கொண்டேயிருக்கிறார்கள்.... 

யாராவது சொல்லி
யாராவது கேட்டு - இங்கே
யாரவது அதன்படி 
நடந்திருக்கிறார்களா என்ன??? 

என்னைப் பொறுத்தவரை
சொல்லப்படுவதும்
கேட்கப்படுவதும்
இயற்கையின் இயல்பானதொரு
அதிர்வின் வெளிப்பாடே... 

நாம் வாழ்வது இந்த உலகத்தில் என்று 
எண்ணப்படுவதாய் கருதப்படும் வேளையில்
இங்கே உலகம் என்பது - நமக்கு
ஆறறிவு இருக்கிறது என்ற
மமதையில் நாம் அதற்கு 
வைத்துக் கொண்ட பெயராகவே
எனக்குத் தோன்றுகிறது... 

யாருக்கும் யாவும் 
தெரிந்திருக்க வேண்டும் 
என்றதொரு முனைப்புடன் 
இங்கே செயல்படும் போது... 

இயற்கை என்று கருதப்பட்ட 
கண்களால் அடக்க முடியாத
இந்த பரந்த பசுமையான மற்றும் 
உலர்ந்த பெரு வெளி 
அவ்வப்போது பல அதிர்வுகளில்
தன் வெளிப்பாட்டை இடைவிடாமல்
நமக்கு உணர்த்தியவாறே இருக்கிறது.... 

அதிர்வு என்றால் பூகம்பம்தான்
என்று நினைப்பவர்களுக்கெல்லாம் - என் செய்வேன்??? 
தனக்குள் மட்டும் அதிர்ந்தவாறு
ஒரு பூ பூப்பது கூட - இந்த இயற்கை
தருவிக்கும் அதிர்வின் வெளிப்பாடுதான்
என்பதை எப்படி புரியவைப்பது... 

பூ மட்டுமல்ல... 
தோன்றியதாக
எண்ணப்பட்ட யாவையும் - ஏன்
படைப்பிலேயே உயர்வானது
உன்னதமானதென நமக்கு நாமே
மார்தட்டிக் கொண்டிருக்கிற

ஆறறிவு அதிசயம் என அடிக்கடி
அழுத்தமாக பிதற்றபட்டுக் கொண்டிருக்கிற - நாம் கூட 
அதிர்வுகளின் அழுத்தத்தில்தான் 
தோற்றுவிக்கப்பட்டோம் என்பதை 
இந்த இயற்கை எப்போதும் 
உணர்த்திக் கொண்டேதான் இருக்கிறது... 

கள்ளி

நீ வந்து போன
கண நேர நிகழ்வுகளில்
எனக்குள் மௌனங்களின் பேரலை

என் மௌனச் சுவரில்
அங்கங்கே உன் 
பெயரை கிறுக்குகிறேன்... 

குழந்தையின் கை விரல்களில்
இருந்து பிடுங்குவது போல்
என்னிடமிருந்து - சில 

மென் அதிர்வுகளோடு - உனக்கான
காதலை நீ பிடுங்கிக் கொண்டாய் !!!!

நேற்று இன்று நாளை

நேற்று உன் கண்களில்
உன்னைப் பார்த்தேன்
இன்று உன் கண்களில்
என்னைப் பார்த்தேன்

நாளை ?... 
ஒரு வேளை நம் கண்கள் 
வழியாக இந்த உலகம்
தன்னையே பார்த்துக் கொள்ளுமோ ???

மௌனங்களின் கூர்வாள்கள்

யாரிடம் எப்படி பேச வேண்டும்
யாரிடம் எவ்வளவு இடைவெளி விட வேண்டும்
யாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்... 

நீ நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்
என அப்பா சொல்லும் போதெல்லாம்
மெலிதாக சிரித்துக் கொண்டு போய் விடுவேன்... 

ஒரு மரம் போல்
ஒரு பறவை போல்
ஒரு மிருகம் போல்
நான் ஒரு உயிர் - அவ்வளவே...

சந்திக்கும் ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு முகம் காட்டி
ஒவ்வொரு வேஷம் காட்டி
என்னை வெளிப்படுத்த வேண்டிய
அவசியத்தை என் படைப்பின் மூலமான
இந்த இயற்கை
ஏன்னில் ஏற்படுத்தியதேயில்லை...

என்னைப் பற்றிய
என் வாழ்வின் சூழலோடு
என்னைச் சுற்றியிருப்பவர்களின்
வார்த்தைகளின் அர்த்தங்கள் என் சுயத்திற்கு
முற்றிலும் புறம்பானதாக இருக்கிறது...

எனது சுயத்தின் பிம்பமும்
அவர்களுக்குள் ஞாபகமாய் இருக்கும்
எனது பிம்பமும்
பொருந்துவதேயில்லை...

3 வருடங்களாய், 6 வருடங்களாய்
என் பிம்பத்தை ஏதோ ஒரு சூழ்நிலையில்
அவர்களின் வெவ்வேறு தருணங்களில்
வரும் உணர்ச்சிகளோடு சேர்த்து
உள்வாங்கிக் கொண்டு அதை வைத்து
என்னை வரையறுக்கிறார்கள்....

32 வருடங்களாய் என்னை எனக்குத்
தெரிந்திருக்கும் தருணத்தில் - எனக்குள்
இடையில் வந்து பின் இடையில் போன
இவர்களுக்கென்ன அருகதை இருக்கிறது
என்னைப் பற்றி வரையறுக்க !!!

அவர்களுக்கெல்லாம் எப்போதும்
என்னிடமிருந்து வரும் பதில்
என் மௌனங்கள்தான்...
ஆனால் அந்த மௌனங்கள் ஒவ்வொன்றும்
பல அழகிய கூர்வாட்களாய்
பட்டை தீட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன.