Wednesday, February 3, 2016

பறக்கிறேன்...

என் தனிமையின்
இறக்கைகள் அடிக்கடி
உடைந்து விடுகிறது...
அதை சரி செய்யும் நினைவுகளை
மீண்டும் மீண்டும்
மீட்டெடுக்க முயற்சிக்கிறேன்...
ஆச்சரியம் என்னவெனில்
உன்னைப் பற்றிய - ஒவ்வொரு
நினைவும் எனக்கு புதிதான
இறக்கைகளை இலவசமாக
தந்துவிடுகிறது....
பறக்கிறேன்... பறந்து கொண்டேயிருக்கிறேன்...
உன் நினைவுகளை மாற்றும் போது
இறக்கைகளும் மாறிக் கொண்டேயிருக்கின்றன...
நானும் மாறிக் கொண்டிருக்கிறேன்...
உயர உயர பறக்கும் வேளையில் சற்றே
திரும்பிப் பார்த்தேன்... உன்னுடனான
ஆயிரக்கணக்கான நினைவுகளில்
என் ஆயிரக்கணக்கான பிம்பங்கள்
பறந்து கொண்டிருப்பதை நானே பார்க்கிறேன்...

கிறுக்கு பிடித்த கவிதையே !!!

ஒவ்வொரு முறையும்
உன்னிடம் ஏதோ சொல்ல
வேண்டுமென ஏதேதோ
பேச ஆரம்பிக்கிறேன்...
சொல்லிக் கொண்டிருக்கும்
அந்த ஏதேதோவில் நான்
சொல்ல வந்த ஏதோவை
ஒளித்து வைத்து ஏதேதோ
சொல்லிக் கொண்டிருக்கிறேன்...
நான் சொல்லிக் கொண்டிருக்கும்
ஏதேதோ-க்களில் இருக்கும் முக்கியமான
அந்த ஏதோவை நீ கண்டு கொண்டாலும்
எதுவுமே தெரியாதது போல்
ஏண்டா நீ இப்படி இருக்கிறாய் என
எனோதானோவென என்னை
புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறாய்...
நானும் ஒளித்து வைத்த எதோவை
திரும்ப எனக்குள்ளாகவே
பத்திரப்படுத்தி வைத்துக் கொள்கிறேன்...
இன்னொரு நாளில்,
இன்னொரு சந்தர்ப்பத்தில்,
உனது இன்னொரு புன்னகையை
காண்பதற்காக...

தனித்திருப்பாய்

யாரோ யாருடனோ சேர்ந்து
நடக்கும் போதோ,
காஃபி ஷாப்பில் இருவர்
மாறி ஒருவராய் அமர்ந்திருக்கும் போதோ,
பார்க்கிலோ, பீச்சிலோ குறுகுறுவென
சுற்றும் இரு ஜோடிக் கண்களை கடந்து போகும் போதோ
உன் ஞாபகம் எனக்கு தோன்றுவதில்லை...
ஆனால்
எங்காவது தனிமையில் எதிர்படும்
ஒரு பெண்ணை பார்த்தவுடன் மனம்
உன்னைத்தான் ஞாபகப்படுத்துகிறது...
நீயும் எங்காவது இப்படித்தானே
தனித்திருப்பாய் என !!!