அழ வேண்டுமா அழு சிரிக்க வேண்டுமா சிரி... கோபமா... ஆற்றாமையா... வெறுமையா... மகிழ்ச்சியா... ஆனால் - இவை எல்லாவற்றிற்கும் முன்னால் ஏன் எதையோ ஒன்றை அதற்கான காரணமாக சித்தரித்துக் கொள்கிறாய்???
ஒரு உயர்ந்ததொரு மௌனத்தின் உச்சியில் அமர்ந்திருக்கிறது... உனக்கும் எனக்குமான பேசப்படாத வார்த்தைகள்...
சில நேரம் அந்த வார்த்தைகளை நான் உச்சரித்துப் பார்க்கிறேன்...
நீ அப்பொழுதும் என் முன் மௌனமாய் நிறைந்திருக்கிறாய்...
உன் பதிலில்லா ஒவ்வொரு மௌனத்தின் பின்னணியிலும் நான் உன்னை விட்டு மெல்ல மெல்ல விலகி நடந்து கொண்டிருக்கிறேன்...
என்றாவது ஒரு நாள் நீ அந்த பேசப்படாத வார்த்தைகளை உச்சரிக்கும் போது - நான் அதை கேட்க இயலாத தொலைவில் நடந்து கொண்டிருப்பேன் - உன் பொய்யானதொரு மௌனத்தை சுமந்தபடி...
இன்னும் எத்தனை முறை இந்த புத்தகத்தின் பக்கங்களை திருப்ப வேண்டுமென தெரியவில்லை...
திரும்ப திரும்ப திருப்பிக் கொண்டேயிருக்கிறேன்... என்னை தொடர்ந்து அதை முதலிலிருந்து திருப்புவதற்காக - இன்னொருவன் எப்போதும் காத்துக் கொண்டேயிருக்கிறான் !!!
என் தனிமையின் இறக்கைகள் அடிக்கடி உடைந்து விடுகிறது...
அதை சரி செய்யும் நினைவுகளை மீண்டும் மீண்டும் மீட்டெடுக்க முயற்சிக்கிறேன்...
ஆச்சரியம் என்னவெனில் உன்னைப் பற்றிய - ஒவ்வொரு நினைவும் எனக்கு புதிதான இறக்கைகளை இலவசமாக தந்துவிடுகிறது....
பறக்கிறேன்... பறந்து கொண்டேயிருக்கிறேன்...
உன் நினைவுகளை மாற்றும் போது இறக்கைகளும் மாறிக் கொண்டேயிருக்கின்றன... நானும் மாறிக் கொண்டிருக்கிறேன்...
உயர உயர பறக்கும் வேளையில் சற்றே திரும்பிப் பார்த்தேன்... உன்னுடனான ஆயிரக்கணக்கான நினைவுகளில் என் ஆயிரக்கணக்கான பிம்பங்கள் பறந்து கொண்டிருப்பதை நானே பார்க்கிறேன்...
ஒவ்வொரு முறையும் உன்னிடம் ஏதோ சொல்ல வேண்டுமென ஏதேதோ பேச ஆரம்பிக்கிறேன்...
சொல்லிக் கொண்டிருக்கும் அந்த ஏதேதோவில் நான் சொல்ல வந்த ஏதோவை ஒளித்து வைத்து ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்கிறேன்...
நான் சொல்லிக் கொண்டிருக்கும் ஏதேதோ-க்களில் இருக்கும் முக்கியமான அந்த ஏதோவை நீ கண்டு கொண்டாலும் எதுவுமே தெரியாதது போல் ஏண்டா நீ இப்படி இருக்கிறாய் என எனோதானோவென என்னை புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறாய்...
நானும் ஒளித்து வைத்த எதோவை திரும்ப எனக்குள்ளாகவே பத்திரப்படுத்தி வைத்துக் கொள்கிறேன்... இன்னொரு நாளில், இன்னொரு சந்தர்ப்பத்தில், உனது இன்னொரு புன்னகையை காண்பதற்காக...