Sunday, September 27, 2015

தாமதம்.

தாமதம் 

நிதானத்தை தருகிறது...
கோபத்தை தாண்டுகிறது...
மௌனத்தை கற்றுத்தருகிறது...
துரோகத்தை துடைத்தெறிகிறது...
குரூர மனத்தை மென்மையாய்
மாற்றி விடுகிறது...
இதெல்லாம்
ஏன் எதற்காக என பல
கேள்விகளை எனக்குள் கேட்கிறது...
மொத்தத்தில் தாமதம்
எல்லாவற்றையும் மேம்படுத்துகிறதே தவிர
ஒரு போதும் பின் நோக்கி
அழைத்துச் சென்றதேயில்லை.

எறும்பு

ஒரு சமயம்
கையில் ஓர் எறும்பு
ஊர்வது போன்றதொரு உணர்வு...
கொஞ்சம் உற்றுப் பார்த்தால்
உணரப்பட்ட இடத்தில் எதுவுமில்லை...
இன்னொரு சமயத்தில்
முதுகில் அதே எறும்பு
ஊர்வது போன்றதொரு உணர்வு...
கண்ணாடி பிம்பத்தில் தலையை
சொடுக்கிப் பார்த்தால்
எதுவுமில்லை...
பிரிதொரு சமயத்தில் கால் பாதத்தில்
அதே எறும்பு ஊர்வதாய்
உணர்ந்தேன்... சட்டென பார்த்தேன்
வழக்கம் போல் எதுவுமில்லை...
பின் அதே எறும்பு உடல்
முழுவதும் ஊர்வதாய் உணரக் கண்டேன்...
இம்முறை அதை பார்க்க
என் மனம் விரும்பவில்லை.
ஏனெனில் எறும்பாகப்பட்டது
அவ்வப்போது என் மூளைக்குள்தான்
ஊர்ந்து சென்று கொண்டிருக்கிறதென
பல தேடல்களுக்கு பின்னால்
படிந்த ஆழமானதொரு
மௌனத்தின் மூலம் அறிந்து கொண்டேன்.

Thursday, September 10, 2015

சொல்வதும் சொல்லக் கூடாததும்

இதை எப்படி
சொல்வதென தெரியவில்லை
ஆனால்
எப்படியாவது
சொல்லியே ஆக வேண்டுமென
சொல்ல முற்படுகிறேன்...
நான் சொன்ன போது
இதை கேட்கும் நிலையில்
இருந்தவன் - இதை எப்படி
கேட்பதென - இறுதியில்
கேட்காமல் விட்டு விட்டான்...
அவன் இதை கேட்டும்
கேட்காதது போல்
விட்டு விட்டான் - என்பது
எனக்குத் தெரிந்தும் - நான்
சொல்லக் கூடாததை
சொல்லுவது போல்
அவனிடம் சொல்லாமல்
விட்டு விட்டேன்...
இன்னமும் இதை மட்டும்
எப்படி சொல்வதென
தெரியவே இல்லை !!!