Thursday, March 19, 2015

பயம் ???

என் பாதையெங்கும்
அங்கங்கே பயத்தின் மேடுகள்
பலரால் பல ரூபத்தில்
எட்டிப் பார்க்கின்றன.

ஐயோ
இது நடக்கவில்லை என்றால்
என்னாகும் ?

ஐயோ
இது நடந்துவிட்டால்
என்னாவது ?

இதில் இவையெதுவும்
எனக்குள் இருந்து வருவதில்லை - அதனால்
அவை ஒரு போதும் எனக்குள்
அனுமதிக்கப்படுவதும் இல்லை...

அது... இது... எது... - என
தொடர்ந்து பயங்களால் என்னை தீண்டும்
முன்னால் உனதொரு பலமான
பலவீனத்தில்-தான் ஒவ்வொரு பயமும்
உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதை
எப்போது புரிந்து கொள்ளப் போகிறாய் !!! 

Wednesday, March 11, 2015

அந்த நேரம் மட்டுமே !!!

எல்லாம் அந்தந்த நேரம்தான்...
சிரித்தது...
மகிழ்ந்தது...
விளையாடியது... 
சண்டை போட்டது...
பின் சேர்ந்தது
இப்படி அணுஅணுவாய்
வாழ்ந்து பின் இறுதியில்
மரணம் வருவது !!!
இப்படி எல்லாம் எல்லாம்
அந்தந்த நேரம் மட்டும்தான்...

The Magic of Your Name !!!

உனது பெயரை எங்காவது
பார்க்க நேரிட்டால்
உள்ளுக்குள் ஒரு பல்ப் எரிகிறது...
இதயத்தில் மென் மின்சாரம்
பரவுகிறது...
உடல் முழுவதும் உன் நினைவின்
அதிர்வில் சிலிர்க்கிறது...
நடப்பதறியாது மனம்
உன் ஞாபகத்தின் வெளியில்
மிதக்கிறது...
ஏதோ ஒன்றை செய்ய வந்தவன்
என்ன செய்வதென தெரியாமல்
செய்வதறியாமல் செய்வினை
செய்யப்பட்டவன் போலாகிறேன்...
மீண்டுமொரு முறை - உனது
பெயரை எனக்கே எனக்கு மட்டும்
கேட்குமாறு ஒவ்வொரு எழுத்தாக
உச்சரித்துக் கொள்கிறேன்...
ஐய்யோ... இன்பமாய்
செத்து பின் உயிர்த்தெழுவது
எதுவென கேட்டால் உன் பெயரை
உச்சரித்துப் பின்பு மீண்டும் நான் எனும்
என் நினைவு திரும்பும்
அந்த நொடியைத்தானடி
சொல்வேன்...

அகப்பேய் !!!

பேய் இருக்கா... இல்லையா ???
தேடிக் கொண்டிருக்கிறேன்...

கடைசிவரை கிடைக்கவில்லை...

அது சரி...

நாய்களிருக்கும் கூட்டத்தில்
எருமையை தேடினால்
மிக அருமையாக
அடையாளம் காணலாம்...

அகத்திலொரு முகமாய்
புறத்திலொரு அகமாய்
முட்டாள்களின் முகாமாய்
அலைந்து கொண்டிருக்கும்
சராசரி பேய்கள் கூட்டத்தில் ஒரு பேயை
மட்டும் தேடினால்
நேரில் காண முடியுமோ என்ன? 

Sunday, March 8, 2015

மீண்டும் நான்

நான்” எனும் தனியொருவன்
வழித்தடத்தில் நிகழ்ந்த
விபத்தொன்றில் அவன் பிளவுபட்டான்
ஒருவன் மறைந்து போய்
இருவரானார்கள்...
பின் வீடு உருவானது...
தெருவானது...
தெரு ஊரானது..
ஊர் நகரானது...
நகர் நாடானது...
நாடு உலகமானது...
உலகம் முழுவதும் இந்த “நான்”
பரவ ஆரம்பித்தான்...
படாத பாடு பட்டான்..
படாத பாடு படுத்திக் கொண்டிருக்கிறான்.
படாத பாடு படுத்துவான்...
யார் யாரோ வருகிறார்கள்... போகிறார்கள்...
இறுதிவரை இந்த “நான்” சிம்மாசனத்தில்
கால் மேல் கால் போட்டு
வீற்றிருப்பான்...

Saturday, March 7, 2015

உதிரும் மண் துகள்கள் !!!

இந்தக் கணத்தில்
ஒன்று தோன்றுகிறது...
இதற்கடுத்த கணத்தில்
மற்றொன்று தோன்றுகிறது...
இந்த ஒன்றுக்கும்
அந்த மற்றொன்றுக்கும்
எந்தவித தொடர்புமில்லை - என
எண்ணி கையில் ஒட்டிக் கொண்ட
மண் துகளை உதிர்த்து விடுவது போல்
நொடிகளை உதிர்த்து விடுகிறேன்...
உதிர்ந்த நொடிகளில்
சிக்கிக் கொண்டன எனது ஞாபகங்கள்...
இனி உதிரப் போகும் நொடிகளில்
பரவி விரவி காத்திருக்க
ஆரம்பிக்கிறது - உதிர்த்து விடப்படும்
ஆயிரமாயிரம் மண் துகள்கள்???

Friday, March 6, 2015

இருளும் ஒளியும்

வெளிச்சத்தை விட
இருளையே நான் அதிகமாக
விரும்புகிறேன்...
இந்த இரவு
இன்னும் எவ்வளவு
தூரம் நீண்டு செல்லும்
என தெரியவில்லை...
ஆனால் அதன் சிறப்பே
மாபெரும் ஒளியை தன்னுள்
எங்கு ஒளித்து வைத்திருக்கிறது
என்பதுதான்...
மீண்டும் எண்ணிப் பார்க்கிறேன்...
ஒலி பரவுகின்ற வெளிச்சத்தை விட
மௌனம் படர்கின்ற இருளில்தான்
நான் என்னை மிகச் சரியாக
அடையாளம் கண்டு கொள்கிறேன்...