Friday, December 6, 2013

மௌனத்தின் இரு பக்கங்கள் !!!

உன் மனதைப் போல
என் மௌனத்திற்கும் 
இரண்டு பக்கங்கள் இருக்கின்றன !

ஒரு பக்கம் உனக்கும் எனக்குமான
சந்திப்பின் புன்னகைகள்... 

மறு பக்கம் நீ இல்லாத போது
உன் நினைவோடு கரையும்
என் கண்ணீர் துளிகள்... 

விளையாட்டுப் பிள்ளை
ஒரு ரூபாய் நாணயத்தை
சுண்டி விளையாடுவது போல் - நீ
என் மௌனத்தை சுட்டு விரலால்
சுண்டி விடுகிறாய்...

ஐயோ... ஐயோ...

அது சுற்றி சுற்றி கடைசியில்
எந்தப் பக்கம் விழப் போகிறதோ
என்றதொரு பயத்தில் என் உயிரை
கையில் பிடித்தபடி காத்திருக்கிறேன்...

ஒத்தையடிப் பாதை ???

இது ஒத்தையடிப் பாதை
திரும்பிப் பார்க்காதே என்று
சொல்கிறார்கள்...

உண்மைதான்...
ஆனால் யார் சொல்வதைக் 
கேட்டிருக்கிறார்கள் - நான் 
அதைக் கேட்பதற்கு... 

ஆனால் 
நான் திரும்பிப் பார்த்த கணம்
நான் நடந்த பாதையின் சுவடே
இருப்பதில்லை என்பதைக் கண்டு கொண்டேன்...

வெற்றிடத்தின் வாசல் எங்கே?

ஏனோ தெரியவில்லை... 

சில காலமாய் மனம் முழுவதும் 
வெறுமை புகுந்து 
விளையாடிக் கொண்டிருக்கிறது... 

முன்பெல்லாம் அதற்கென 
காரணங்கள் இருக்கும்... 

ஆனால் இப்போது காரண காரியமற்ற 
வெற்றிடம் ஒன்று
தானாக எனக்குள் தன்னை
உயிர்ப்பித்துக் கொண்டிருக்கிறது...

இதில் வேடிக்கை என்னவெனில்
அவ்வெற்றிடத்தை என்னால் கூட
நெருங்க முடியவில்லை என்பதுதான்...

எதுவெனத் தெரியாமல் !!!

ஒவ்வொரு முறையும் 
எனக்குப் பிடித்தமான ஒன்று 
என்னை தாண்டிச் 
சென்று கொண்டேயிருக்கிறது... 

எட்டிப் பிடிக்க எத்தனிக்கிறேன்... 
ஆனால்
இந்த இயற்கை என்னை 
பார்த்து புன்னகை பூக்கிறது... 

நான் எதற்காகாக உன்னை தயார்படுத்துகிறேன்
எனத் தெரியாமல் நீ எதற்கோ
ஆசைப் படுகிறாயே என்பது போல்...