Sunday, September 2, 2012
மீண்டும் சொல்கிறேன்...
நீ சிரித்துப் பேசும் போது
நான் சிரிக்க வேண்டும் என்று நினைக்கிறாய்
உன் உணர்வுகள் தக்க சமயத்தில்
அப்படியே மற்றோரால் உள்ளிழுக்கப்பட
வேண்டுமென நினைக்கிறாய்...
வார்த்தைகளை வெளிப்படுத்தாமல்
நீ சொல்ல வருவதை புரிந்து கொள்ள
வேண்டுமென்று எதிர்பார்க்கிறாய்...
அது நடக்காவிட்டால் எரிச்சலை
என் மீது உமிழ்கிறாய்...
என் மீது உமிழப்படும் உனக்கான
ஒவ்வொரு உணர்வும் உண்டாக்கிய
தடயங்கள் எப்போதும் அழியாமல்
என்னுள் உறைந்திருக்கின்றன.
உறையும் ஒவ்வொரு தடயமும்
ஓர் உறைவாளை தனக்குள்
உள் வாங்கியிருக்கின்றன - என்பதை
நான் மட்டும் அறிவேன்
உன் கண்களின் வெப்பம்
அதை பொறுத்துக் கொள்ளும் வரை
உன் வார்த்தைகளின் பாரம்
அதை மனம் தாங்கிக் கொள்ளும் வரை
வாள்கள் அனைத்தும் உறங்கிக் கொண்டிருக்கும்...
எனக்குச் சில காலங்கள்
முன்பாக நீ உயிர்த்திருப்பதால்
என் மௌனத்தை தீண்டிப் பார்க்க
உனக்கு உரிமையிருப்பதாய் - நீ
நினைத்துக் கொண்டிருக்கிறாய்...
மீண்டும் சொல்கிறேன்
கவனித்துக் கொள்..
உன் கண்களின் வெப்பம்
அதை தாங்கிக் கொள்ளும் வரை
உன் வார்த்தைகளின் பாரம்
அதை மனம் தாங்கிக் கொள்ளும் வரை
வாள்கள் அனைத்தும் உறங்கிக் கொண்டிருக்கும்....
... ... ...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment