எதிர்பாராத ஒரு நேரத்தில் இன்றைய பொழுதில்
நடக்கும் ஏதோ ஒரு நிகழ்வு நேற்று போல் இன்று இல்லை என்பதை மிக அழகாக சொல்லி விடுகிறது.
ஆனால் ஒரு போதும் இன்று போல் நாளை இல்லை என்பதை இன்று நடக்கும் எந்த நிகழ்வும் எனக்கு
சொல்வதேயில்லை.
தினசரி வாழ்வு எதையாவது ஒன்றை கற்றுக்
கொடுத்துக் கொண்டேயிருக்கிறது. இன்றைய நாளின் ஓட்டத்தை துவங்கியவுடன் அதன் பாதையில்
யார் யாரை நான் சந்திக்க போகிறேன் என்பதே மிகப் பெரிய புதிராக இருக்கும் நேரத்தில்
அந்த சந்திப்பில் என்ன நடக்கப் போகிறதென்பதை நான் எவ்வாறு முன் கூட்டியே தெரிந்து கொள்ள
முடியும்.
ஒருவேளை அப்படி முன் கூட்டியே தெரிந்து கொள்ளக் கூடிய சக்தி எல்லோருக்கும்
இருந்தால் இந்த உலகத்தில் அடுத்த நிமிட பயணம் என்பது மிகப் பெரிய கேள்விக் குறியாகிப் போய்விடுமோ?
வருவதை வருவது போல் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
போவதை அதன் போக்கில் விட்டு விட வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் ???
ஏதோ ஒன்றின் அதிர்வு ஏதோ ஒன்றின் அழிவுக்கு
வித்திடும். அதே நேரத்தில் ஏதோ ஒன்றின் உருவாக்கத்திற்கும் அது முக்கிய காரணமாகிறது. தினசரி என்னை நோக்கி படையெடுக்கப்படும் ஒவ்வொரு அதிர்வும் எனக்குள் பூகம்பமாக புரண்டு பின் அது மெல்ல மெல்ல ஒரு பூ பூப்பது
போல் பரிணாம வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது.