Monday, August 25, 2014

இருப்பதும் இல்லாததும் !!!

நிறமற்றது எதுவென
நிறமுள்ளவற்றை பார்த்தேன்...
பலமற்றது எதுவென
பலமுள்ளவற்றை பார்த்தேன்...
நிலையற்றது எதுவென
நிலையுள்ளவற்றை பார்த்தேன்
இப்படி
இல்லாததை தேடி
இருப்பதில் அலைகின்றேன்...
இருப்பதை நான் தொலைத்த அதே கணம்
இல்லாததும் தொலைந்து போகும்
நிலை ஏனோ ???

மௌன பேரலை

நான் பேசாமல் இருக்கின்றேன்
என்பது என் மௌனம் அல்ல... 

உள்ளுக்குள் உனக்கான 
ஆயிரம் வார்த்தைகள் தன்னை பயிற்சி 
செய்து பார்த்துக் கொண்டிருக்கின்றன... 

அது என்னவோ 
என்ன மாயமோ தெரியவில்லை
உன்னைப் பார்த்ததும் 
அத்தனை வார்த்தைகளும்
என்னுள் ஓடி ஒளிந்து கொள்கின்றன...

இவற்றுள் தப்பித் தவறி தைரியம் பெற்ற
அந்த மூன்றெழுத்து வார்த்தைகளும்
உன் ஒரே ஒரு பார்வையில்
செயலற்றுப் போகின்றன

- அதன் பின்

உன் ஒரே ஒரு ஒற்றை புன்னகையில்
என் அத்தனை வார்த்தைகளையும் வீழ்த்தி
மீண்டுமொரு மௌன பேரலையை எனக்குள்
உருவாக்கிவிட்டு நகர்கிறாய்...

மின்னலும் மழையும் இடியும்

என் வாழ்வில் நான் பார்த்த
முதல் மழை, முதல் இடி, முதல் மின்னல்
எப்போது? 

யோசித்தால் மழையும் இடியும் மின்னலும்
மனதிற்கு மிக நெருக்கமானவையாகவே
இருக்கின்றன... 

அறிவுக்கு அப்பாற்பட்டு, அடையாளங்களுக்கு
அப்பாற்பட்டு உள்ளார்ந்து நின்று பார்த்தால்
எப்போதும் ஏதோ ஒரு வடிவத்தில்
நான் இங்கு இருந்து கொண்டிருப்பதாகவே
தோன்றுகிறது

நாம் யாவரும் எப்போதும் எந்த நிலையிலும்
உய்த்துணராத ஏதோ ஒரு தொடர்பில்தான் எல்லாம்
நிகழ்ந்து கொண்டிருக்கின்றன...

யாருடனோ பேசுவது போல் !!!

வெகு நேரமாய்
உன்னை பார்ப்பதற்காய்
நின்று கொண்டிருக்கிறேன்...
நீயும் வந்தாய்... - எனக்கெதிரே 
சற்று தள்ளி நின்றாய்...
என்னைப் பார்த்துக் கொண்டே
அங்கே யாருடனோ பேச ஆரம்பித்தாய்...
அவ்வப்போது என்னை தீண்டிய
உன் பார்வையோ - என்னுள்
ஆயிரமாயிரம் மின்வெட்டுக்களை
விட்டு விட்டு வெட்டியது...
சத்தியமாகச் சொல்லடி..
யாருடனோ பேசுவது போல்
என்னிடம் அப்படி என்னதான்
பேசிக் கொண்டிருக்கிறாய்... ???

Sunday, August 24, 2014

எல்லாம் எல்லாமே

பல சமயம்... 
நான் ஒரு உயிராய்... கல்லாய்... 
மரமாய்... செடியாய்... கொடியாய்... 
ஆனால் இப்போது எனக்கு 
மரத்தின் இலையாய் ஒரு அவதாரம்... 

விழுந்தேன்... ஒரு நதியில்... 
மிதந்தேன்... அதன் மடியில்... 
மரணத்திற்கு பின்னால் 
வரும் பயணம் போல் ஆனந்தமாய் மிதக்கிறேன்... 

தண்ணீரில் தவித்து, தத்தளித்து, விக்கித்து
என் மேல் ஏறிய ஒரு எறும்பு
மரணத்தின் பிடியிலிருந்து
தன்னை மீட்டுக் கொள்கிறது.

இலை படகாகும் போது
மனிதன் வானமாகக் கூடாதா என்ன ???

மௌனக்கூடு

கிடைத்தவன்
தப்பித்து விட்டோம் என நினைக்கிறான்
கிடைக்காதவன்
அதிஷ்டமில்லை என நினைக்கிறான்... 
இடைபட்டவன் இன்னும் கொஞ்சம்தான்
என நினைக்கிறான்... 

எது கிடைத்தால் இந்த மனம்
இன்புற்று மாயுமென 
தெரியாத - புரியாத தன்மைதான்
பரவி கிடக்கிறதோ !!!

இதற்கிடையில் மேற்கண்டவாறு
வியாக்கியானம் பேசும்
பற்பல வெங்காயங்கள் வேறு அலைகின்றன...

எனக்கோ இந்த ”மனம் என்றால்
என்ன?” என்பதே இன்னும் புரியவில்லை...

நான்கு சுவருக்குள் அடைந்து கொண்டு
தன்னிறைவடைந்தேன் எனச் சொல்லும்
வேடிக்கைகளை சற்று
நினைத்துப் பார்த்தால்
இந்த மனமென்று எண்ணப்படும்
மௌனக்கூடு ஒன்று வெற்றிடமாகிறது !!!

ஒரே நிலை

உன் மேலுள்ள கோபம்... 
நீ சிந்திய வெறுப்பு... 

இப்படி இன்னபிற... 

அனைத்தும் என் ஒரு துளி
மௌனத்தில் சுக்கு நூறாய் உடைகிறது... 

அந்த மௌனத்தின் அடுத்த நொடியில்
வெளிப்படும் புன்னகையில் கலந்திருக்கிறது
உனக்கான என் எல்லை கடந்ததொரு அன்பு...

பாவம் உன்னை என்ன செய்வது...

இரு வேறு நிலைகளாக
எண்ணப்படுகிற நானும் நீயும்
சில குறிப்பிட்ட
கால இடைவெளிக்குப் பிறகு
ஒரு நிலையாக மாறித்தானே ஆக வேண்டும் !!!

என்னுள் ஒரு பிம்பம்

என்னுள் எனக்கேயான பாதையில்
யாரோ என்னை அழைப்பது
போன்றதொரு பிம்பம்

யாரடா என்பது போல்
அதன் அருகில் செல்ல முற்படுகிறேன்... 

ஆனால் 
அந்த பிம்பம் என்னை விட்டு நகர்கிறது... 

நான் செல்ல செல்ல...
பிம்பம் நகர்ந்து கொண்டேயிருக்கிறது...

யாரென்று தெரிந்து கொள்ள நான் துடிக்கிறேன்...
யாரென்று தெரியாத தன்மையாய் பிம்பம் நகர்கிறது....

இப்படி துடிப்பதும், நகர்வதும்
நடந்து கொண்டேயிருக்கிறது....

பின்பொரு காலத்தில்
துடிப்பது நின்றுவிட்ட பொழுதில்
நகர்வதும் நின்றுவிடுவதாக சொல்லப்படுகிறது...

நான் துடிப்பது நின்றவுடன்
நான் நகர்வதை யான் எப்படி
பார்ப்பேன்?

இருந்தாலும் தொடர்கிறது...
நான் அருகே செல்ல செல்ல
பிம்பம் நகர்ந்து கொண்டேயிருக்கிறது..

அவனும் நானும்

அவனுக்கு எதுவும் தெரிய 
வாய்ப்பில்லை என்றெல்லாம் இல்லை... 

அவனுக்கு எது தேவை... எது தேவையில்லை
என பிரித்து பார்க்கும் பக்குவம் இல்லாமல் இல்லை...

அவனுக்கு ஏன் எப்படி என்ற
கேள்விகள் கேட்க தெரியாமல் இல்லை... 

அவனுக்கு இது அது எது வென
தனித்துப் பார்க்கும் தன்மையில்லாமல் இல்லை...

அவனுக்கு மொழியின் அடுக்குகளில்
வெளிப்படும் அர்த்தங்கள் புரியாதென்பதலாம் இல்லை...

ஆதியும் அந்தமும் என எப்போதும் அவனிருப்பதால்
அவனுக்கு எல்லாம் தெரியுமென்பதாய்
ஏற்படும் இருமாப்பு இருப்பதென்பதெதுவும் இல்லை...

அவனிடம் இருக்கும் ஒரே குறை,
ஒரே பிரச்சனை, ஒரே குழப்பம்... என்னவெனில்

அவனுள் இருக்கும் 

“அவன்” என்பதற்கும் “நான்” என்பதற்கும் 
இடையில் நூலிலையாய் வெளிப்படும்
இடைவெளி என்பதுதான் 
அவனுக்கு இன்றுவரை புரியவில்லை...
ஒரு முறைதான்... 
நினைத்து பார்க்கிறேன்... 
எனக்குள் இருக்கும் என்னை... 
ஒரே முறைதான் நினைத்து பார்க்கிறேன்... 

விடிவதற்குள் மெல்ல மெல்ல 
தொலைந்து போகின்ற இருளை 
போல் நகர்கிறது காலம்... 

வெளிச்சங்கள் யாவும் இருட்டை
விரட்டி விட்டு வெளிபடும் யாவற்றையும்
வெற்றிடமாக்குகின்றன...

எல்லாவற்றையும் நிரப்புகின்ற இருளோ...
புதிர் நிறைந்ததாய்...
பயம் நிறைந்ததாய்...
என்னவென்று புரியாததாய்...
அர்த்தங்கள் மிகுந்ததாய்...
எப்போதும் காட்சியளிக்கின்றன...

இப்போதும் எப்போதும்
நினைத்துக் கொண்டிருப்பேன்...
என் மனதை கவ்விக் கொண்டிருப்பது
வெற்றிடமான வெளிச்சங்களா...
விவேகமான இருளா...

என்னை கேட்டால்
இருளாகவே இருந்துவிட்டு போகட்டும் என்பேன்...
ஏதுமில்லாததாய் இருப்பதற்கு
யாவுமாய் இருப்பதே சாலச்சிறந்ததல்லவா